தவக்காலம் முதல் வாரம்
சனிக்கிழமை
மத்தேயு 5: 43-48
நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்!
நிகழ்வு
காந்தியடிகள் இருந்த சபர்மதி ஆசிரமத்தில், ஒருநாள் இரவு திருடன் புகுந்து, அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களைத் திருட முயன்றான். ஆனால், அவன் எதிர்பாராத விதமாக அங்கிருந்த காவலர்களிடம் மாட்டிக்கொள்ள, அவர்கள் அவனை மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்தனர். மறுநாள் காலையில், இறைவழிபாடு முடித்துவிட்டு வந்த காந்தியடிகளிடம் இரவு நடந்ததையெல்லாம் சொன்னார்கள். உடனே அவர் அவர்களிடம், “அவனுக்குக் காலை உணவு கொடுத்தீர்களா?” என்றார். “திருட வந்தவனுக்குக் காலை உணவா?” என்று அவர்கள் இழுக்க, “ஏன் திருடனுக்கு வயிறு இருக்காதா? அவனுக்குப் பசி எடுக்காதா?” என்றார் காந்தியடிகள். உடனே அவர்கள் அவனுக்குக் காலை உணவு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
திருட வந்தவனுக்கும் நல்லது செய்ய நினைத்த அந்த நல்ல மனம்தான் காந்தியடிகளை மற்ற எல்லாரிலிருந்தும் அவரைத் தனித்துத் தெரிய வைத்தது. நன்மை செய்வதருக்கு மட்டுமல்ல, தீமை செய்தவருக்கும் நன்மை செய்யவேண்டும். அன்பு செய்தவரை மட்டுமல்ல, பகைவரையும் அன்பு செய்யவேண்டும். அதுதான் உயர்ந்த நெறி. அப்படிப்பட்ட நெறியைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் மக்களுக்குப் போதிக்கின்றார்.
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்
இயேசு தன்னுடைய மலைப்பொழிவின் போது, ஆறுவகையான பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு புதிய அர்த்தத்தைத் தருகின்றார். அவ்வாறு அவர் புது அர்த்தம் தரும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைதான் ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயா’ என்ற கட்டளையாகும்.
யூதர்கள் தங்கள் இனத்தாரைத்தான் அன்பு செய்தார்கள். பகைவர்களான புறவினத்து மக்களை வெறுத்து ஒதுக்கிறார்கள். ஏன் அவர்களை நாயினும் கீழாகக் கருதினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு அவர்களிடம், “உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்” என்று புதிய கட்டளையைத் தருகின்றார். இக்கட்டளை மூலம் பகைவர்கள் யார் யார் என்பதையும் அடுத்திருப்பவர் யார் என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகின்றார். முதலில் பகைவர்கள் யார் என்பதற்கு அவர் கொடுக்கின்ற வரையறையைப் பார்ப்போம். பகைவர்கள் என்றால், ஓயாமல் நம்மோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பவர் மட்டுமல்ல, நம்மைச் சபிப்பவரையும் துன்புருவோரையும் சுரண்டுவோரையும் பகைவர் என்றே வரையறுகின்றார; இப்படிப்பட்டவர்களிடம் அன்புகூரவேண்டும் என்றும் கூறுகின்றார்.
அடுத்ததாக, அடுத்திருப்பவர் என்பதற்கு அவர் கொடுக்கின்ற விளக்கத்தைப் பார்ப்போம். யூதர்களைப் பொறுத்தளவில் அடுத்திருப்பவர் என்றால், அவர்களுடைய சொந்த இனத்தவர். ஆனால், இயேசு தேவையில் உள்ள எவரும் அடுத்திருப்பவர்தான் என்பதை நல்ல சமாரியன் உவமையின் வழியாக மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். இவ்வாறு இயேசு, தன் சொந்த இனத்தவரை மட்டுமல்ல, எல்லா இனத்தவரையும், ஏன் வெறுப்பவர், சபிப்பவர், துன்புறுத்துபவர், தீங்கு நினைப்பவர், சுரண்டுபவர் என எல்லாரையும் அன்பு செய்யச் சொல்கின்றார். இப்படி அன்பு செய்வதனால் மட்டுமே இம்மண்ணுலகில் இறையாட்சியானது மலரும் என்பதையும் அவர் நினைவூட்டுகின்றார்.
பகைவரிடம் அன்பு கூர்வதால் என்ன நடக்கும்
பகைவர்மீது அன்பு கூரச்சொல்லும் இயேசு, பகைவர்மீது அன்பு கூர்வதனால், என்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவாக விளக்குகின்றார். பகைவர் மீது அன்புகூர்வதனால் கடவுளின் மக்களாகும் பேறு ஒருவருக்குக் கிடைகின்றது. ஏனென்றால், கடவுள் கதிரவனைப் போன்று, மழையைப் போன்று எந்தவொரு பாடுபாடும் பார்க்காமல் எல்லார்மீதும் அன்புகூர்கின்றவர். ஒருவன் தீயவன் என்பதற்காகவோ, நேர்மையற்றவன் என்பதற்காகவோ அவன்மீது மழை பெய்யாமலோ, கதிரவன் உதிக்காமலோ இல்லை. மாறாக, எல்லார்மீதும் கதிரவன் உதிக்கிறது, எல்லார்மீதும் மழை பெய்கின்றது. அதுபோன்றுதான் கடவுளும். அவர் எல்லார்மீதும் அன்புகூர்கின்றார். அந்த அடிப்படையில் ஒருவர் பகைவர்மீது அன்புகூர்ந்தால், அவர் கடவுளின் மகனாக/மகளாக மாறுகின்றார்.
அடுத்ததாக ஒருவர் பகைவர்மீது அன்புகூர்வதனால், அவர் மற்றவரை விடவும் சிறந்தவராகவும் உயர்ந்தவராகவும் மாறுகின்றார். எப்படியென்றால், அன்பு செலுத்துவோர்மீது அன்பு செலுத்துவது புறவினத்தார் (!) இயல்பு. பகைவர் மீது அன்பு செலுத்துவதுதான் கடவுளின் மக்களது இயல்பு. ஆகவே, ஒருவர் பகைவர்மீது அன்புகூர்வதன் வழியாக மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர் ஆகின்றார். நிறைவாக, ஒருவர் பகைவர் மீதும் அன்பு கூர்வதன் வழியாக, விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவராகின்றார். விண்ணகத்தந்தை மட்டுமே நிறைவுள்ளவர்கள். அப்படிப்பட்டவரைப் போன்று ஒருவர் நிறைவுள்ளவராக வேண்டுமெனில், அவர் பகைவர்மீதும் அன்பு கூர்வது கட்டாயம்.
சிந்தனை
வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றிருக்கும் இவ்வுலகில், வன்முறைக்கு அன்பு ஒன்றே தீர்வு என்று சொல்லும் இயேசுவின் புதிய நெறி வாழ்வாக்கப்பட வேண்டிய ஒரு உன்னதமான நெறி. ஆகையால், நாம் பகைவர்மீது அன்புகூர்வோம்; தீமை செய்தவருக்கு நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed