போர் மற்றும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்குப் பணியாற்றிவரும், CRS கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயண நாள்கள், மிகவும் விலைமதிப்பற்றவை என்று, அந்நாட்டில் கூறியுள்ளது.
CRS அமைப்பின் ஈராக் பிரதிநிதி Davide Bernocchi அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தையின் செய்திகளை மக்கள் மிகுந்த மகிழ்வுடன் பெற்றுக்கொண்டனர் என்றும், மிகவும் துன்புற்றுள்ள மற்றும், ஆதரவு அதிகம் தேவைப்படும் ஒரு நாட்டின் மீது, உலக சமுதாயத்தின் கவனம் திரும்புவதற்கு விலையேறப்பட்ட வாய்ப்பாகவும் இருந்தது என்றும் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் நெருக்கடி
இன்னும், 12 இலட்சம் ஈராக்கியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர், தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ள ஏறத்தாழ ஐம்பது இலட்சம் பேரை, அப்பகுதியில் ஏற்கனவே இருப்பவர்கள் ஏற்பதற்குத் தயாராக இல்லை போன்ற முக்கிய பிரச்சனைகளையும் அந்நாடு எதிர்கொண்டுள்ளது என்று, Bernocchi அவர்கள் எடுத்துரைத்தார்.
எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம், மக்களின் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கி, பலரை வறுமைக்கு உட்படுத்தியுள்ளது என்றும் உரைத்த Bernocchi அவர்கள், “நீங்கள் அனைவரும் உடன்பிறப்புக்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், ஈராக்கிற்கு சக்திவாய்ந்த செய்தியை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
பல ஆண்டுகள் இன, வகுப்புவாத மற்றும், அரசியல் பிளவுகளால் துன்புற்றுள்ள ஈராக்கிற்கு, இக்காலக்கட்டத்தில், மனித உடன்பிறப்புநிலை என்ற செய்தி, மிக முக்கியமான செய்தி என்றும், Bernocchi அவர்கள் கூறினார்.
ஈராக்கில், கடந்த பல ஆண்டுகளில் ஒவ்வொரு சமுதாயமும், மற்றவரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சுவர்களை எழுப்பியுள்ளவேளை, ஈராக்கை ஒன்றுசேர்ந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, இந்தச் சுவர்களைப் பாலங்களால் நிரப்பவேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பு மிகவும் முக்கியமானது என்றும், Bernocchi அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக, போர் மற்றும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈராக் மக்களுக்கு, CRS அமைப்பு, 2014ம் ஆண்டிலிருந்து உதவியுள்ளது. அம்மக்களின் கல்வி, வாழ்வாதாரம், குடியிருப்பு போன்றவைகளுக்கு உதவியிருப்பதோடு, அந்நாட்டில் நம்பிக்கையை மீள்கட்டமைப்பதற்குப் பணியாற்றிவரும், மதத் தலைவர்கள், குழுமங்கள், மற்றும், இளையோர் குழுக்களுடன் இணைந்தும், இந்த அமைப்பு உழைத்து வருகிறது.
Source: New feed