இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25
அக்காலத்தில்
இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.
பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
உங்கள் நடுவே செயல்படுகிறது இறையாட்சி!”
நிகழ்வு
மகாகவி பாரதியார், புதுச்சேரி சென்றிருந்த நேரம் குள்ளச்சாமி என்பவரைச் சந்தித்தார். குள்ளச்சாமியைக் குறித்துப் பாரதியார் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். இப்பொழுது பாரதியார் அவரை நேரில் சந்தித்ததால், அவருக்குள் ஓர் இனம்புரியாத இன்பம் ஏற்பட்டது.
“ஐயனே! நீர் யார்? மக்கள் உம்மை அறிஞர் என்றும், பித்தன் என்றும் சொல்கின்றார்களே…! உண்மையில் நீர் யார்?” என்று பாரதியார் அவரை இறுகப் பிடித்துக் கொண்டு, கேள்விகளாய்க் கேட்டார். குள்ளச்சாமியோ பாரதியாரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, அவரைவிட்டு விலக நினைத்தார். பாராதியார் அவரை விடாமல், முன்பு கேட்ட அதே கேள்விகளைக் கேட்டார்.
அப்பொழுது குள்ளச்சாமி அருகே இருந்த ஒரு குட்டிச் சுவரைச் சுட்டிக்காட்டினார். பின்னர் மேலே தெரிந்த கதிரவனையும், அது கீழே இருந்த கிணற்றுக்குள் பட்டுப் பிரதிபலிப்பதையும் சுட்டிக்காட்டினார். இதெல்லாம் பாரதியார் ஒன்றும் புரியாமல் பார்த்தார். உடனே குள்ளச்சாமி அவரிடம், “மேலே தெரிகின்ற கதிரவன் கீழே உள்ள கிணற்றில் தெரிகின்றது. அதுபோன்றுதான் மேலே உள்ள கடவுள் கீழே உள்ள ஒவ்வொரு மனிதரிலும் இருக்கின்றான். இந்த உண்மையை அறியவில்லை நீயும் குட்டிச் சுவர்தான்” என்று சொல்லிவிட்டு, வேகமாக ஓடி மறைந்தார்.
ஆம், மேலே உள்ள கதிரவன் கீழே உள்ள கிணற்றில் தெரிவது போன்று, கடவுள் நம் ஒவ்வொருவரிலும் இருக்கின்றார். அவர் மகனாம் இயேசு கிறிஸ்து தொடங்கிய இறையாட்சி நம் நடுவே, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு, “இறையாட்சி நம் நடுவே செயல்படுகின்றது” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறையாட்சி எப்போது வரும்?
யூதர்களுடைய கனவெல்லாம் இறையாட்சி அல்லது மெசியாவின் ஆட்சி எப்பொழுது வரும் என்பதாகவே இருந்தது. காரணம், அவர்கள் காலம் முழுவதும் யாராவது ஒருவரிடம் அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் அவர்களிடத்தில் மெசியாவைப் பற்றிய கனவு துளிர்த்தது. மட்டுமல்லாமல், மெசியா ஒருநாள் வருவார், அவர் எதிரிகளை வெற்றிகொண்டு, எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு எல்லாரையும் ஆட்சி செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இன்றைய நற்செய்தியில் பரிசேயர் இயேசுவிடம், “இறையாட்சி எப்போது வரும்?” என்று கேட்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்
இறையாட்சி நம் நடுவே
“இறையாட்சி எப்போது வரும்?” என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அவர்களிடம், “இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகின்றது” என்று கூறுகின்றார். இயேசு பரிசேயருக்கு அளித்த பதிலை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம்.
‘இறையாட்சி எப்போது வரும் நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்களே…! அது என் வழியாய் ஏற்கெனவே வந்துவிட்டது! நீங்கள்தான் அதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்!’ என்று இயேசு அவர்களிடம் சொல்வதாக ஒருவிதத்தில் புரிந்துகொள்ளலாம். ஆம், மெசியா அல்லது இறையாட்சி வருகின்றபொழுது கால் ஊனமுற்றோர் எழுந்து நடப்பர்; வாய் பேசாதோர் பேசுவர் என்று சொல்லப்பட்டிருந்தது (எசா 35:6). இயேசுவின் வழியாக அவையெல்லாம் நடந்தன; ஆனால், பரிசேயர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இறையாட்சி எப்போது வரும் என்ற கேள்விக்கு இயேசு, “இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது” என்று கூறுகின்றார்.
அடுத்ததாக, இயேசு “இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகின்றது” என்று சொல்வதை அன்பு, இரக்கம், மன்னிப்பு, பொறுமை போன்ற விழுமியங்களின்படி நடக்கின்றபொழுது, இறையாட்சி நம் நடுவே செயல்படும் என்று புரிந்துகொள்ளலாம். அப்படியானால், இறையாட்சி இம்மண்ணில் வர, வெறுமென நாம் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், இறையாட்சியின் விழுமியங்களின் வாழ நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாம், இறையாட்சி இம்மண்ணில் மலர, நம் நடுவே செயல்பட, அதன் விழுமியங்களின் படி நடக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும்’ என்று வேண்டுவார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். ஆகையால், நாம் பகைமை உள்ள இடத்தில் அன்பையும், கயமை உள்ள இடத்தில் மன்னிப்பையும் விதைத்து, இறையாட்சி நம் நடுவே செயல்பட ஒரு கருவியை இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed