பொதுக்காலம் மூன்றாம் வாரம்
புதன்கிழமை
மாற்கு 4: 1-20
‘சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காவும் சிலர் நூறு மடங்காவும்..’
நிகழ்வு
அமெரிக்காவை செதுக்கிய சிற்பிகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கார்ரோல்டனைச் சேர்ந்த சார்லஸ் கரோல் என்பவர். அமெரிக்கா, இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற பிறகு தன்னுடைய ஆக்கப்பூர்வமான சிந்தனையால் சுதந்திரத்திற்கான அறிவிப்பினை (Declaration of Independence) உருவாக்கி, மக்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க பெரிதும் உழைத்தவர் இந்த சார்லஸ் கரோல்.
அவர் தொண்ணூற்று ஆறு ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, சாகும் தருவாயில் இருந்தார். அப்போது அவரைச் சூழ்ந்துகொண்டு ஏராளமான பேர் இருந்தார்கள். அவர் அவர்களிடத்தில் மெதுவாகப் பேசத் தொடங்கினார். “எனக்கு இப்போது தொண்ணூற்று ஆறு வயது ஆகின்றது. இத்தனை ஆண்டுகளும் நான் நல்ல உடல் உள்ள சுகத்தோடும் வசதி வாய்ப்போடும் மரியாதையோடும் வாழ்ந்து வந்திருக்கிறேன். இவற்றுக்குக்கெல்லாம் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது”.
“அது என்ன காரணம்?” என்று அவரைச் சூழ்ந்து நின்றவர்கள் மிக ஆவலோடு கேட்டார்கள். அப்போது அவர் அவர்களிடத்தில் சொன்னார். “இறைவனுடைய வார்த்தையை நான் அனுதினமும் கடைப்பிடித்து வந்தேன். அதுதான் நான் நல்ல உடல் உள்ள சுகத்துடனும் வசதி வாய்ப்போடும் மரியாதையோடும் இருக்கக் காரணம்”.
ஒருவர் இறைவனின் வார்த்தையை தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கின்றபோது, அவர் எந்தளவுக்கு முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன் தருபவராக/ பெறுபவராக இருக்கின்றார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
நான்குவிதமான நிலமும் நான்குவிதமான உள்ளமும்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விதைப்பவர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இதில் வருகின்ற விதை இறைவார்த்தை (லூக் 8:11), விதைப்பவரோ இறையடியார் (1 கொரி 3: 5-9), நிலமோ மனிதருடைய உள்ளம். இப்படி இறையடியாரால் உள்ளம் என்னும் நிலத்தில் விதைக்கப்படும் இறைவார்த்தைக்கு நாம் எப்படி செவிமடுக்கின்றோம் என்பதுதான் இந்த உவமையின் சாராம்சமாக இருக்கின்றது.
உவமையில் வரக்கூடிய வழியோர நிலம் என்பது கடின உள்ளத்தைக் (Hard Heart) குறிப்பதாக இருக்கின்றது. எப்படியென்றால் வழியோர நிலம் என்பதால் பலரும் போவர், வருவர். அப்படி அவர்கள் போகிறபோதும் வருகின்றபோதும் அவர்களுடைய கால் பட்டு நிலமானது விதை உள்ளே போகமுடியாத அளவுக்கு இறுகிப்போய்விடும். இதனால் பறவை நிலத்தின் மேலேயே கிடக்கின்ற விதையை எளிதாகக் கொத்திச் சென்றுவிடும். இதைப் போன்றுதான் பலருடைய கருத்துகளையும் மனதினுள் வாங்கக்கூடியவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல், மனம் இறுகி வாழ்வைத் தொலைத்து நிற்பார்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவார்த்தை மட்டும் தங்களுடைய உள்ளத்தை ஊடுருவுமாறு பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது (நீமொ 4: 23)
பாறைநிலை என்பது மேம்போக்கான இதயத்தைக் (Shallow Heart) குறிப்பதாக இருக்கின்றது. பாறைநிலத்தில் விதைக்கப்படும் விதை, சில காலத்திற்கு நன்றாக வளரும். அதன்பிறகு வேரை நன்றாக ஊன்ற முடியாமல் போய் அது கருகிவிடும். சிலர் இறைவார்த்தையைக் கேட்பார்கள், ஆனால் பிரச்சனை என்று வந்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அதனாலேயே இவர்கள் மேம்போக்கான இதயத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மூன்றாவதாக வருகின்ற முட்செடி நிலம் என்பது பலவகையான எண்ணங்களுக்கு ஆட்பட்ட இதயத்தைக் (Crowed Heart) குறிப்பதாக இருக்கின்றது. முடிசெடி நிலத்தில் பலவகையான செடிகொடிகள் வளரும். ஒரு கட்டத்தில் அவையெல்லாம் வளர்ந்து விதைத்தவன் விதைத்த செடியை நெருக்குகின்றபோது அது ஒன்றுமில்லாமே போய்விடும். இறைவார்த்தைக்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான கருத்துகளுக்கும் மனதில் இடம் கொடுப்பவர்கள் இப்படித்தான் எல்லாவற்றாலும் நெருக்கப்பட்ட கடைசியில் ஒன்றுமில்லாமல் போவார்கள்.
நான்காவதாக வருகின்ற நல்ல நிலமோ பலன்தரும் இதயத்தைக் குறிப்பதாக (Fruitful Heart) இருக்கின்றது. இந்நிலத்தில் விழுகின்ற விதை முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்தரும். அதுபோன்றுதான் இறைவாத்தையைக் கேட்டு, அதன்படி நடப்போருடைய வாழ்வும் இருக்கும்.
ஆகையால், வாழ்வு தரக்கூடிய இறைவார்த்தைக்கு நாம் செவிமடுத்து, அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்தோம் என்றால், நாம் அதிகமாக பலந்தருவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
சிந்தனை
வாழ்வு தரும் இறைவார்த்தையை வெறுமனே கேட்பதோடு நின்றுவிடாமல், அதனை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed