பொதுக்காலம் இரண்டாம் வாரம்
புதன்கிழமை
மாற்கு 3:1-6
எப்படியும் நன்மை செய்யலாம்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பையிலிருந்த ‘இராணுவத்திற்கு ஆட்களைத் தேர்வுசெய்யும் அலுவலகத்திலிருந்து (The Army Recruting Office) ஓர் அறிவிப்பு வந்திருந்தது. அந்த அறிவிப்பு இதுதான்: “.இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக ஆர்வமுடன் உழைக்கும் ஆட்கள் தேவை. விருப்பமுள்ளவர் விண்ணப்பிக்கலாம்”.
இப்படிப்பட்ட அறிவிப்பைப் பார்த்துவிட்டு பலரும் விண்ணப்பித்திருந்தனர். பத்து வயது நிரம்பிய ஒரு சிறுவனும் அதற்கு விண்ணப்பித்திருந்தான். அந்த விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு இராணுவ அதிகாரிகள், ‘இந்தச் சின்ன வயதிலும் நாட்டிற்காக உழைக்கும் ஆர்வம் இவனுக்கு இருக்கின்றதே’ என்று மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதே நேரத்தில் பத்து வயதில் இராணுவத்தில் சேர்ந்து பணிசெய்ய முடியாது என்பதால், அந்தச் சிறுவனுக்கு அவர்கள் இவ்வாறு பதில் கடிதம் எழுதினார்கள்.
“தம்பி! நாட்டிற்காக உழைக்கவேண்டும் என்ற உன்னுடைய உயர்ந்த என்னத்தைப் பாராட்டுகின்றோம். இருந்தாலும் உனக்குப் பத்து வயதுதான் ஆகிறது என்பதால், இராணுவத்தில் சேர்ந்து பணிசெய்ய முடியாது என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது நீ இராணுவத்தில் சேர்ந்து பணிசெய்ய முடியவில்லையே என்று வருந்தாதே. உனக்கு வயது வருகின்ற வரைக்கும் நீ இருக்கக்கூடிய இடத்தில் குறிப்பாக உன்னுடைய குடும்பத்தில் இருக்கின்ற உன்னுடைய பெற்றோருக்கு, உன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு, நீ இருக்கக்கூடிய பகுதில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவி செய். அதுவே இந்த நாட்டிற்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை”
மக்களுக்குச் சேவை செய்ய நாம் பணக்காரராக, படித்தவராக, பெரியவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நாம் எந்த நிலையில் இருந்தாலும், எப்படிப்பட்ட நேரத்தில் இருந்தாலும் உதவி செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வில் வரக்கூடிய சிறுவன் நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றான்.
ஓய்வுநாளில் கைசூம்பியர் குணம்பெறல்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றார். அங்கே கை சூம்பிய ஒருவர் இருக்கக் காண்கின்றார். இவர் பிறவியிலே அப்படி இருக்கவில்லை. கட்டட வேளையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கை அப்படியானதாக விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். எனவே, பல ஆண்டுகள் வேலை பார்த்து, குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்த இந்த மனிதர், இப்போது கை சூம்பிப்போனதால் குடும்பத்திற்கு உதவ முடியாமல் இருந்ததை அறிந்த இயேசு, அவரை, அது ஓய்வுநாள் என்றெல்லாம் பாராது குணப்படுத்துகின்றார்.
இயேசு கைசூம்பியவரைக் குணப்படுத்திய காட்சியில், அவர்மீது குற்றம் காணும் நோக்குடன் இருந்த பரிசேயர்களைக் குறித்தும் சிறிது தெரிந்துகொள்வது நல்லது. இந்தப் பரிசேயர்கள் கைசூம்பியவர் அதே நிலையில் பல ஆண்டுகள் இருந்ததை நினைத்து எதுவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தப் போகிறார் என்று தெரிந்ததும் இயேசுவின்மீது குற்றம்காணத் துடியாய் துடிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இயேசு, ‘இது ஓய்வு நாளாயிற்றே! ஓய்வுநாளில் குணப்படுத்தினால் பரிசேயர்கள் தனக்கெதிராகக் கிளர்ந்தெழுவார்களே’ என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், கை சூம்பிய அந்த மனிதரைக் குணப்படுத்துகின்றார்.
இயேசுவின் வழியில்நடக்கின்ற நாமும்கூட, நம்முன்னே இருக்கக்கூடிய சவால்களைக் கண்டு பயப்படாமல், எல்லாச் சூழ்நிலையிலும் எல்லா மனிதர்களுக்கும் நன்மை செய்யத் தயாராக இருக்கவேண்டும்.
இறைவனின் அருளைப் பெற நாம் இறைவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் நாம் காணக்கூடிய இன்னொரு உண்மை, கைசூம்பிய அந்த மனிதர் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததாகும். இயேசு அந்த மனிதரைப் பார்த்து, “எழுந்து, நடுவே நில்லும், கையை நீட்டும்” என்று சொல்கின்றபோது, அவர் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, எழுகிறார்; நடுவே நிற்கிறார்; கையை நீட்டுகிறார். அதனால் இயேசுவிடமிருந்து குணம் பெறுகின்றார். நாம் இயேசுவிடமிருந்து குணமும் ஆசிரும் பெறவேண்டும் என்றால், இறைவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இறைவனிடமிருந்து ஆசிரைப் பெற முடியாது.
இன்றைக்கு இறைவனிடமிருந்து ஆசிரையும் நலமும் பெற விரும்புகின்ற பலர், இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் இருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை!.
சிந்தனை
‘இயேசு சென்ற இடங்களிலெல்லாம் நன்மை செய்தார்” என்று இறைவார்த்தை (திப 10:38) நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் நன்மை செய்வதற்கு நேரம், காலம் பார்த்துக் கொண்டிருக்காமல், எல்லாச் சூழ்நிலையிலும் எல்லா மனிதருக்கும் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். .
Source: New feed