பொதுக்காலம் மூன்றாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மாற்கு 4: 26-34
மிகச் சிறியதிலிருந்து மிகப்பெரியவற்றிற்கு…
நிகழ்வு
அர்ஜென்டினாவில் ‘பான்ஸ்வாலா’ என்ற ஓர் அரியவகைப் பறவை இனம் இருக்கின்றது. இது தன் இனப்பெருக்கத்திற்காக அங்கிருந்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காபிஸ்ட்ரோனோ பகுதிக்கு வந்து, இனப்பெருக்கம் செய்துவிட்டுத் திரும்பும். இப்பறவை இனம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி, மார்ச் மாதம் இறுதியில் கலிபோனியாயை வந்தடையும். இனப்பெருக்கத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கலிபோனியாவிலிருந்து கிளம்பும் இப்பறவை, டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அர்ஜென்டினாவை வந்தடையும்.
இப்படி தன் இனப்பெருக்கத்திற்காக பான்ஸ்வாலா பறவை இனம் ஒவ்வோர் ஆண்டும் பயணிக்கக்கூடிய தூரம் பதினாறாயிரத்து அறுநூறு கிலோமீட்டர். (போவதற்கு எட்டாயிரத்து முந்நூறு கிலோமீட்டரும் திரும்பி வருவதற்கு எட்டாயிரத்து முந்நூறு கிலோமீட்டரும் ஆகும்). உலகிலுள்ள பெரும்பாலான பறவை இனங்கள் இதுபோன்றுதான் தன் இனப்பெருக்கத்திற்காக நீண்டதூரம் பயணிக்கிறது… அப்படியிருக்கும்போது இந்த பான்ஸ்வாலா பறவையிடத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்…
அர்ஜென்டினாவிற்கும் கலிபோனியாவிற்கும் இடையில் நிலப்பரப்போ அல்லது மலையோ எதுவும் கிடையாது. கடல்தான் வியாபித்திருக்கின்றது. அப்படியானால் இந்த பான்ஸ்வாலா பறவையினம் பதினாறாயித்து அறுநூறு கிலோமீட்டரையும் ஒரே மூச்சில்தான் பறந்து கடக்குமா?…. இடையில் பசியெடுத்தாலோ, தாகம் எடுத்தாலோ அல்லது களைப்புற்றாலோ அது என்னசெய்யும் என்று கேட்கலாம். அதற்கு அது செய்யும் ஒரு காரியம்தான் எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது. பான்ஸ்வாலா பறவை இனம் கடலைக் கடந்துவரும்போது தன்னுடைய அலகில் ஒருசிறிய குச்சியைக் கவ்விக்கொண்டு வரும். இப்படி வருகையில் இடையில் அதற்குப் பசியெடுத்தாலோ, தாகமுற்றாலோ அல்லது களைப்புற்றாலோ அது தன் அலகில் சுமந்துகொண்டு வரும் குச்சியை கடல்மேல் போட்டு பசியாறவோ அல்லது இளைப்பாறவோ செய்யும். இப்படிப்பட்டத்தான் அந்தப் பறவையினம் கடலைக் கடக்க்கும்
பான்ஸ்வாலா பறவை இனத்திற்கு ஒரு சாதாரண குச்சி பதினாறாயிரத்து அறுநூறு கிலோமீட்டரைக் கடக்க உதவியாக இருக்கும்போது, படைப்பின் மணிமகுடமாக இருக்கும் நமக்கு கொடுக்கப்படும் எவ்வளவோ வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்தி நாம் எவ்வளவோ சாதிக்கலாம் அல்லவா!
இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பாகும்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறையாட்சியைக் கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகுவிதையானது அளவில் சிறியது. ஆனால் அதுவே மிகச் சிறியவிதை கிடையாது. அதைவிடவும் மிகச் சிறிய விதைகள் உண்டு. ஆனால், யூதர்களைப் பொறுத்தளவில் கடுகுவிதைதான் உலகத்தில் இருக்கக்கூடிய விதைகளில் மிகச் சிறியது என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இயேசு கடுகுவிதையை இறையாட்சிக்கு ஒப்பிடுகின்றார். இவ்விதை மண்ணில் விதைக்கப்படும்போது மிகச் சிறியதாக இருந்தாலும் வளர்ந்து பெரியதாகும்போது வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு கிளைகள் பெரிதாகி விடுகின்றன.
இயேசு, இறையாட்சியைக் கடுகுவிதைக்கு ஒப்பிடக் காரணம், அது பன்னிரெண்டு பேரைக் கொண்டு தொடங்கப்பட்டாலும் படிப்படியாக வளர்ந்து, யாரும் எண்ண முடியாத அளவிற்குப் பெரியதாகும் என்பதால்தான். இயேசு பன்னிரெண்டு பேரைக் கொண்டு தொடங்கிய இறையாட்சி, பெந்தகோஸ்தே பெருவிழாவில் 3000 பேர் ஆனதையும் அதைத் தொடர்ந்து படிப்படியாக எண்ணிக்கை பெருகியதையும் (திப 4:4, 5:14, 6;1,7) ஒரு கட்டத்தில் யாரும் எண்ண முடியாத அளவிற்கு உயர்ந்ததையும் (திவெ 5:9) விவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது. ஆகையால், ஒரு செயல் சிறியதாக இருந்தாலும் அதைப் படிப்படியாகச் செய்துகொண்டிருந்தால் மிகப்பெரியதாக உருமாறும் என்பதை இயேசு நமக்கு இந்த கடுகுவிதை உவமையின் வழியாக மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.
மனந்தளராமல் செயல்பட்டால் சிறியவற்றிலிருந்து மிகப்பெரியவற்றை உருவாக்கலாம்
கடுகுவிதை உவமை நமக்கு எடுத்துரைக்கும் செய்தி, மனந்தளராமல் முனைப்போடு செயல்பட்டால் மிகச் சிறிய காரியத்திலிருந்தும் மிகப்பெரியப் காரியத்தை செய்யலாம் என்பதாகும். சிறிய கடுகு விதை வானத்துப் பறவைகளுக்கு நிழல்தரும் அளவில் வளர்வது போல், பன்னிரெண்டு பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட இறையாட்சி எண்ணமுடியாத அளவுக்கு மக்களை உள்ளடக்கி இருப்பதுபோல், மனந்தளராமல் முனைப்போடு செய்யப்படும் ஒரு சிறு செயல் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.
சிந்தனை
நான் சிறியவன், எளியவன், வறியவன் என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிக்கொண்டிருக்காமல், மிகச் சிறிய கடுகுவிதையிலிருந்து மிகப்பெரிய மரத்தைத் தோற்றுவித்த இறைவன் நம்மையும் மிகப்பெரிய மனிதராக மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கின்ற சிறு திறமையையும் முனைப்போடு பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் வளர்ந்து, இறைவனுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed