தவக்காலம் முதல் வாரம்
செவ்வாய்க்கிழமை
மத்தேயு 6: 7-10
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்…
நிகழ்வு
ஒரு சமயம் இளைஞர்கள் சிலர், கடலுக்கு நடுவில் இருந்த ஒரு தீவுக்குச் செல்வதற்காக கடற்கரையோரமாய் நின்றுகொண்டிருந்த ஒரு படகோட்டியிடம் வந்து, தங்களுடைய விருப்பத்தைச் சொன்னார்கள். அவரோ அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு, கடற்கரை மணலில் மண்டியிட்டு இறைவனை வழிபடத் தொடங்கினார்.
அவர் இவ்வாறு செய்வததைப் பார்த்த இளைஞர்கள் “காற்றில்லை… கடல் அமைதியாக இருக்கிறது… பிறகு எதற்கு இவர் இப்படி வேண்டிக்கிறார்” என்று கேலி செய்தார்கள். படகோட்டி அவர்கள் பேசிய எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், அவர்களைப் படகில் ஏற்றிக்கொண்டு, இயக்கத் தொடங்கினார். சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது… இளைஞர்களோ இறைவனை நோக்கி உருக்கமாக வேண்டத் தொடங்கினார்கள். படகோட்டி அந்நேரத்தில் இறைவனிடம் வேண்டாமல், படகை மிகவும் எச்சரிக்கையாய் இயக்கி, கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்.
கரை இறங்கியதும் இளைஞர்கள் படகோட்டியைப் பார்த்து, “ஆபத்து என்றதும் நாங்கள் இறைவனை நோக்கி வேண்டியபோது, நீங்கள் மட்டும் ஏன் எங்களோடு சேர்ந்து இறைவனை வேண்டவில்லை” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆபத்து வேளையில் உங்களைப் போன்று நானும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தால் படகை யார் இயக்குவது?” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசத் தொடங்கினார், “ஆபத்து வேளையில் பதற்றத்தோடு வேண்டுவது இறைவேண்டல் இல்லை. அதற்குப் பெயர் சந்தர்ப்பவாதம்… எந்த வேளையில் வேண்டினாலும் உள்ளார்ந்த விதமாய் வேண்டவேண்டும். அதுதான் உண்மையான இறைவேண்டல்.” படகோட்டி சொன்ன வார்த்தைகளை நெஞ்சத்தில் நிறுத்தியவர்களாய் அந்த இளைஞர்கள் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, இல்லம் திரும்பினார்கள்.
ஆபத்துக்கு மட்டும் இறைவனை வேண்டுவது இறைவேண்டலாக இருக்காது, உள்ளார்ந்த விதமாய் செய்யப்படும் இறைவேண்டலே, உண்மையான இறைவேண்டல் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத்தரும் இயேசு
நற்செய்தி வாசகத்தில் இயேசு, தன்னுடைய சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத் தருகின்றார். அவர் தன்னுடைய சீடர்களுக்கு இறைவனின் வேண்டுவதற்குக் கற்றுத்தர முக்கியமான ஒரு காரணம் இருந்தது. அது என்னவெனில், யூதர்கள் இறைவேண்டல் என்ற பெயரில் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு, மக்கள் பார்க்கவேண்டும் என்று உரக்கக் கத்தி வேண்டினார்கள். இப்படிப்பட்ட பழக்கம் முதலில் புறவினத்தாரிடம் இருந்தது (1 அர 18:26) அதை அப்படியே எடுத்துக்கொண்ட யூதர்கள், அவர்களைப் போன்று கத்தி இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு வேண்டுவதற்குக் கற்றுத் தருகின்றார்.
இயேசு தன்னுடைய சீடர்கள் வேண்டக் கற்றுக்கொடுத்ததும் அதைத் தொடர்ந்து அவர் கற்றுக்கொடுத்த இறைவேண்டலும் (விண்ணுலகிலிருக்கின்ற எங்கள் தந்தையே என்ற இறைவேண்டல்) நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவை என்ன என்று இப்போது பார்ப்போம்.
இறைவேண்டல், உள்ளார்ந்தவிதமாகவும் உண்மையாகவும் இருக்கவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டுவதற்கு கற்றுத்தருவதற்கு முன்பாகச் சொல்கின்ற வார்த்தைகள், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்றவேண்டும்” என்பதாகும். இறைவேண்டல் என்பது யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவோ அல்லது பாராட்டைப் பெறுவதற்காகவோ செய்யப்படக்கூடாது என்பதில் இயேசு மிகவும் கவனமாக இருந்தார். எனவேதான் அவர் வெளிவேடத்தனமான வேண்டுதல் (மத் 6:5) அல்ல, உள்ளார்ந்த வேண்டுதலே (மத் 26:36-46) உண்மையான வேண்டுதல் என்கின்றார்
இறைவேண்டல், கடவுள் திருவுளத்திற்கு ஏற்றார்போல் இருக்கவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த இறைவேண்டலில் வருகின்ற வார்த்தைகள் யாவும், தந்தைக் கடவுளையும் பொதுநலத்தையும் முன்னிலைப்படுத்துவதாக இருக்கின்றன. இயேசு கற்றுத்தரும் இறைவேண்டலில் எங்கினும் ‘நான்’, ‘எனது’ என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை. ‘எங்கள்’ என்ற வார்த்தைதான் அதிகமான இடம்பெறுகின்றது. இதன்மூலம் நாம் இறைவனின் திருவுளத்தையும் பொதுநலத்தையும் நாடுகின்றபோது, இறைவன் நம்முடைய நலத்தைப் பார்த்துக்கொள்வார் என்பது உறுதியாகின்றது. ஏனெனில் நம் இறைவன், நாம் கேட்கும் முன்பே நம் தேவைகளை அறிந்து வைத்திருக்கின்றார் (மத் 6:8).
இறைவேண்டல், மன்னிக்கும் மனதோடு இருக்கவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களுக்கு, இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத்தரும்போது முக்கியமான ஒரு கருத்தினை மனதில் வைத்து வேண்டச் சொல்கின்றார். அதுதான் மன்னிப்பு என்பதாகும். அடுத்தவரின் குற்றத்தை மன்னிக்கின்றபோதுதான் இறைவன் நம் குற்றத்தையும் மன்னிப்பார் என்று சொல்லும் இயேசு, மன்னிக்கும் மனது எவ்வளவு இன்றையாமையாதது என்பதை எடுத்துரைக்கின்றார்.
சிந்தனை
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த ‘விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே’ என்ற இறைவேண்டலை ஒவ்வொருநாளும் எத்தனையோ முறை நாம் சொல்கின்றோம். ஆனால், அதை உள்ளார்ந்த விதமாய்ச் சொல்கின்றோமா? என்பது கேள்விக்குறி. எனவே, நாம் உள்ளார்ந்த விதமாய் இறைவனிடம் வேண்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed