பொதுக்காலம் நான்காம் வாரம்
திங்கள்கிழமை
மாற்கு 5: 1-20
தேவையில் உள்ளவருக்கு உதவி
நிகழ்வு
அது ஒரு பரபரப்பான சாலை. அந்த சாலையை ஒருநாள் பிற்பகல் இரண்டு மணியளவில் உயர்ரக நாய்க்குட்டி ஒன்று கடந்து சென்றது. அப்பொழுது வேகமாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனம் அதன்மேல் மோதி, மோதியதுகூடத் தெரியாமல் வேகமாகச் சென்றது. ஆனால், வாகனத்தில் அடிபட்ட நாயோ ரத்த வெள்ளத்தில் சற்றுத் தொலைவில் சென்று விழுந்தது.
அந்த வழியாக ஏராளமானோர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். அடிபட்டு, முனங்கிக்கொண்டிருந்த அந்த நாயை மட்டும் யாரும் கவனிக்கவில்லை. அந்நேரத்தில் வேகமாக ஓடிவந்த தெரு நாய் ஒன்று, அடிபட்டுக்கிடந்த உயர்ரக நாய்குட்டியின் ஒரு காலைக் கவ்வி இழுத்துக்கொண்டு போய் சாலையோரத்தில் போட்டுவிட்டதுச் சென்றது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த மனிதர்கள் யாவரும், சாதாரண ஒரு நாய்க்கு இருக்கும் கரிசனையும் அக்கறையும் உதவி செய்யும் மனபாண்மையும் நமக்கில்லையே என்று வருத்தப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்த ஒரு ‘நல்ல மனிதர்’ அடிபட்டுக் கிடந்த அந்த உயர் ரக நாய்குட்டியை தன்னுடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போய், அதனுடைய காயங்களுக்குக் கடுப்போட்டு, அனுப்பி வைத்தார்.
தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கு எவ்வளவோ வாய்ப்புக் கிடைத்தும் அவற்றை உதாசினப்படுத்திவிட்டு, கண்டும் காணாமல் போகின்ற நம்முடைய வெளிவேடத்தை இந்நிகழ்வானது வேதனையோடு பதிவுசெய்கின்றது. இத்தகைய பின்னணில் தேவையில் இருந்த அல்லது தீய பிடித்து வாழ்ந்து வந்த மனிதரை ஆண்டவர் இயேசு குணப்படுத்தி, அவருக்குப் புதுவாழ்வு தந்தது நமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது.
தீய ஆவி பிடித்து கல்லறைகளுக்கு நடுவில் வாழ்ந்துவந்த மனிதர்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு அக்கரையிலிருந்த கேரசெனர் பகுதிக்கு வருகின்றார். இது புறவினத்தார் வாழும் பகுதி. இங்குதான் கல்லறைகளுக்கு நடுவே சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் தீய ஆவி பிடித்த ஒருவர் இருக்கின்றார். இந்த மனிதருக்கு ஏதாவது உதவிசெய்யவேண்டும், இவரை முன்னைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. மாறாக, அவர் அப்படியே இருக்கட்டும் என்று அவர் வாழ்ந்துவந்த சமூகம் வைத்திருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் இயேசு அவரிடத்தில் வந்து, “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்கின்றார்.
இங்கு இயேசுவிடத்தில் இருந்த தேவையில் இருப்பவருக்கு உதவி செய்யும் மனப்பான்மைதான் நாம் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
தீய ஆவி(களை)யைப் பன்றிக் கூட்டத்தின் நடுவே அனுப்பியே இயேசு
சங்கிலிகளாலும் விலங்குகளாலும் கட்டப்பட்டிருந்த அந்த மனிதரின் நிலை கண்டு, அவர்மீது மனமிரங்கிய இயேசு, அவனிடமிருந்து தீய ஆவியை – தீய ஆவிகளை – விரட்ட முன்வருகின்றார். அப்பொழுது அந்த மனிதரில் இருந்த தீய ஆவிகள் இயேசுவிடம், எங்களைப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றன. இயேசு தீய ஆவிகளை எதற்கு பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பவேண்டும்? அப்படியே விரட்டியடித்திருக்கலாமே என்று நினைக்கலாம். இயேசு, தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதரிடமிருந்து தீய ஆவி முற்றிலுமாக வெளியேறிவிட்டது என்பதை நிரூபிக்க அதைப் பன்றிக்கூட்டத்தின் நடுவே அனுப்புகின்றார். இந்த நிகழ்விற்குப் பிறகு தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதர் ஆடையணிந்து அறிவுத் தெளிவோடு இருப்பதே இதற்குச் சான்றாக அமைகின்றது.
Source: New feed