பொதுக்காலம் பதினான்காம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 10: 24-33
“சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்”
நிகழ்வு
அவிலா நகரைச் சார்ந்தவர் இயேசுவின் புனித தெரேசா. இவர் அடிக்கடி காட்சிகள் காணக்கூடியவர். மேலும் இவர் தன்னுடைய வாழ்வில் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்து வந்தவர். இப்படி இருக்கையில் ஒருநாள் இவர் இயேசுவிடம், “இயேசுவே! என்னுடைய வாழ்வில் எதற்கு இவ்வளவு துன்பங்கள்?” என்றார். அதற்கு இயேசு இவரிடம், “நான் என்னுடைய நண்பர்களுக்கு இப்படித்தான் மிகுதியான துன்பங்களைக் கொடுப்பேன். ஏனெனில், நான் கடந்துவந்த பாதையும் மிகுந்த துன்பம் நிறைந்தது” என்றார்.
உடனே இயேசுவின் புனித தெரசா அவரிடம், “நீர் உம்முடைய நண்பர்களுக்கு இப்படி மிகுதியான துன்பத்தைக் கொடுப்பதால்தானோ என்னவோ, உமக்கு நண்பர்கள் மிகவும் குறைவாக இருக்கின்றார்கள்” என்றார். இதைக் கேட்ட இயேசு மெல்லிதாகச் சிரித்துவிட்டுச் சட்டென மறைந்து போனார்.
ஆம், இயேசு தன்னுடைய பணிவாழ்வில் சந்தித்த துன்பங்களும் சவால்களும் ஏராளம். இதைப் போன்று அவருடைய வழியில் நடந்து, அவருடைய சீடராக இருக்கும் ஒவ்வொருவரும் துன்பங்களைச் சந்திக்கவேண்டும். இன்றைய நற்செய்தியில் இயேசு, சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும் என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்தச் சொற்றொடரின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பல்வேறு துன்பங்களுக்கு நடுவிலும் அஞ்சாது பணிசெய்த இயேசு
இயேசு தான் தேர்ந்துகொண்ட பன்னிருவரையும் பணித்தளங்களுக்கு அனுப்பி வைக்கின்றபொழுது, அவர்களுக்கு கூறுகின்ற அறிவுரையின் ஒரு பகுதியாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “தன்னுடைய சீடர்கள் தன்னைப் போல் ஆகட்டும்” என்கின்றார். அதைத்தான் “சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும்” என்ற வார்த்தைகளில் நாம் வாசிக்கின்றோம்.
இயேசு தூய ஆவியாரின் வல்லமையால் பேய்களை ஓட்டினார்; ஆனால், பரிசேயர்களோ, “இவன் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றான்” என்று விமர்சனம் செய்தார்கள். இயேசு உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் பணிசெய்தார்; அவர்களுடைய சீடர்களும் உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சிப் பணிசெய்யவேண்டும் என்பதைத்தான் இயேசு, சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும் என்று சொல்கின்றார் .
சீடர்கள் இயசுவைப் போன்று பணிசெய்யும்பொழுது அவருடைய உடனிருப்பு இருக்கும்
இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொன்னதுபோன்று, அவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளவேண்டும். மட்டுமல்லாமல், அவர்கள் உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல், உடலோடு ஆன்மாவையும் நரகத்தில் தள்ள வல்லவருக்கு அஞ்சவேண்டும். அப்படி அவர்கள் இருந்தால், அவர்களை ஆண்டவர் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்வர் என்று இயேசு கிறிஸ்து மிகத்தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.
இதற்காக இயேசு பயன்படுத்தும் உருவகம்தான் சிட்டுக் குருவிகள். சிட்டுக்குருவிகளோ மதிப்பு இல்லாவை. சந்தையில் அவற்றை ஒரு காசுக்கு இரண்டு என்று விற்பவரிடம், நாம் கொஞ்சம் பேரம்பேசினால், ஒரு காசுக்கு மூன்றுகூட தருவார்கள். அந்தளவுக்கு அவை மதிப்பில்லாதவை. ஆனாலும்கூட ‘மதிப்பே இல்லாத’ அந்தச் சிட்டுக்குருவிகளை கடவுள் தரையில் விழாத வண்ணம் காக்கின்றார். அப்படியானால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒருவரை, தனக்கு மட்டுமே அஞ்சி வாழக்கூடிய ஒருவரைக் கடவுள் எவ்வாறெல்லாம் பாதுகாப்பார் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.
இந்த இடத்தில் இறைவாக்கினர் எலியாவை நாம் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இறைவாக்கினர் எலியா ஆகாபு மன்னனும் அவனுடைய மனைவியும் உண்மைக் கடவுளை மறந்து பாகால் தெய்வத்தை வழிபட்டபொழுது, அவர்களுடைய தவற்றை அவர் அஞ்சாமல், அவ்வளவு துணிச்சலாக எடுத்துரைத்தார். இதனால் அவருக்கு ஆகாபிடமிருந்து ஆபத்து வரக்கூடும் என்று கடவுள் அவரை கெரீத்து ஓடையருகே தங்க வைத்து, காகங்கள் வழியாக அப்பமும் இறைச்சியும் தந்து காக்கின்றார். இவ்வாறு கடவுள் யாருக்கும் அஞ்சாமல், தனக்கு மட்டுமே அஞ்சி, தன்னுடைய வழியில் நடக்கின்றவரை ஆபத்து இல்லாமல் காக்கின்றார்.
ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும், அவரைப் போன்று விமர்சனங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்ளக்கூடியவர்களாகவும், ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி வாழக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். இப்படி நாம் இருந்தோமெனில், இறைவனுடைய பாதுகாப்பையும் உடனிருப்பையும் நாம் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. எனவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘’அஞ்சாதே! ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன்” (எசா 43: 5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இயேசுவின் வழியில் நடந்து, அவருடைய உண்மையான சீடர்களாவோம். அதன்வழியாக இறை பராமரிப்பையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed