கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்
நிகழ்வு
இத்தாலியில் தோன்றிய மிகச் சிறந்த கவிஞர் தாந்தே. இவர் எழுதிய மிகவும் புகழ்பெற்ற ஒரு காவியம்தான் Divine Comedy (இறைவனின் திருவிளையாடல்). இதில் வரக்கூடிய Paradiso (விண்ணகம்) என்ற மூன்றாவது அத்தியாயத்தில் இடம்பெறக்கூடிய ஒரு நிகழ்வு.
தாந்தே விண்ணகத்திற்குச் செல்வார். அங்கே தந்தைக் கடவுள், இயேசு கிறிஸ்து, மரியன்னை, வானதூதர்கள், அவர்களுக்கு முன்பாக மண்ணகத்தில் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என ஏராளமான பேர் இருப்பார்கள். எல்லாரையும் அவர் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வருவார். ஓரிடத்தில் அவருக்கு அறிமுகமான பெண்ணொருத்தி இருப்பது போன்றே தெரியும். உடனே அவர் அந்தப் பெண் அருகே சென்று பார்ப்பார். அப்போதுதான் அந்தப் பெண் வேறு யாருமல்ல, தனக்கு மிகவும் அறிமுகமான பேட்ரிஸ் (Beatrice) என்ற பெண்தான் என்று புரியும்.
அப்போது தாந்தே அவரிடம், “நீ இறைவனுக்குப் பக்கத்தில் போய் இருக்கவேண்டியதுதானே. எதற்கு அவரிடமிருந்து ரொம்பவும் தள்ளி நிற்கின்றாய்?” என்று கேட்பார். அதற்கு அந்தப் பெண்மணி, “இந்த விண்ணகத்தில் நான் எங்கிருந்தால் என்ன? எல்லா இடமும் இங்கு ஒன்றுதான்… மேலும் இங்கே இருக்கின்ற நாங்கள் அனைவரும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். அதனால் நாங்கள் முடிவில்லாப் பெருமகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும்” என்பார்.
ஆம், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை விடவும், வேறு என்ன இந்த உலகத்தில் நமக்கு மகிழ்ச்சியைத் தந்துவிடப்போகிறது.
இயேசுவைக் காணவந்த அவருடைய தாயும் சகோதர சகோதரிகளும்
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசுவைக் காண அவருடைய தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும் வருகிறார்கள். ஆனால், மக்கள்கூட்டம் இயேசுவைச் சூழ்ந்துகொண்டு, அவர் போதிப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தனால், அவர்களால் இயேசுவை அணுகமுடியாத ஒரு நிலை ஏற்படுகின்றது. எனவே அவர்கள் ஆளனுப்பி, தாங்கள் வந்த செய்தியை அவரிடத்தில் எடுத்துச் சொல்கிறார்கள். அப்போது இயேசு பேசக்கூடிய வார்த்தைகள்தான் இன்றைய நற்செய்தியின் சாராம்சமாக இருக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையக்கருத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது முன்னர், இயேசுவைக் காண அவருடைய தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும் ஏன் வந்தார்கள் என்று அறிந்துகொள்வது நல்லது. இயேசு உணவு உண்ணக்கூட நேரமில்லாமலும் ஓய்வில்லாமலும் நற்செய்திப் பணியைச் செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு மக்கள், ‘இயேசு மதிமயங்கிப் போய்விட்டார்’ என்று பேசத் தொடங்குவார்கள் (மாற் 3:20-21) மக்கள் இப்படியெல்லாம் இயேசுவைக் குறித்து பேசியதைக் கேள்விப்பட்டதனால் அவருடைய தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும் அவரைப் பிடித்துக்கொண்டு போக வருகின்றார்கள். ஒருபக்கம் இயேசுவுக்கு ஓய்வுகொடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவரை அவருடைய குடும்பத்தார் பார்க்க வந்தாலும், இன்னொருபுறம் அவர்கள் இயேசு ‘நற்செய்தி அறிவிக்கத்தான்’ இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார் (மாற் 1:38) என்பதுகூடத் தெரியாமல் அவரை வீட்டுக்குப் பிடித்துக்கொண்டு போக வந்ததால் இயேசு, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேள்வியை கேட்டு மக்களை/நம்மை சிந்திக்க அழைக்கின்றார்.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோரே இயேசுவின் உண்மையான உறவினர்
இயேசுவின் தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும் அவரைப் பார்க்க வந்திருக்கும்போது இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கும், “என் தாயும் சகோதரர்களும் யார்?” என்ற கேள்வி சற்று கடினமான வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும், இயேசு அந்த இடத்தில் நமக்கொரு உண்மையைப் போதிக்கின்றார். அது என்னவெனில், ‘இரத்த உறவுகள் அல்ல, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே அவருடைய உண்மையான உறவுகள்’ என்பதாகும். இயேசுவின் இரத்த உறவுகள் அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை (யோவா 7:1-5). ஆனால், பாவிகளும் வரிதண்டுபவர்களும் அவர்மீது நம்பிக்கைகொண்டு அவருடைய வார்த்தையைக் கேட்டு நடந்தார்கள் (லூக் 15:1). அதனால்தான் இயேசு, “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்கின்றார்.
ஆகையால், நாம் இயேசுவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அல்ல, தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்றபோது மட்டுமே அவருடைய உண்மையான உறவுகள் ஆகின்றோம் என்பதைப் புரிந்துகொண்டு வாழவேண்டும்.
சிந்தனை
எந்த இனத்தவராலும் இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்கின்றபோது, இயேசுவின் சொந்த இனத்தவராக – அவருடைய உண்மையான உறவுகளாக மாறமுடியும். அதே நேரத்தில் இயேசுவின் சொந்த இனத்தவராக இருந்தாலும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றவில்லை என்றால், இயேசுவுக்கு எந்த இனத்தவராகவோதான் ஆவார்கள்.
ஆகையால், நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான உறவுகள் ஆவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed