பொதுக்காலம் நான்காம் வாரம்
வியாழக்கிழமை
மாற்கு 6: 7-13
அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்
நிகழ்வு
ஒரு தாய் தன் மகனிடத்தில், “என் அன்பு மகனே! மனித உடலில் மிகவும் முக்கியமான பாகம் எது?” என்று கேட்டார். அவன் சிறிதும் தாமதியாமல், “காது” என்றான். காரணம் அவனுக்குப் பாடல் கேட்பது என்றால், அவ்வளவு இஷ்டம். அதனால் அவன் அப்படிப் பதில் சொன்னான். அதற்கு அவனுடைய தாய், “மகனே! இன்னும் நாட்கள் இருக்கின்றன… அதனால் நீ நன்றாக யோசித்துவிட்டுச் சொல்” என்றார்.
மாதங்கள் உருண்டோன்டின. மகன் மெல்ல வளர்ந்து வந்தான். அப்போது தாய் மகனிடத்தில் முன்பு கேட்ட அதே கேள்வித் திரும்பிக் கேட்டார். உடனே மகன் தன் தாயிடம், “கண்” என்றான். ஏனென்றால், அவன் நிறையக் காணொளிகளையும் தொலைக்காட்சியில் வந்த திரைப்படங்களையும் விரும்பிப் பார்க்கத் தொடங்கி இருந்தான். மகன் இவ்வாறு சொன்னதும் தாய் அவனிடம், “மகனே! நீ நன்றாக வளர்ந்துகொண்டிருக்கின்றாய் என்று தெரிகின்றது. இப்பொழுது நீ சொன்ன பதில் ஓரளவுக்குச் சரிதான் என்றாலும் இன்னும் சரியான பதிலை நீ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். நாட்கள் இருக்கின்றன. அதனால் நன்றாக யோசித்துச் சொல்” என்றார். அவனும் நன்றாக யோசித்துவிட்டு ஒவ்வொரு பதிலாக வந்து தாயிடத்தில் சொன்னான். ஆனால், தாய் அவன் சொன்ன எந்தப் பதிலிலும் திருப்தி அடையவில்லை.
இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்கும்போது, திடிரென்று ஒரு நாள் வீட்டிலிருந்த அவனுடைய அப்பாவின் தந்தை – தாத்தா – இறந்துபோனார். தாத்தா இறந்தவுடன் அவனுடைய அப்பா கண்ணீர்விட்டு அழுதார். அப்பொழுது அவனுடைய அம்மாதான் அப்பாவிற்கு தன் தோள் சாயக் கொடுத்துத் தேற்றினார். இதை அவன் கூர்ந்து கவனித்தான்.
இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து தாய் தன் மகனை அழைத்து, முன்பு கேட்ட அதே கேள்வியைத் திரும்பிக் கேட்டார். அப்பொழுது மகன், “மனித உடலில் மிகவும் முக்கியமான பாகம் தோள்தான். ஏனென்றால், அதுதான் ஒருவர் கஷ்டத்தில் இருக்கின்றபோது சாய்ந்துகொள்வதற்கு இடம்தருகின்றது” என்றான். “மிகச் சரியாய் சொன்னாய் என் அன்பு மகனே… உடலில் உள்ள மற்ற எந்தப் பாகத்தை விடவும் தோள்தான் மற்றவர்களுக்காகப் படைக்கப்பட்டிகின்றது. மற்ற எல்லாப் பாகங்களும் நமக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன” என்று சொல்லி தாய் அவனுக்கு அன்பு முத்தம் கொடுத்தார்.
இறையாட்சிப் பணி என்பது எளிதான பணியன்று, அது மிகவும் சவால் நிறைந்த பணி. அப்படிப்பட்ட பணியில் ஈடுபடுவோர் ஒருவர் மற்றவருக்குத் தோள் தருவதும் ஒத்தாசையாக இருப்பதும் தேவையானதாக இருக்கின்றது.
எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படுவதன் தேவையை உணர்ந்த இயேசு
தன் சொந்த ஊர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இயேசு, சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைக் கற்பித்து வந்தார். இப்படிப்பட்ட தருணத்தில் அவர் எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். உடனே அவர் பன்னிரு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களுக்கு தீய ஆவியின்மீது அதிகாரம் கொடுத்து, ஒருசில அறிவுரைகளையும் கொடுத்து மக்கள் மத்தியில் பணிசெய்ய அனுப்புகின்றார்.
சீடர்களை இருவர் இருவராக அனுப்பிய இயேசு
எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படுவதன் தேவையை உணர்ந்து சீடர்களை மக்கள் மத்தியில் பணிசெய்ய அனுப்பிய இயேசு, அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். இதற்கு மிக முக்கியமான காரணம், மேலே பார்த்ததுபோல இறையாட்சிப் பணி என்பது அவ்வளவு எளிதான பணியல்ல, அது மிகவும் சவால்கள் நிறைய பணி. அப்படிப்பட்ட பணியில் இடர்களும் எதிர்ப்புகளும் எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தல்களும் வரலாம். இப்படிப்பட்ட தருணத்தில் சீடர் தனியாக இருந்தால் அவர் மனமுடைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதால் அவருக்கு ஆறுதல் சொல்லவும் தேற்றவும் இன்னொருவர் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இயேசு இருவர் இருவராக அனுப்புகின்றார்.
இயேசு சீடர்களை இருவர் இருவராக அனுப்பியதற்கு இன்னொரு காரணம் ஒருவர் மற்றவருக்கு ஆலோசனை சொல்லவும் சேர்ந்து உழைக்கவுமாகும். சேர்ந்து உழைத்தால் அதிக பலன் கிடைக்கும் என்று சபை உரையாளர் புத்தகம் எடுத்துச் சொல்கின்றது (4:9). இதனாலும் இயேசு சீடர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். இதைவிட இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவென்றால், யூதர்கள் ஒருவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு சான்று உண்மை என நிரூபிக்கப்படவேண்டும் என்றால் அதற்கு இருவர் தேவை (இச 17:6). இதன் பொருட்டும் இயேசு சீடர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். இப்படி அனுப்பட்ட சீடர்கள் பணித்தளங்களுக்குச் சென்று சிறந்த விதமாய் பணிசெய்கிறார்கள்.
சிந்தனை
இன்றைய காலகட்டத்தில் இறையாட்சிப் பணிசெய்வது மிகவும் சவால் நிறைந்தது. இத்தகைய பணியில் ஈடுபடுவருக்கு தோள்தந்து துணையிருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed