கருக்கலைத்தல் வழியாக ஒவ்வோர் ஆண்டும் உலகில் 4 கோடியே 20 இலட்சம் உயிர்கள் இழக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆலய மணி ஒன்று, போலந்து நாட்டில் வலம் வருகிறது.
‘பிறக்காதக் குழந்தைகளின் குரல்’ என்ற பெயரில், போலந்து நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் இந்த ஆலய மணியானது, 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 23ம் தேதி, புதன் மறைக்கல்வியுரைக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டதாகும்.
இந்த மணியை திருத்தந்தை ஆசீர்வதித்த வேளையில், ‘உயிர்கள் கருவில் உருவானது முதல், இயற்கை மரணம்வரை அதன் மனித வாழ்வின் மதிப்பை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு இது துணையாக இருக்கும்’ எனக்கூறினார்.
4 அடி விட்டத்தையும், 2000 பவுண்டு எடையையும் கொண்டு, போலந்து நாட்டின் Przemyśl நகரில் உருவாக்கப்பட்ட இந்த வெண்கல ஆலயமணி, திருத்தந்தையின் கைகளால் முதலில் ஒலிக்கப்பட்டது.
தற்போது போலந்தில் தன் பயணத்தை துவக்கியுள்ள இந்த மணி, வாழ்வை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு வலியுறுத்தும் என்று கூறினார், போலந்து தலத்திருஅவை குடும்பப் பணிகளின் தேசிய இயக்குனர், அருள்பணி Przemysław Drąg.
‘கொலை செய்யாதே” என்ற ஐந்தாவது கட்டளையும், “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்” (ஏரே 1:5), என்ற எரேமியா நூல் வார்த்தைகளும் பொறிக்கப்பட்டுள்ள இந்த ஆலயமணிபோல், வேறு ஆலய மணிகளை உருவாக்கித் தருமாறு, ஈக்குவதோர், உக்ரைன் உட்பட பல நாடுகளின், வாழ்வுக்கு ஆதரவான அமைப்புக்கள், விண்ணப்பங்களை விடுத்துள்ளதாக அறிவித்தார், போலந்தின், ‘வாழ்வுக்கு ஆம்’ என்ற அமைப்பின் துணைத் தலைவர் Bogdan Romaniuk.
Source: New feed