பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம் புதன்கிழமை
லூக்கா 6: 20-26
யாருக்கு இறையாட்சி உரியது?
நிகழ்வு
‘அன்னை கபிரினி’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி, 1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த புலம்பெயர்ந்தோர் நடுவில் பணிசெய்யத் தொடங்கியபொழுது, அவரிடம் தங்குவதற்கு இடமோ, கையில் பணமோ எதுவுமே இல்லை. இவர் புலம்பெயர்ந்த மக்கள் நடுவில் ஆர்வத்தோடு பணிசெய்வதைப் பார்த்துவிட்டு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இவரும், புலம்பெயர்ந்தோரில் இருந்த அனாதைக் குழந்தைகளும் தங்குவதற்கு இடமும், கையில் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்.
இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் இவர், நியூயார்க்கில் ஆயராக இருந்த கோரிகன் (Corrigan) என்பவரைப் பார்க்கச் சென்றிருந்தார். காரணம் அவருடைய ஆளுகைக்குள் இவர் தங்கியிருந்தார். இவர் ஆயர் கோரிகனைப் பார்க்கச் சென்றிருந்தபொழுது ஆயர் இவரிடம், “புலம்பெயர்ந்த மக்கள் நடுவில் பணிசெய்ய வந்திருக்கும் நீங்கள், ஏதோ ஒரு செல்வந்தர் கொடுத்த இடத்தில் தங்கிக்கொண்டு, அவர் கொடுத்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு, காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றீர்கள்…! இது எத்தனை நாள்களுக்குப் போகும்?” என்றார்.
உடனே இவர் ஆயரிடம், “இறைவனிடம் நாம் வேண்டுகின்றபொழுது ‘இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்’ என்று சொல்லித்தான் வேண்டுகின்றோமே ஒழியே, ‘நாங்கள் இறக்கும்வரைக்கும் தேவையான உணவை எங்களுக்குத் தாரும்’ என்று வேண்டுவதில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு இவர் ஆயரிடம் தொடர்ந்து பேசினார்: “ஆயர் அவர்களே! நான் கடவுள்மீது நம்பிக்கை வைத்து இந்தப் பணியைத் தொடங்கியிருக்கின்றேன். கடவுள் எனக்குக் தேவையானதைத் தருவார்; அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”
கபிரினியிடமிருந்து இப்படியொரு பதில் வந்ததைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்த ஆயர், “நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பணி நல்லமுறையில் நடக்க எனது வாழ்த்துகள்” என்றார். இதற்குப் பிறகு கபிரினி ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துத் தனது பணியைத் தொடங்கினார். இவர் மக்கள் நடுவில் மிகவும் ஈடுபாட்டோடும், அர்ப்பண உள்ளத்தோடும் பணிசெய்வதைப் பார்த்துவிட்டுப் பலரும் தங்களால் இயன்றை இவருக்குத் தந்து உதவினார்கள். இதனால் இவர் புலம்பெயர்ந்தோர் நடுவில் மிகச் சிறந்தமுறையில் பணிசெய்து, பின்னாளில் புனிதையாக உயர்ந்தார்.
ஆம், அன்னை கபிரினி, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துத் தனது பணியைச் செய்து, பலருக்கும் ஒளியாய் விளங்கினார். இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழும் ஏழைகளை, “நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், இறையாட்சி உங்களுக்கு உரியதே” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஏழைகள் ஏன் பேறுபெற்றோர்?
நற்செய்தியில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்து, “ஏழைகளே! நீங்கள் பேறுபெற்றோர்” என்கின்றார். இயேசு தம் சீடரைப் பார்த்துச் சொன்ன இவ்வார்த்தைகள், அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், செல்வம் படைத்தோர்தான் கடவுளின் ஆசியைப் பெற்றோர்; அவர்கள்தான் பேறுபெற்றோர் என்ற புரிதல் மக்கள் நடுவில் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இயேசு “ஏழைகளே! நீங்கள் பேறுபெற்றோர்” என்று சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
ஏழைகள் பேறுபெற்றோர் என இயேசு ஏன் சொல்கின்றார் என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஏழைகளிடம் பணம் கிடையாது. அதனால் அவர்கள் பணத்தைச் சார்ந்து வாழாமல், பணத்தால், செல்வத்தால் ஏற்படும் தீமைகளுக்குள்ளும் வீழ்ந்துவிடாமல், இறைவனை மட்டுமே சார்ந்து, அவரை மட்டுமே நம்பி, அவரது வழியில் நடப்பார்கள். இதனாலேயே அவர்கள் பேறுபெற்றோராக மாறுகின்றார்கள்; இறையாட்சியையும் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்கின்றார்கள்.
அப்படியானால் செல்வந்தர் பேறுபெற்றோர் ஆகமுடியாதா?
ஏழைகளைப் பேறுபெற்றோர் என்று சொன்ன இயேசு, “செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!” என்கின்றார். இயேசு இவ்வாறு சொல்லக் காரணம், செல்வர்கள் செல்வம்தாம் எல்லாம் என்று அதையே சார்ந்து வாழ்வார்கள். இதற்கு நல்லதொரு எடுத்துகாட்டுதான் இயேசு சொல்லக்கூடிய பணக்காரன், ஏழை இலாசர் உவமை (லூக் 16: 19-31). இந்த உவமையில் வருகின்ற பணக்காரன் பணத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்துவந்தான்; ஆனால், இலாசரோ ஆண்டவரைச் சார்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார். இதனால் பணக்காரனுக்குப் பாதாளமும் அல்லது நரகமும் இலாசருக்கு விண்ணகமும் கிடைத்தது.
ஆகையால், நாம் பணத்தின்மீது அல்ல, படைத்தவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, பேறுபெற்றோர் ஆவோம்.
சிந்தனை
‘மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்’ (திபா 118: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நமக்கு இறையாட்சியை உரித்தாக்கும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுந்து, அவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed