பாப்பிறை அறிவியல் கலைக்கழகம், ஆற்றிவரும் பணிகளுக்காக, குறிப்பாக, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், தன் ஆய்வுகளை, இந்த பூமிக்கோளம் மற்றும் அதில் வாழ்வோரின் நலனுக்காக அர்ப்பணித்து பணியாற்றுவதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கலைக்கழகத்தினருக்கு தன் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.
அக்டோபர் 7ம் தேதி இப்புதன் முதல் 9, இவ்வெள்ளி முடிய, பாப்பிறை அறிவியல் கலைக்கழகம், வத்திக்கானில் நடத்திவரும் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
SARS, மற்றும் COVID-19 போன்ற கொள்ளைநோய்களுக்கு எதிராக மனிதகுலம் வெற்றிகாண்பதற்குத் தேவையான யுக்திகளை, இவ்வாண்டு கூட்டத்தில் கலந்துரையாட, உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளை வரவேற்பதோடு, அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒன்றுபடாமல்…
“அனைவரும் உடன்பிறந்தோர்” (Fratelli tutti) என்ற பெயரில் வெளியிட்ட திருமடலில், ‘தொடர்புகளில் நாம் உச்சநிலையை அடைந்திருந்தாலும், நம் அனைவரையும் பாதிக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நாம் இன்னும் ஒன்றுபடாமல் சிதறுண்டிருக்கிறோம்’ என்று கூறிய சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் நினைவுறுத்தியுள்ளார்.
உடல் அளவில், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வழிகளையும், நோய் தடுப்பு மருத்துவ முறைகளையும் சிந்திக்கும் வேளையில், இந்தக் கொள்ளைநோய் உருவாக்கியுள்ள சமுதாய, பொருளாதார மற்றும் ஆன்மீக தாக்கங்களையும் எதிர்கொள்ளும் வழிகளை நாம் கண்டறிவது அவசியம் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல் சீரழிவு என்ற பின்னணியில் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை நாம் சந்தித்துவந்த சூழலில், இந்தக் கொள்ளைநோய் வெடித்துக் கிளம்பியது, சுற்றுச்சூழல் குறித்த மனமாற்றம் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தியுள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
Source: New feed