பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம்
வியாழக்கிழமை
மத்தேயு 7: 21-29
சொல்பவரல்ல, செயல்படுபவரே செல்வர்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் இளைஞர் ஒருவர் சாக்ரடீசைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் எட்டு மணிநேரத்திற்கு மேலாகத் தொடர்ந்து பேசுவார் என்றும் அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வருவார்கள் என்றும் கேள்விப்பட்ட அந்த இளைஞர்க்கு சாக்ரடீசை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் கூடியது.
ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த இளைஞர் சாக்ரடீசைப் பார்க்கக் கிளம்பிப் போனார். சாகரடீஸ் இருக்கின்ற இடத்திற்குப் பக்கத்தில் வந்துவிட்ட அந்த இளைஞர்க்கு அதற்கு மேலும் வழிதெரியவில்லை. எனவே அவர் அந்த வழியாகப்போன ஒரு பெரியவரை அழைத்து, “சாக்ரடீசைப் பார்க்க வந்திருக்கிறேன். அவர் எங்கே இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், “இப்படியே சென்று இடப்பக்கம் திரும்பினால் அங்கு ஒரு பெரிய மரம் இருக்கும். அந்த மரத்திற்கு அடியில் ஒருவர் பேசிக்கொண்டே இருப்பார். ஒருமணிநேரம் அங்கேயே நின்று, அவர் பேசுவதைக் கேட்டுப் பாருங்கள். அவர் பேசுவது ஒன்றும் புரியவில்லை என்றால், அவர்தான் சாக்ரடீஸ்” என்றார்.
இதைக் கேட்டு வந்தவர்க்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே அவர் சாக்ரடீசைப் பார்க்க விரும்பித் திரும்பிப் போனார்.
இந்த நிகழ்வில் வரும் சாக்ரடீசைப் போன்று மணிக்கணக்காகப் பேசுவதற்கு இன்றைக்கு ஏராளமான பேர் இருக்கின்றார்கள். ஆனால், அதைச் செயலில் காட்டுவதற்கும் வாழ்ந்து காட்டுவதற்கும் மனிதர்கள் மிகக் குறைவு. இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரல்ல, தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே விண்ணகத்திற்குள் நுழைவர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
சொல்வது யார்க்கும் எளிதாம்
ஆண்டவர் இயேசு மலைமேல் அமர்ந்து சீடர்கட்கு/ மக்கட்கு பலவேற்றைப் போதித்தார். எல்லாவற்றையும் போதித்துவிட்டுத் தன்னுடைய போதனையின் இறுதியில் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்ற வார்த்தைகள் இறுதித் தீர்ப்பில் என்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. இறுதித் தீர்ப்பின்போது ஒருவர் ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொன்னதற்காக மட்டும் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது. ஏனெனில் ‘சொல்வது யார்க்கும் எளிதாம்’ என்ற வார்த்தைக்கேற்ப இயேசுவின் காலத்தில் வாழ்ந்துவந்த பலர் கடவுளின் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டு எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து வந்தார்கள். இத்தகையோர் ஒருபோதும் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது என்பதைத்தான் இயேசு, “என்னை நோக்கி ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை” என்று கூறுகின்றார்.
அப்படியானால் யார் விண்ணரசுக்குள் நுழைய முடியும் என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான பதிலைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
சொல்லியவண்ணம் செயல்
இயேசுவை நோக்கி ‘ஆண்டவரே ஆண்டவரே’ என சொல்வதால் மட்டும் ஒருவர் விண்ணரசுக்குள் நுழைய முடியாது என்பதை மேலே பார்த்தோம். இப்பொழுது விண்ணரசுக்குள் நுழைவதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.
விண்ணரசுக்குள் நுழைய இயேசு சொல்லக்கூடிய வழி, விண்ணுலகிலுள்ள தந்தையின் திருவுளத்தின்படி நடக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவர் விண்ணரசுக்குள் நுழைய முடியும் என்பதாகும்.. இதையே வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவரின் சொல்லல்ல, கடவுளின் திருவுளத்திற்கு உகந்த செயல்களே அவரை விண்ணரசுக்குள் கூட்டிச் சேர்க்கும். யாக்கோபும் தன்னுடைய திருமுகத்தில் இதே கருத்தினைத்தான் இவ்வாறு கூறுகின்றார்: “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்.” (யாக் 1: 22). ஆகையால், இறைவார்த்தையைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இறைவார்த்தையின் படி வாழ்கின்றபோது பிரச்சினைகட்குப் பஞ்சமில்லை
நற்செய்தியில் இயேசு, தந்தையின் திருவுளத்தின் படி நடக்கவேண்டும் அல்லது இறைவார்த்தையின் நடக்கவேண்டும் என்று சொல்கின்றார் எனில், அவ்வாறு நடக்கின்றபோது பிரச்சினைகள் இல்லாமல் இருக்காது. நிச்சயம் பிரச்சினைகள் இருக்கும். எப்படி வீட்டைக் கட்டுகின்றபோடு மழையும் வெள்ளப் பெருக்கும் பெருகாற்றும் வருகின்றதோ அதுபோன்று இறைவார்த்தையின் படி வாழ்கின்றபோது பிரச்சினைகள் வரும். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, இறுதிவரைக்கும் உறுதியாய் இருக்கின்றபோது மட்டுமே ஒருவர் விண்ணரசுக்குள் நுழைய முடியும். பிரச்சினைகள் வருகின்றது என்பதற்காக இறைவனின் திருவுளத்தின் படி நடக்காமல் போனால், ஒருவரால் ஒருபோதும் விண்ணரசுக்குள் நுழைய முடியாது.
சிந்தனை
‘நன் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்கவேண்டும். அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவர்’ (லேவி 18:5) என்பார் ஆண்டவர். ஆகவே, நாம் ஆண்டவரின் திருவுளத்தின்படி, அவருடைய நியமங்களின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed