தவக்காலம் நான்காம் வாரம்
திங்கட்கிழமை
யோவான் 4: 43-54
அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கிலாந்தில் ஒரு பெண் அனாதை இல்லம் கட்டுவதற்கு நிலம் வேண்டி, அங்கிருந்த ஆளுநரிடம் விண்ணப்பித்திருந்தாள். அந்தப் பெண்ணோ கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தவள்; ஆளுநரோ அதற்கு நேர் எதிராக கடவுள்மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர். அவர் அந்தப் பெண்ணின் விண்ணப்பத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, பாறைகள் அதிகமாக இருந்த ஒரு பகுதியை கொடுத்து, “நீங்கள் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிற்றே… உங்கள் கடவுளிடம், அங்கிருக்கின்ற பாறைகளெல்லாம் பெயர்ந்து, அருகிலிருக்கின்ற கடலில் போய் விழட்டும் என்று சொல்லி வேண்டினால், அது நிச்சயம் நடக்கும் என்றார். அந்தப் பெண்ணும் பதிலுக்கு எதுவும் பேசாமல், அவர் கொடுத்த பாறைநிலத்தை வாங்கிக்கொண்டு, அதில் அனாதை இல்லம் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டார். அப்படிப்பட்ட நாட்களில் அவர் தவறாமல், “இயேசுவே! இங்குள்ளப் பாறைகள் பெயர்ந்து கடலில் போய் விழட்டும்” என்று உருக்கமாக வேண்டிவந்தார்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன. ஒருநாள் அந்தப் பெண்ணை வந்து சந்தித்த பொறியாளர் ஒருவர், “அம்மா! நாங்கள் கடலில் பாலம் கட்ட இருக்கின்றோம்… அதனால் நீங்கள் இருக்கின்ற பகுதியில் உள்ள பறைகளை எல்லாம் எடுத்துக்கொள்ள சம்பாதித்தால், அது எங்களுக்கு வசதியாக இருக்கும்… பாறைகளுக்கு உண்டான பணத்தையும் நாங்கள் தந்துவிடுகின்றோம்” என்றார். பொறியாளர் இவ்வாறு சொன்னது அந்தப் பெண்ணின் காதில் இன்பத்தேன் வந்து பாயச் செய்தது. அப்பொழுது அவர் மனதிற்குள்ளே, “இறைவா! இந்தப் பகுதியில் உள்ள பாறைகளெல்லாம் பெயர்ந்து கடலுக்குள் போகவேண்டும் என்று தொடர்ந்து மன்றாடிவந்தேன். இப்பொழுது என்னுடைய மன்றாட்டைக் கேட்டிருக்கின்றீர். அதற்கு உமக்கு நன்றி” என்றார்.
இதற்குப் பின்பு பொறியாளர் தன்னுடைய பணியாளர்களைக் கொண்டு, அந்தப் பெண்ணின் இடத்தில் இருந்த பாறைகளை எல்லாம் வெடிவைத்துப் பெயர்த்துக் கொண்டுசென்று, பாலம் கட்டத் தொடங்கினார். மேலும் அந்த பாறைகளுக்கு உரிய பணத்தையும் அவருக்குக் கொடுத்தார். இதனால் அவர் அந்தப் பணத்தைக் கொண்டு அவ்விடத்தில் ஓர் அனாதை இல்லத்தைக் கட்டியெழுப்பினார்.
இறைவனிடம் நம்பிக்கையோடு வேண்டிவோர்க்கு, அவர் தன் ஆசியை அபரிவிதமாய்த் தருவார் என்ற உண்மையை இந்த இந்நிகழ்வானது மிக அழகாக எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும், இயேசுவிடம் நம்பிக்கையோடு வந்து, நலம் பெற்றுச் சென்ற ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் யார்? அவர் இயேசுவிடமிருந்து பெற்ற நன்மை என்ன? என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
சாகும் தருவாயிலிருந்த தன் மகனை நலமாக்க வருமாறு இயேசுவிடம் வந்த அரச அலுவலர்
நற்செய்தி வாசகத்தில், இயேசு கலிலியாவிலிருந்து கானாவிற்கு வருகின்றார். இயேசு அங்கு வந்திருக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்ட அரச அலுவலர் ஒருவர், சாகும்தருவாயில் இருந்த தன்னுடைய மகனைக் குணப்படுத்த வருமாறு இயேசுவிடம் வந்து கேட்கின்றார். இந்த மனிதர் மத்தேயு நற்செய்தியில் வரும் நூற்றுவர் தலைவரா? (மத் 8: 5-13) அல்லது வேறோர் மனிதரா? என்றால், வேறோர் மனிதர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், நூற்றுவத் தலைவர் இயேசுவிடம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் இவர் இயேசுவிடம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
இயேசுவிடம் வருகின்ற இந்த அரச அலுவலர், இயேசுவைத் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு, அதுவும் தன் மகன் இறக்குமுன் வருமாறு கேட்கின்றார். நூற்றுவத்தலைவர் இயேசுவிடம் அப்படிக்கேட்கவில்லை. அவர், “ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்னுடைய பையன் நலமடைவான்” என்றுதான் கேட்கின்றார். எனவே, இன்றைய நற்செய்தியில் வருகின்றவரும் நூற்றுவத் தலைவரும் வேறுவேறு என்று உறுதியாகச் சொல்லலாம். இயேசுவைத் தன்னுடைய வீட்டிற்கு அதுவும் தன் மகன் இறக்குமுன் வருமாறு அழைத்த அரச அலுவலரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உன் மகன் பிழைத்துக் கொள்வான்” என்கின்றார்.
இயேசு சொன்ன வார்த்தைகளை நம்பிச் சென்ற அரச அலுவலர்
தொடக்கத்தில் சிறிது நம்பிக்கைக் குறைவோடு இயேசுவிடம் வந்த அரச அலுவலர், இயேசு சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பிச் சென்று, தன் மகன் நலமடைந்து இருப்பதைக் காண்கின்றார். அவர் இயேசுவின் வார்த்தைகளை நம்பியதால், பயணத்தைத் துரிதப்படுத்தாமல், மறுநாள்தான் அவருடைய பணியாளர்களையும் பின்னர் அவருடைய மகனையும் காண்கின்றார். இதுவே அவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. மறுபக்கம் இயேசு கானாவில் நிகழ்த்திய இரண்டாம் அருமடையாளமாக இது இருக்கின்றது. இதற்கு முன்னதாக இயேசு கானாவில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. முன்னது தாயின் பரிந்துபேசுதலாலும் பின்னது ஒரு தந்தையின் பரிந்துபேசுதலாலும் நடந்தது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.
சிந்தனை
‘நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்’ (1 பேதுரு 2:6) என்கின்றது இறைவார்த்தை. இயேசுவிடம் வந்த அரச அலுவலர், அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டார். அதனால் அவர் தன்னுடைய மகனுக்கு எப்படியும் குணம் கிடைக்கும் என்று பதற்றமில்லாமல் வீட்டிற்குச் செல்கின்றார். நாமும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால், எதற்கும் பதற்றமடையத் தேவையில்லை. ஆகவே, இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed