முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உணவு நெருக்கடி உருவாகியுள்ளதால், கோவிட்-19 கொள்ளைநோயால் இறப்பவர்களைவிட, உணவுப்பற்றாக் குறையால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கிறது, Oxfam அமைப்பு.
ஏழ்மையை ஒழிக்க 90க்கும் மேற்பட்ட நாடுகளில் உழைத்துவரும் 20 நிறுவனங்களை கொண்ட இந்த Oxfam கூட்டமைப்பு, இந்த ஆண்டு இறுதியில், உணவுப்பற்றாக்குறையால் ஒவ்வொரு நாளும் 12,000 பேர் வரை உயிரிழக்கும் ஆபத்து உள்ளது என தெரிவிக்கிறது.
கோவிட்-19 கொள்ளைநோயால் உயிரிழந்தவர்களைவிட, இந்நோய் உருவாக்கியுள்ள உணவு நெருக்கடியால் உயிரிழக்க உள்ளவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிது என உரைக்கும் இவ்வமைப்பு, ஏற்கனவே கணிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட, மேலும் 13 கோடியே 20 இலட்சம் பேர் உணவுப்பற்றாக் குறையால் பாதிக்கப்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்த கொள்ளைநோயின் காரணமாக, உணவு விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது, தேசிய பொருளாதாரங்கள் சரிந்துள்ளன, மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது, போன்றவைகளால் ஏழ்மை அதிகரித்துள்ளதாகவும் Oxfam அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
பணக்காரர்கள் தொடர்ந்து சொத்துக்களை குவித்துவருவது, ஏழைகள் உண்ண உணவின்றி வாடுவது என்ற அநீதியான சமூக இடைவெளியை இந்த கோவிட் கொள்ளைநோய் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது எனக்கூறும் இந்த அமைப்பு, இன்றைய விளைவுகளின் தொடர்ச்சி, அதாவது, ஏழ்மை, அடுத்த பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கிறது.
போதிய சத்துணவின்றி வாடிய மக்களின் எண்ணிக்கை, கோவிட் கொள்ளை நோய் பரவலுக்கு முன்னர் 84 கோடியே 10 இலட்சமாக இருந்தது என்றும், இந்த எண்ணிக்கை, 2030ம் ஆண்டில் 90 கோடியே 90 இலட்சமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது எனவும் தெரிவிக்கிறது, Oxfam அமைப்பு.
இதற்கிடையே, நலவாழ்விலும், உணவுபற்றாக்குறையாலும் இன்று உருவாகியுள்ள நெருக்கடிகள் குறித்து, அடுத்த நூறு ஆண்டுகளுக்கு மேல் இவ்வுலகம் பேசிக்கொண்டிருக்கும் என்றும், இன்றைய உணவு நெருக்கடியால், அரசியல் போராட்டங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், பல அரசு சாரா அமைப்புகள் கவலையை வெளியிட்டுள்ளன.
Source: New feed