பொதுக்காலம் இரண்டாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மாற்கு 2: 23 -28
மனிதர்களா? மரபுகளா?
நிகழ்வு
2018 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 16 ஆம் நாள், தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளைத் தாக்கிய கஜா புயலில் இறந்தவர்கள் பலர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் விஜயலட்சுமி என்ற பதினான்கு வயதே ஆன சிறுமி.
பட்டுக்கோட்டையை அடுத்துள்ள அணைக்காடு என்ற கிராமத்தைச் சார்ந்த இந்தச் சிறுமி, கஜா புயல்தாக்கி இறந்தார் என்று சொல்வதைவிடவும், அவருடைய குடும்பத்தார் அல்லது இந்த சமூகம் தாங்கிப்பிடித்த மூடப்பழக்கவழக்கங்களுக்கு, மரபுகளுக்குப் பலியானார் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு குழந்தை பூப்படைந்தால் – வயதுக்கு வந்தால் – வீட்டுக்குள் வைக்கக்கூடாது; அப்படி வைத்தால் அது தீட்டு. மாறாக பூப்படைந்த அந்த குழந்தையை வீட்டுக்கு வெளியே தென்னங்கீற்றுகளால் ஒரு குடிசை அமைத்து அதனுள் வைக்கவேண்டும் அல்லது ஒருதனியறையில் வைக்கவேண்டும்.. இதுதான் தஞ்சாவூர் பகுதிகளில் பின்பற்றப்பட்டு வரக்கூடிய மரபு. இந்நிலையில் கஜா புயல் வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக பூப்படைந்த சிறுமி விஜயலட்சுமி அப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுக்கு ஏற்ப வீட்டுக்கு வெளியே தென்னங்கீற்றால் வேயப்பட்ட ஒரு குடிசையில் வைக்கப்பட்டாள். இத்தனைக்கும் கஜா புயலைக் குறித்த முன்னறிவிப்பு சொல்லப்பட்டபோதும், மரபுகளை எப்படி மீறுவது என்று அவருடைய குடும்பத்தார் அவரை வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்ட தென்னங்கீற்றுக் குடியிலேயே வைத்திருந்தனர். இதனால் புயல் வந்தபோது தென்னைமரம் மேலே சரிந்து விழுந்து சிறுமி விஜயலட்சுமி இறந்துபோனாள்.
அறிவியலும் விஞ்ஞானமும் இவ்வளவு வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும்கூட மரபுகளையும் மூடப்பழக்கவழக்கங்களையும் தூக்கிப்பிடித்து, அநியாயமாக ஒரு குழந்தையைப் பழிகொடுத்தது மிகவும் வேதனைக்குரியது.
யூதர்களின் ஓய்வுநாள் சட்டங்கள்
நற்செய்தி வாசகத்தில், இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியே நடந்து சென்றபோது, இயேசுவின் சீடர்கள் பசி மிகுதியால் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள், “பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று இயேசுவிடம் கேட்கிறார்கள். இங்கு சீடர்கள் செய்த தவறு (?) என்ன, சீடர்கள் செய்தது தவறு என்று சொன்ன பரிசேயர்களுக்கு இயேசு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
“ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகருக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்” (விப 20:10) என்பது கடவுள் மோசேக்குக் கொடுத்த சட்டம். இச்சட்டத்தின் தலையான நோக்கம் ஆறு நாட்கள் வேலைபார்த்த மக்கள் ஏழாம் நாள் ஓய்ந்திருக்கவும் இறைவனைத் தொழவும்தான். ஆனால் ‘சமயக்காவலர்கள்’ என்று தங்களைக் காட்டிக்கொண்ட பரிசேயக்கூட்டம் ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்று அதற்கு விளக்கம் தந்தது. மேலும் ஓய்வுநாளில் செய்யக்கூடாத 39 வேலைகளை அவர்கள் பட்டியலிட்டது. இந்த அடிப்படையில் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டது சட்டமீறல் என்பதால், பரிசேயர்கள், “ஓய்வுநாளில் செய்யக்கூடாததைச் செய்துவிட்டதாக” இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது
தன்னுடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தும் பரிசேயர்களிடத்தில் இயேசு, தாவீது அரசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் ( 1 சாமு 21:1-6) சுட்டிக்காட்டி, அவர்களுக்குப் பதிலளிக்கின்றார். தாவீதும் அவரோடு இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, கோவிலுக்குள் நுழைந்து, குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை (லேவி 24: 5-9), வேறு எவரும் உண்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனாலும் தாவீது அரசரும் அவரோடு இருந்தவர்களும் உண்டதால் அது குற்றமாகப் பார்க்கப்படவில்லை. இங்கே ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து உண்டவர்கள் ‘ஓய்வுநாளுக்கும் ஆண்டவரான இயேசுவின் சீடர்கள். அப்படியிருக்கும்போது அதை மட்டும் எப்படிக் குற்றமாகப் பார்க்கலாம் என்பதுதான் இயேசு முன்மொழியும் வாதமாக இருக்கின்றது.
அடுத்ததாக, ஓய்வுநாள் சட்டமே மனிதர்களுக்காக உண்டாக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது பசியாய் இருந்த தன்னுடைய சீடர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஓய்வுநாளைத் தூக்கிப்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்பதுதான் இயேசு எழுப்புகின்ற அடுத்த கேள்வியாக இருக்கின்றது.
சிந்தனை
‘சகமனிதர்களை விட சட்டங்கள் ஒன்றும் பெரிதில்லை’. ஆண்டவர் இயேசு சட்டங்களை விட சகமனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இயேசுவின் வழியில் நடக்கின்ற நாமும் சக மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed