
திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரம்
புதன்கிழமை
திருப்பாடல் 103: 1-2, 3-4, 8, 10 (1a)
“என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!”
உயிருள்ள நாள்வரை…
ஆண்டவர்மீது மிகுந்த பற்றுக்கொண்ட பெரியவர் ஒருவர் இருந்தார். திடீரென அவருக்கு வாயில் புற்றுநோய் ஏற்பட்டதால், அவரது நாவினை அகற்றினால்தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர் சொன்னார்.
இச்செய்தியைக் கேட்ட பெரியவர் பெரிதும் வருந்தினார். “உறுதியாகச் சொல்லுங்கள், என்னுடைய நாவினை அகற்றினால்தான் நான் உயிர் வாழ முடியுமா?” என்று பெரியவர் மருத்துவரிடம் கேட்டதற்கு, அவர், “ஆமாம்” என்று தலையாட்டினார் மருத்துவர். உடனே பெரியவர் மருத்துவரிடம், “அப்படியானால், கடைசியாக ஒரே ஒரு பாடலை மட்டும் நான் பாடிக்கொள்ளட்டுமா? என்று பெரியவர் கேட்டார். “தாராளாமாகப் பாடிக் கொள்ளுங்கள்” என்று மருத்துவர் சொல்லிவிட்டு, ‘என்ன பாடலைப் பாடப்போகிறார்?’ என நினைத்துக்கொண்டு, அவரையே பார்த்தார்.
அப்போது பெரியவர், ‘உயிருள்ள வரை நான் இறைவனை பாடுவேன்’ என்ற பாடலை மனமுருகப் பாடினார். அதைக் கேட்டு மருத்துவர் மெய்ம்மறந்து நின்றார்.
தன்னால் இனிமேல் பேசவே முடியாது என்ற நிலையில், இறைவனைப் போற்றிப் புகழ்ந்த இந்தப் பெரியவர் நமக்கெல்லாம் ஒரு பெரிய முன்மாதிரி. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, ஆண்டவரைப் போற்றிப் பாடச் சொல்கின்றார். எதற்காக நாம் ஆண்டவரைப் போற்றவேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு” என்ற இறைவார்த்தையோடு தொடங்கி, “அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்” என்ற இறைவார்த்தையோடு முடிவதுதான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 103.
இத்திருப்பாடலைப் பாடிய தாவீது முதலில் தன்னிடமிருந்து தொடங்கினாலும், பின்னர் அனைவரும் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றார். ஆண்டவரைப் போற்றவேண்டும் என்ற அழைப்பினை விடுக்கும் தாவீது, எதற்காக அவரைப் போற்றவேண்டும் என்ற காரணத்தையும் குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்; அவர் நம் பாவங்களுக்கேற்ப நடத்துவதில்லை என்று சொல்லிவிட்டு, இதற்காக நாம் ஆண்டவரைப் போற்றவேண்டும் என்கிறார் தாவீது.
தாவீது, ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்த்தார். அதனால்தான் அவர் இப்படிச் சொல்கின்றார். நாமும் கடவுளின் பேரன்பை உணர்ந்தவர்களாய் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
சிந்தனைக்கு:
அன்பிலும் ஆற்றலிலும் ஆண்டவருக்கு நிகர் யாருமில்லை.
உயிருள்ள வரை உன்னதரைப் பாடிக் கொண்டே இருப்போம்.
கடவுளின் மன்னிப்பையும் அன்பையும் உணர்ந்திருக்கும் நாம் அவற்றை மற்றவருக்கும் வழங்குவோம்.
Source: New feed