பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 6: 30-35
‘நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்…?’
நிகழ்வு
எரிகோவிற்கு அருகில் இருந்த ஒரு மலைக்குகையில் துறவி வாழ்ந்து வந்தார். இவர் பெரும்பாலான நேரங்களில் இறைவேண்டல் செய்துகொண்டே இருந்தார். ஒருநாள் இவர் இருந்த குகைக்கு வழிப்போக்கர் ஒருவர் வந்தார். அவர் துறவியிடம், “எனக்கு மிகவும் பசிக்கின்றது; ஏதாவது உணவிருந்தால் கொடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார். உடனே துறவி, உள்ளே சென்று, ஒரு தட்டில் பெரிய ரொட்டியைக் கொண்டுவந்து, அவர் முன் வைத்தார். பின்னர் இவர் அவரிடம், “இருங்கள்! பருப்புச் சாறும் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று, பருப்புச் சாறைக் கொண்டுவந்தார். இவர் திரும்பி வந்து பொழுது, தட்டில் இருந்த பெரிய ரொட்டியைக் காணவில்லை. அதற்குள் அவர் சாப்பிட்டிருந்தார். துறவிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.
பின்னர் துறவி பருப்புச் சாறு இருந்த கிண்ணத்தை அவர் பக்கத்தில் வைத்துவிட்டு, இன்னொரு ரொட்டியும் கொஞ்சம் பருப்புச் சாறும் கொண்டு வந்து அவர்முன் வைத்தார். இந்த முறையும் துறவி திரும்பி வந்தபொழுது, கிண்ணத்தில் இருந்த பருப்பு சாறு காலியாயிருந்தது. இப்படியே ஓரிருமுறை நடந்துகொண்டிருந்தது. வியப்பு மேலிட்டவராய், துறவி தனக்கென்று வைத்திருந்த ரொட்டியையும் பருப்பு சாறையும் எடுத்து வந்து அவர் முன் வைத்தார். அவரோ அவற்றை ஒருவினாடியில் காலிசெய்தார். துறவியோ எதுவும் பேசமுடியாதவராய் வாயடைத்து நின்றார்.
சிறிதுநேரத்திற்குப் பின்பு துறவி அவரிடம், “என்னிடமிருந்த எல்லா ரொட்டிகளையும்; ஏன், எனக்கென வைத்திருந்த ரொட்டியையும் உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். இனிமேல் உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை” என்றார். அதற்கு அந்த வழிபோக்கர், “அவ்வளவுதானா…?” என்று வருத்தத்தோடு சொன்னார். பின்னர் துறவி அவரிடம், “அது சரி, இப்பொழுது நீங்கள் எங்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். “எனக்குச் சரியாகப் பசி எடுப்பதில்லை. அதனால்தான் நான் எனக்கு நன்றாகப் பசி எடுப்பதற்காகத் தமஸ்கு நகரில் உள்ள ஒரு பிரபல மருத்துவரைப் பார்க்க போகிறேன். திரும்பி வருகின்றபொழுது, உங்களைப் பார்த்துவிட்டுப் போகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட துறவிக்கு மயக்கம் வராத குறையாகப் போய்விட்டது. உடனே துறவி ‘இந்த மனிதருக்குப் பசிக்காதபோதே, இப்படிச் சாப்பிடுகின்றாரே…! நன்றாகப் இவருக்கு நன்றாகப் பசியெடுத்தால் என்னாவது?’ என்று மனத்திற்குள் நினைத்தவராய், “நாளைக்கு நான் புனித பயணம் மேற்கொள்ள இருக்கின்றேன். அதனால் நான் இங்கு இருக்கமாட்டேன்” என்று ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி அவரிடமிருந்து தப்பித்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற வழிபோக்கரைப் போன்றுதான் பலரும் இருக்கின்றார்கள். இவர்களை எதைக்கொண்டும் திருப்திப்படுத்த முடியாது. நற்செய்தி வருகின்ற மக்கள், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தபோதும், அதில் திருப்தி அடையாமலும் அவரை நம்பாமலும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மனநிறைவு அடையாத மக்கள்
இன்றைய நற்செய்தி வாசகம், கப்பர்நாகுமில் இருந்த இயேசுவைத் தேடி வந்த மக்களுக்கும் அவருக்கும் இடையேயான உரையாடலாக இருக்கின்றது. இயேசு மக்களிடம், “கடவுள் அனுப்பியவரை நம்புதே கடவுளுக்கேற்ற செயல்” என்று சொல்கின்றபோது, அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகின்றீர்?“ என்று கேட்கின்றார்கள்.
இயேசு ஓரிரு நாள்களுக்கு முன்புதான் ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருந்தார் (யோவா 6: 1-15). இதைக் கண்ட பின்பும்கூட அவர்கள் திருப்தி அடையாதவர்களாய், நீர் என்ன அரும் செயல் செய்கிறீர்… எங்கள் முன்னோர் உண்பதற்கு வானிலிருந்து (மோசே) உணவு அருளினார் என்கின்றார்கள். யூதர்களிடம், மோசேதான் நாள்தோறும் பாலைநிலத்தில் உணவு அருளினார் என்ற எண்ணம் இருந்தது (விப 16: 4; திபா 78: 24-25). அதனால் அவர்கள், இயேசு ஒருநாள்தானே உணவு வழங்கினார்; நாள்தோறும் உணவு வழங்கவில்லையே! என்று அவரை நம்ப மறுக்கின்றார்கள்.
மோசே அல்ல, கடவுளே விண்ணகத்திலிருந்து உணவு அருள்பவர்
மோசேதான் பாலைநிலத்தில் உணவு அருளினார் என்று அறியாமையில் மக்கள் பேசியபொழுது, ஆண்டவர் இயேசு அவர்களிடம், மோசே அல்ல, தந்தைக் கடவுளே அவர்களுக்கு உணவு அருளினார் என்று விளக்கமளிக்கின்றார். அப்பொழுது மக்கள் அவரிடம் சமாரியப் பெண்மணியைப் போன்று, ‘ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்பொழுது தாரும்” என்று கேட்கின்றார்கள். (யோவா 4: 15). உடனே இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்குப் பேசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே இராது” என்கின்றார்.
மக்களோ திருப்தி அடியாமல் உடல் உணவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, இயேசுவோ, தன்மீது நம்பிக்கை கொள்வோருக்கு அழியாத உணவை அளிப்பதாகக் கூறுகின்றார். உடல் உணவு அழிந்துவிடும்; ஆன்ம உணவு அழியாது. அத்தகைய உணவைப் பெற, நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும். இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வதற்குத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘தன்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்’ (யோவா 3: 15) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed