பொதுக்காலம் ஐந்தாம் வாரம்
வியாழக்கிழமை
மாற்கு 7: 24-30
நம்பிக்கை இருந்தால் போதும்…
நிகழ்வு
2000 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 25 ஆம் நாள், பிலிப்பைன்ஸில் உள்ள ஸாம்போவாங்கா என்ற சிற்றூரில் வசித்துவந்த மாரிசெல் அபாடன் என்ற பதினோரு வயது சிறுமி, தனது மாமாவுடன் தண்ணீர் எடுத்துவர கிளம்பிப் போனார். வழியில் நான்குபேர் கையில் கத்தியுடன் அவர்களை வழிமறித்தார்கள். அவர்களில் ஒருவன், மாரிசெல்லின் மாமாவை மண்டியிட்டுக் கீழே அமரச் சொன்னான். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அவர் கழுத்தில் வெட்டு விழுந்தது. இவ்வளவு நேரம் தன்னோடு பேசிக்கொண்டு வந்த மாமா ஒரு கணத்துக்குள் இறந்துபோனதை நம்பமுடியாமல் பார்த்தார் மாரிசெல். பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து ஓடத் தொடங்கினார். ஆனால், அவர்கள் வேகமாக ஓடிவந்து அவரைப் பிடித்தனர்.
அப்பொழுது அவர்களில் ஒருவன் மாரிசெல்லின் கழுத்தில் வெட்டினான். கீழே விழுந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழக்கத் தொடங்கினார். ஆனாலும், உள்ளுக்குள் ஒரு குரல் “நான் சாகக்கூடாது… நான் சாகக் கூடாது…” என்று அழுத்தமாக ஒலித்துக்கொண்டே இருந்தது, அவருக்கு லேசாக நினைவு வந்தபொழுது, கொலைகாரர்கள் நான்கு பேரின் கால்களும் தெரிந்தன. அவர் இறந்ததைப்போல பேச்சு மூச்சில்லாமல் அப்படியே கிடந்தார். சிறிது நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும் வீட்டை நோக்கி ஓடினார். “கடவுளே! நான் பிழைக்கவேண்டும், நான் பிழைக்கவேண்டும்” என்று திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லியபடி ஓடினார்.
சிறிது தூரத்துக்குமேல் அவரால் ஓட முடியவில்லை. அப்பொழுதுதான் தன் கரங்களை கவனித்தார். அவரின் மணிக்கட்டுக்குக்கீழ் இரு கைப்பகுதிகளும் வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. அவருக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. இருந்தாலும் நிலைமையை சமாளித்துக்கொண்டு, “நான் பிழைக்கவேண்டும்” என்கிற நம்பிக்கையோடு விடாமல் ஓடினார். வீட்டை நெருங்கியதும் “அம்மா, அம்மா” என்று இன்னும் சத்தமாகக் கத்தினார். மகளின் அலறல் சத்தம்கேட்டு, வீட்டிலிருந்து ஓடிவந்த மாரிசெல் தாய், அவரின் நிலைகண்டு பதறிப்போனார். ஒருகணம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் வேகமாக வீட்டுக்குள் ஓடி, ஒரு போர்வையை எடுத்துவந்து, மகளின் உடலைச் சுற்றிப் போர்த்திவிட்டு, மகளை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார். மாரிசெல்லின் வீட்டிலிருந்து மருத்துவமனை 12 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதை ஓடிக் கடப்பதற்கு எப்படியும் நான்குமணி நேரமாகும். இருந்தாலும், மாரிசெல்லின் தாயார் அவரைத் தூக்கிக்கொண்டு அந்த 12 கிலோமீட்டைரையும் கடந்து ஒருவழியாக மருத்துவமனையை அடைந்தார்.
மணிக்கட்டுக்குக் கீழ் வெட்டுப்பட்டுத்தொங்கும் இரு கைகள், கழுத்தில் காயம் என்றிருந்த மாரிசெல்லைப் பார்த்த மருத்துவர்கள், “இவர் பிழைப்பது கஷ்டம்தான்… இருந்தாலும் முயற்சிசெய்து பார்க்கிறோம்…” என்று அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள். ஏறக்குறைய ஐந்துமணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாரிசெல் காப்பாற்றப்பட்டார். கழுத்தைச்சுற்றி மட்டும் அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டன. கஷ்டப்பட்டு மாரிசெல்லைக் காப்பாற்றிய மருத்துவர்களால் அவரின் கைகளைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் மணிக்கட்டுக்குக் கீழ் மொன்னைப் பகுதிகளாக அவை மாறியிருந்தன.
ஒருமாத காலம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சையை முடித்துவிட்டு மாரிசெல்லும் அவருடைய தாயும் திரும்பிவந்தார்கள். அவர்கள் இருவரும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது வீடு முழுவதும் கொலைகாரர்களால் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டு இருவரும் கலங்கிப்போயினர். “மருத்துவமனையில் சிகிச்சைக்கான பணத்தைக் கட்ட கையில் பணமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுவேறயா?” என்று மரிசெல்லின் தாயார் புலம்பப் தொடங்கினார். ஆனாலும், மாரிசெல் `இந்த நிலையும் மாறும்’ என்று நம்பிக்கையோடு இருந்தார். அந்த நம்பிக்கைக்கு கடவுளிடமிருந்து பதில் கிடைத்தது. எப்படியென்றால், மாரிசெல்லின் தூரத்து உறவினராக இருந்த பேராயரார் ஒருவர் அவரின் மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். அது மட்டுமல்லாமல் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தவும் உதவினார். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
இதன்பிறகு விரல்களில்லாத மாரிசெல் தன் மணிக்கட்டைப் பயன்படுத்தியே தன் வேலைகள் எல்லாவற்றையும் செய்யப் பழகினார். எழுதக் கற்றுக்கொண்டார்; கணினி பழகினார், உணவக நிர்வாகத்தில் (Hotel Management) பட்டம் வாங்கினார். ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் படிப்பில் ஒரு தங்கப்பதக்கமும் வென்றார். இன்றைக்கு மாரிசெல் ஒரு சமையற்கலை நிபுணர் (Chef). உலகிலேயே கைகள் இல்லாத சமையல் கலைஞர் இவராகத்தான் இருக்கும். தன் மணிக்கட்டுகளையும் பிற உடல் பகுதிகளையும் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்யும் இவர் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கின்றார்.
கழுத்தில் வெட்டப்பட்டு, கைகளில் விரல்கள் இல்லாத நிலையிலும் ஒரு சாதனைப் பெண்ணாக மாரிசெல்லால் வலம்வர முடிகின்றதென்றால், அதற்கு அவரிடம் இருக்கும் நம்பிக்கைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த மாரிசெல்லைப் போன்று நற்செய்தியிலும் நம்பிக்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு பெண்மணியைக் குறித்துப் படிக்கின்றோம். அவருடைய நம்பிக்கை எத்தகையது, அந்த நம்பிக்கையினால் இயேசுவிடமிருந்து அவர் பெற்ற நன்மை என்ன என்று சிந்தித்தப் பார்ப்போம்.
அம்மா, உமது நம்பிக்கை பெரிது
இயேசு, புறவினத்தார் வாழும் பகுதியான தீர் பகுதிக்குள் நுழையும்போது அங்கிருந்த கிரேக்கரும் சிரிய பெனிசிய இனத்தைச் சார்ந்தவருமான ஒரு பெண் தன்னுடைய மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு இயேசுவிடம் கேட்கின்றார். ஒரு பக்கம் அவர் ஒரு பெண், அதுவும் புறவினத்துப் பெண், இன்னொரு பக்கம் அவரை அனுப்பிவிடத் துடிக்கும் இயேசுவின் சீடர்கள் (மத்15: 23) இவற்றையும் கடந்த அப்பெண் இயேசுவிடம் வந்து தன் மகளுக்காக இயேசுவை வேண்டிநிற்கின்றார். இயேசுகூட தொடக்கத்தில் அவருக்கு மறுமொழி பேசவில்லை, அவரை நாயென்று (தெரு நாயல்ல, செல்ல நாய்தான்) அழைக்கின்றார். இருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் தன் மகளுக்காகத் தொடர்ந்து இயேசுவை இறைஞ்சி நிற்கின்றார். இதையெல்லாம் பார்த்த இயேசு அவருடைய மகளுக்கு நலமளிக்கின்றார். அதைவிடவும் அவருடைய நம்பிக்கை பெரிது என்று பாராட்டுகின்றார் (மத் 15: 28).
நற்செய்தியில் இருவருடைய நம்பிக்கையைக் கண்டு இயேசு வியந்து பாராட்டுகின்றார். ஒருவர் நூற்றுவத் தலைவர், இன்னொருவர் இவர். இந்த இரண்டு பேருமே புறவினத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நம்மிடம் ஆழமான நம்பிக்கை இருந்தால், நம்மால் நிச்சயம் இறையாசியை பெற முடியும் என்ற உண்மையானது வெளிப்படுத்தப்படுகின்றது.
சிந்தனை
‘நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலையில் காணும் கனவு’ என்பார் கிங்சங் என்ற அறிஞர். எனவே, நமது நம்பிக்கை ஆழமானதாக இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed