பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 19: 1-10
“இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று”
நிகழ்வு
ஒரு சிற்றூரில் மர வியாபாரி ஒருவர் இருந்தார். இவரிடத்தில் அவ்வூரில் இருந்தவர்கள் விறகுகளை வாங்கி, அவற்றைத் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த மர வியாபாரியோ தன்னுடைய தொழிலில் உண்மையில்லாதவராகவும் நேர்மையில்லாதவராகவும் இருந்தார். எந்தளவுக்கு என்றால், இவரிடத்தில் யாராவது பத்துக் கிலோ விறகு வாங்கிக்கொண்டு போனால், உண்மையில் ஒன்பது கிலோவோ அல்லது எட்டுக் கிலோவோதான் இருக்கும். இவர் செய்து வந்த இந்தத் திருட்டு வேலை ஊரில் இருந்த மக்களுக்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும் இவரை எதிர்த்துக் கேள்வி கேட்க, ஊரில் உள்ள யாருக்கும் துணிவில்லை.
இந்நிலையில் ஒருநாள் மர வியாபாரியிடம் வழக்கமாக விறகு வாங்கும் ஒருவர், ஊர் மக்களிடம், “மர வியாபாரி மனம்மாறிவிட்டார்போலும்; தன்னுடைய தொழிலில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கின்றார்” என்றார். “எதை வைத்து, இப்படிச் சொல்கின்றீர்?” என்று ஊர் மக்கள் அவரிடம் கேட்டபொழுது, “இன்று காலை மர வியாபாரியிடம் ஐந்து கிலோ விறகுகளை வாங்கி வந்தேன். அவற்றை வீட்டில் வைத்து நிறுத்துப் பார்த்தபொழுது, சரியாக ஐந்து கிலோ விறகுகள் இருந்தன. இத்தனை நாள்களும் அவரிடத்தில் விறகுகளை வாங்கிக்கொண்டு வரும்பொழுது எப்படியும் ஒரு கிலோவோ அல்லது அரைக் கிலோ குறைந்திருக்கும். இன்றைக்கு விறகுகளின் எடை சரியாக இருப்பதால்தான் சொல்கிறேன் அவர் மனம்மாறிவிட்டார் என்று” என்றார்.
இதற்குப் பிறகு ஊர் மக்கள் மர வியாபாரிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்துப் பார்த்தபொழுது, அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மனம்மாறிவிட்டார் என்றும், அதனால் அவர் உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்கத் தொடங்கிவிட்டார் என்றும் தெரிந்தது.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மர வியாபாரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தார். அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது அவருடைய வாழ்வில் அப்படியே பிரதிபலித்தது. நற்செய்தியில் வரும் சக்கேயு தான் உண்மையிலயே மனம்மாறிவிட்டார் என்பதைத் தன்னுடைய செயலில் வெளிப்படுத்துகின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைக் காண விரும்பிய சக்கேயு
யூதர்கள், வரிதண்டுகளைத் திருடர்கள் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்கள் என்றும் கருதி வந்தனர். காரணம், வரிதண்டுபவர்கள் யூதர்கள் மிகவும் வெறுத்த உரோமையர்களிடம் வேலை பார்த்து வந்தார்கள். மேலும் இந்த வரிதண்டுபவர்கள் குறிக்கப்பட்ட தொகையைவிட மிகுதியாக மக்களிடம் பணம் தண்டினார்கள் (லூக் 3: 12-13) இத்தகைய காரணங்களால் வரிதண்டுபவர்கள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள். நற்செய்தியில் வருகின்ற சக்கேயுவோ, சாதாரண வரிதண்டுபவர் கிடையாது; வரிதண்டுபவர்களுக்குத் தலைவர். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வரிதண்டி வந்த வரிதண்டுபவர்களுக்கெல்லாம் சக்கேயு தலைவராக இருந்தார். அப்படியானால், அவர் மக்களுடைய வெறுப்புக்கு எந்தளவுக்கு உள்ளாகியிருப்பார் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
இப்படித் தன்னிடம் மிகுதியான செல்வம் இருந்தாலும், மக்களுடைய வெறுப்புக்கு உள்ளாகியிருந்த சக்கேயு இயேசுவைக் காணவிரும்பி ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொள்கின்றார்.
சக்கேயுவைக் காண விரும்பிய இயேசு
ஆண்டவராகிய கடவுள் நாம் அமர்வதையும் எழுவதையும் அறிபவர்; தொலைவிலிருந்தே நமது உள்ளத்து உணர்வுகளை உய்த்துனர்கின்றவர் (திபா 139: 2). அப்படிப்பட்டவர் உண்மையான நோக்கத்தோடு, நொறுங்கிய மனத்தோடு சக்கேயு தன்னைக் காண வந்திருக்கின்றார் என்பதை அறிந்து அவரிடம், “…இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்கின்றார்.
மக்களால் பெரிதும் மதிக்கப்படும் இயேசு, தன்னுடைய வீட்டில் தங்கப் போவதாகச் சொன்னதும், சக்கேயு தன்னுடைய பாவத்திற்குக் கழுவாய் தேடிக் கொள்ளப் போவதாக, தன் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவதாகவும்… எதையாவது கவர்ந்திருந்தால், அதை நான்கு மடங்காத திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் சொல்கின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்று கூறுகின்றார். ஆம், கடவுள் நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உள்ளத்தைப் புறக்கணிப்பதில்லை (திபா 51: 17). சக்கேயு நொறுங்கிய உள்ளத்தோடும் பாவத்திற்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் எண்ணத்தோடும் வந்ததால், இயேசு அவருடைய வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்கின்றார்.
ஆகையால், நாம் நம்முடைய குற்றத்தை உணர்வதோடு மட்டுமல்லாமல், அதன் வெளிப்பாடாக, சக்கேயுவைப் போன்று புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி செய்து, கடவுள் தருகின்ற ஆசியைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘உலகைச் சார்ந்தவராய் இருக்கும் ஒருவர், கடவுளைச் சார்ந்தவராய் இருப்பதே உண்மையான மனமாற்றம்’ என்பார் ஹென்றி நியூவென் என்ற அறிஞர். ஆகையால், நாம் உலகைச் சார்ந்தவர்களாய் இல்லாமல், கடவுளைச் சார்ந்தவர்களாய் வாழ்ந்து, சக்கேயுவைப் போன்று உண்மையான மனமாற்றம் பெற்றவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed