மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34
அக்காலத்தில் இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.
அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
சிந்தனை :
உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள்.
இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. (எபிரேயர் 10: 32-39).
“இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்கப்படுவர்” என்பார் நம் ஆண்டவர் இயேசு. நம்முடைய நம்பிக்கை வாழ்வில் வரும் இன்னல்கள், இடையூறுகள், துன்பங்கள் இவற்றைக் கண்டு நாம் மனம்தளர்ந்து போகக்கூடாது, மாறாக இறுதிவரைக்கும் நிலைத்து நிற்கவேண்டும். அப்படிப்பட்ட வாழ்வே உண்மையான சாட்சிய வாழ்வு.
ஆகவே, இறுதிவரை நம்முடைய நம்பிக்கையில், கொள்கையில் மனவுறுதியோடும் துணிவோடும் நிலைத்து நிற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறையுரை :
பத்தொன்பாம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த நெல்லை ஜில்லாவிற்கு வந்து ஆன்மீகப் பணியையும் சமூகப் பணியையும் ஒருங்கே செய்தவர் அருட்தந்தை ரேனியஸ் என்பவர். இவர் நெல்லை ஜில்லாவில் பணிசெய்தது பதினெட்டு ஆண்டுகள்தான் என்றாலும், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை திறந்துவைத்து, மக்களுக்கு நல்லதொரு கல்வியை வழங்கினார் என்பது குறிப்படத் தக்கது.
இவருடைய காலத்தில், ஒரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில், ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் இருந்த மாணவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய அப்பா, அம்மாவினுடைய பெயர்களையும் வரிசையாகக் கேட்டுவந்தார். ஒருமாணவன் மட்டும் தன்னுடைய அப்பாவின் பெயர் தெரியாது என்று சொன்னான். இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போன ஆசிரியர் அந்த மாணவனிடத்தில், “அப்பா பெயர் தெரியாமல் பள்ளிக்கூடத்திற்கு வருவதா… மறுநாள் பள்ளிக்கு வருகின்றபோது உன்னுடைய அம்மாவைக் கையோடு கூட்டிக்கொண்டு வா” என்று சொல்லி அனுப்பினார்.
மறுநாள் அந்த மாணவன் பள்ளிக்கு வந்தபோது, கையோடு தன்னுடைய தாயைக் கூட்டிக்கொண்டு வந்தான். அவரிடத்தில் ஆசிரியர், “என்னம்மா! உன்னுடைய மகனிடத்தில் தந்தையின் பெயரைக் கேட்டால், அவன் தெரியாது என்று சொல்கிறானே! என்ன பிரச்சனை?” என்று கேட்டார். அதற்கு அந்த மாணவனின் தாய், “உண்மையில் அவனுக்கு அவனுடைய தந்தையின் பெயர் தெரியாது. ஏனெனில் நான் ஒரு தேவதாசி” என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர், இப்பிரச்சனையை அருட்தந்தை ரேனியசிடம் கொண்டுபோனார்.
இதைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் அருட்தந்தை, தந்தையின் பெயர் தெரியவில்லை என்பதற்காக தேவதாசிகளின் பிள்ளைகளுக்கு கல்வி மறுப்பது நல்லதல்ல, அதே நேரத்தில் அந்த தேவதாசிகளின் குழந்தைகளுடைய பெயர்களுக்கு முன்பாக இனிஷியல் இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல என்று, தேவதாசிகளின் பிள்ளைகள் அவர்களுடைய தாயாரின் பெயரை இனிஷியலாகப் போட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
இதற்காக அருட்தந்தை ரேனியசுக்கு திருஅவைக் கூட்டத்தில், ‘எப்படி தேவதாசிகளின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கலாம், அப்படியே அவர்களைச் சேர்த்தாலும் தாயின் பெயரை எப்படி இனிஷியலாகப் போடலாம்’ என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதைக் கண்டு அவர் பயந்துவிடாமலும், தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்காமலும் மிகத் துணிச்சலாகச் சொன்னார். “சமூகக் கட்டமைப்பினால் தேவதாசிகளாய் போன பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதிலும், அந்தப் பெண்களின் பெயர்களையே அவர்களுடைய குழந்தைகளின் பெயர்களுக்கு இனிஷியலாகப் போடுவதிலும் என்ன தவறிருக்கின்றது?, அவர்களும் கடவுளுடைய பிள்ளைகள்தானே”.
அருட்தந்தை ரேனியஸ் பேசிய பேச்சுக்கு யாரும் மறுபேச்சுப் பேசவில்லை. அன்றுமுதலே தேவதாசிகளுடைய பிள்ளைகள் முறையான கல்விபெற தடையில்லா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனக்கு வந்த எதிர்ப்புகளைக் கண்டு பயந்து அருட்தந்தை ரேனியஸ் மட்டும் தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கி இருந்தால், அக்காலத்தில் நெல்லையைச் சுற்றியிருந்த பல தேவதாசிகளுடைய குழந்தைகள் கல்விகற்க முடியாமலே போயிருக்கும். அன்றைக்கு அவர் எடுத்த மிகத் துணிச்சலான முடிவினால்தான், இன்றைக்கும் அவர் மக்களுடைய மனங்களில் நிறைந்து நிற்கின்றார்.
வெற்றியாளர் பின்வாங்குவதில்லை, பின்வாங்குகின்றவர் வெற்றியாளர் ஆவதில்லை
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு” என்று எழுதுகின்றார். இதைக் குறித்து நாம் இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய எபிரேயர்கள்/ யூதர்கள் ஆட்சியாளர்களால் பல்வேறு வகையில் இன்னுலுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டார்கள். இதற்குப் பயந்து ஒருசிலர் கிறிஸ்துவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை துறந்துவிட்டு முந்தைய நிலைக்குத் திரும்பினார்கள். இதைக் கண்டுதான் ஆசிரியர், “உங்களிடம் இருக்கும் துணிவை விட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு என்கின்றார். ஆம், நாம் கிறிஸ்துவின் மீது உண்மையான பற்றுக்கொண்டு, அவரில் இறுதிவரைக்கும் துணிவோடு நிலைத்திருந்தால் அவர் நமகுக் கைம்மாறு தருவார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
Source: New feed