புனிதர் என்பவர் யார்?
புனிதர், வானதூதரைப் போன்று விண்ணகத்திலிருந்து தோன்றியவர் அல்லர். மாறாக அவர் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து தோன்றியவர்; சாதாரண மனிதர். அப்படியிருந்தாலும் தன்னுடைய வாழ்வால், பணியால் புனிதராக உயர்ந்தவர். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம். ஆம், இன்றைய நாளில் திருஅவை புனிதர் அனைவர் (#All_Saints_Day) பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.
ஏன் புனிதர் அனைவர் பெருவிழா?
இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்த புனிதர்களின் எண்ணிக்கை வெறும் 365 மட்டுமல்ல; ஏராளமான புனிதர்கள் இருக்கிறார்கள். திருவெளிப்பாடு நூலில், “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள்” (திவெ 7: 9) என்று வாசிக்கின்றோம். ஆகவே அவர்களையெல்லாம் நாம் நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருஅவை ஒருநாளை ஒதுக்கி, அவர்களைச் சிறப்பு செய்கிறது.
முதலில் புனிதர் அனைவர் பெருவிழா தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
வரலாற்றுப் பின்னணி:
இப்பெருவிழா கொண்டாடப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது, நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்த மதத்தைப் பின்பற்றியதற்காக மறைச்சாட்சிகளாக உயிர்நீத்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாப்பட்டதற்கான ஒரு சில குறிப்புகள் இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஆனாலும் அது சிறிய அளவில்தான் இருக்கின்றது. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த திருத்தந்தை நான்காம் போனிப்பாஸ்தான் (608 -615) உரோமை நகரில் இருந்த ‘பந்தேயோன்’ என்று அழைக்கப்படுகின்ற அனைத்துக் கடவுள்களின் கோயிலை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் கிறிஸ்துவுக்காக மறைச்சாட்சிகளாக உயிர்நீத்தவர்களின் நினைவாகக் கோயில் ஒன்று எழுப்பினார். அன்றிலிருந்துதான் புனிதர் அனைவர் விழா கொண்டாடப்படத் தொடங்கியது.
கி.பி 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. இப்படிதான் புனிதர் அனைவர் பெருவிழா நவம்பர் திங்கள் ஒன்றாம் நாள் கொண்டாடும் நிலை ஏற்பட்டது.
இப்போது இப் பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
1. புனிதர்களின் எடுத்துகாட்டான வாழ்வை நினைவுகூரவேண்டும்:
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 13:7 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.” ஆம், இன்றைய நாளில் நாம் அவர்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும். இது நாம் செய்ய வேண்டிய தலையாய செயல்.
2. புனிதர்கள் நமக்காகப் பரிந்துபேசுகிறார்கள்:
இரண்டாவதாக புனிதர்கள் எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு, எப்போதும் நமக்காக பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். ஆகவே நாம் அதற்காக இந்த நாளில் சிறப்பாக இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
3. நாமும் புனிதமான வாழ்க்கை வாழவேண்டும்:
புனித அகுஸ்தின் இவ்வாறு கூறுவார், “அவனும் அவளும் புனிதராக, புனிதையாக மாறும்போது, ஏன் உன்னால் முடியாது?” ஆம், நம்மாலும் புனித நிலையை அடையலாம். அதற்கான வழிமுறைகளை இயேசு கூறுகின்றார்.
மலைப்பொழிவில் இயேசு எட்டு விதமான பேறுபெற்றோரைப் பற்றிப் பேசுகின்றார். நாம் ஏழையரின் உள்ளம் கொண்டவராக, இயேசுவுக்காகத் துயருறுவோராக, கனிவுடையோராக… இருக்கின்றபோது நம்மாலும் புனித நிலையை அடையலாம் நாம் இயேசு குறிப்பிடுகின்ற வழிமுறைகளின்படி வாழ்கின்றோமா? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஓர் ஆசிரியரிடம் பாடம் கற்ற முன்னாள் மாணவன் ஒருவன் அந்த ஆசிரியரைச் சந்திக்கச் சென்றான். அவர் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஒரு சாதாரண குடிசையில் வாழ்ந்துவந்தார். இதைப் பார்த்த மாணவனுக்கு வியப்பாய் இருந்தது “எவ்வளவு பெரிய ஆசிரியர் நீங்கள்! எத்தனையோ மனிதர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றியவர்கள் நீங்கள்! அப்படிப்பட்ட நீங்கள் ஒரு சாதாரண குடிசையில் வாழ்வதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “இந்த உலகத்தில் நான் ஒரு பயணிதான்” என்றார்.
பின்னர் அவர் மேலே சுட்டிக்காட்டி, “விண்ணகம் என்னுடைய – நம்முடைய – நிலையான வீடு. அங்கே வாழ்வதற்குத்தான் நான் என்னுடைய செல்வத்தை எல்லாம் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
ஆம், இந்த மண்ணுலகில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நாம் செய்யும் உதவிகள் யாவும் விண்ணுலகில் சேர்க்கும் செல்வமாகும். அப்படிப்பட்ட வாழ்வு வாழும்போது நாமும் புனிதர்கள் ஆவோம்!
ஆகவே, புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி நாமும் புனிதர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed