(என்) தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்
நிகழ்வு
அன்பான கணவர், அருமையான இரண்டு பெண் குழந்தைகள் என்று மிரியத்தின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில், மிரியத்தின் கணவர் திடிரென ஒரு விபத்தில் சிக்கி இறந்துபோனார். கணவர் இறந்த துக்கத்திலிருந்து மீண்டுவருவதற்குள் அவளுக்கு இன்னோர் அதிர்ச்சி செய்தி வந்தது. அது என்னவெனில், அவளுக்கு புற்றுநோய் (Cancer) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மிகவும் மனமுடைந்து போன மிரியம் கண்ணீர் விட்டு அழுதாள்.
இதெல்லாம் நடந்து ஒரு மாதம் கழித்து மிரியத்தின் நெருங்கிய தோழி ஒருத்தி அவளைப் பார்ப்பதற்காக அவளுடைய வீட்டிற்குச் சென்றாள். செல்லும் வழியில் அவள், ‘கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளையும் வைத்துக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மிரியத்திற்கு மீண்டும் இப்படியொரு சோதனையா? வருத்தத்தில் அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாளோ?’ என்று பதைபதைப்போடு சென்றாள். அவள் மிரியத்தின் வீட்டை அடைந்து அவளைப் பார்த்துபொழுது மிரியம் மிகவும் தெளிவாக இருந்தாள். இதைப் பார்த்துப் வியந்துநின்ற மிரியத்தின் தோழி அவளிடம், “கணவனை இழந்த பின்பும் உனக்குத் புற்றுநோய் வந்திருக்கின்றது என்று தெரிந்தபின்பும் எப்படி உன்னால் இவ்வளவு தெளிவாக இருக்க முடிகிறது?” என்று கேட்டாள்.
அதற்கு மரியம் அவளிடம், “நான் என்னுடைய கணவனை இழந்தபின்பும் எனக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தபின்பும் கடவுளிடம் நான் இவ்வாறு வேண்டினேன்: ‘கடவுளே! நான் உம்முடைய நகத்தின் நுனியைப் பிடித்துக்கொண்டுதான் கடைசிய வரைக்கும் தொங்கவேண்டுமா? வேறு பிடிமானம் கிடையாதா?’ அப்பொழுது கடவுள் என்னிடம், ‘நீ ஏன் அப்படி நினைத்துக்கொண்டிருக்கின்றாய்… நான் உன்னை என்னுடைய கைகளில் வைத்துத் தாங்கிக்கொண்டிருக்கின்றேன்… அதனால் நீ எதை நினைத்தும் வருந்தாதே’ என்றார். இதற்குப் பின்பு நான் கடவுளின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து வாழத் தொடங்கினேன். நேற்றைய நாளில் என்னுடைய கணவருக்கு அறிமுகமான செல்வந்தர் ஒருவர் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் என்னுடைய இரண்டு மகள்களையும் ‘பெண்கேட்டு’ வந்தார். அவர் என்னுடைய இரண்டு மகள்களையும் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு எந்தவொரு சீர்வரிசையும் இல்லாமல் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி தந்துவிட்டுச் சென்றார். அவர் சொன்னதைக் கேட்பதற்கு எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அந்நேரத்தில் நான் இவ்வாறு நினைத்துக்கொண்டேன்: ‘கடவுள் எனக்குச் சொன்னது போன்று அவர் என்னைக் கைவிட்டுவிடவில்லை… அவர் என்னையும் என்னுடைய குடும்பதையும் தனது கைகளில் வைத்துத் தாங்கிக்கொண்டிருக்கின்றார்… அவர் எங்கள் மத்தியில் இப்பொழுதும் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.’ அதனால்தான் நான் தொடர் பிரச்சினைகளுக்கும் பின்னும் இவ்வளவு தெளிவாக இருக்கிறேன்” என்றார்.
கடவுள் தன் மக்களை விட்டு விலகுவதுமில்லை, பிரிவதுமில்லை. அவர் இன்றைக்கும் தன் மக்களுக்கு மத்தியில் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றும் செயலாற்றும் தந்தைக் கடவுள்
இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில், இயேசு முப்பத்தெட்டு ஆண்டுகளாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடந்த உடல்நலமற்ற ஒருவரைக் குணப்படுத்தியதைக் குறித்து வாசித்தோம். இன்றைய நற்செய்தியில் அந்த உடல்நலமற்ற மனிதரைக் குணப்படுத்தியபின்பு இயேசு பேசிய வார்த்தைகளையும் அதற்கு யூதர்கள் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்பதையும் குறித்து வாசிக்கின்றோம்.
‘என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகின்றேன்” இதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு பேசுகின்ற வார்த்தைகளாக இருக்கின்றது. இயேசு சொல்வதுபோல் தந்தைக் கடவுள் இன்றும் செயலாற்றுகின்றாரா? என்றால் உறுதியாக ஆம் என்று சொல்லவேண்டும். எவ்வாறெனில், தந்தைக் கடவுளும் இயேசுவும் வேறு வேறு அல்ல, இயேசுவைக் காண்பது தந்தைக் கடவுளைக் காண்பது (யோவா 14:9). இயேசுவின் வார்த்தைகளிலும் அவர் ஆற்றிய செயல்களிலும் தந்தைக் கடவுளைக் கண்டுகொள்ளலாம். அதனால்தான் இயேசு யூதர்களிடம், “தந்தை (தன் வழியாக) இன்றும் செயாலாற்றுகின்றார்” என்கின்றார்.
இயேசுவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய யூதர்கள்
இயேசு உடல்நலம் குன்றியவரைக் குணப்படுத்தியது ஓர் ஓய்வுநாள் என்று அவரிடம் பிரச்சினையில் ஈடுபட்ட யூதர்கள், அவர் கடவுளை ‘என் தந்தை’ என்று சொன்னதைக் கேட்டு, இன்னும் சீற்றம் அடைகின்றார்கள். காரணம் யூதர்கள் கடவுளை ‘எங்கள் தந்தை’ என்று சொல்வதுதான் வழக்கம். எனவேதான் இயேசு அவர்களிடம் “தந்தை, தாம், வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளேன்” என்று தந்தைக் கடவுளுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையைக் குறித்துப் பேசி அவர்களை வாயடைக்கின்றார்.
சிந்தனை
இயேசு சொன்ன, ‘(என்) தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்’ என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில், அவர் நம் வழியாகச் செயல்பட நம்மையே முழுமையாய் அவருக்குக் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed