பொதுக்காலம் இருபதாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 23: 1-12
“தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்”
நிகழ்வு
‘Cure of Ars’ என்று அன்போடு அழைக்கப்படுகின்றவர் அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி. இவர் ஆர்ஸ் நகரில் பங்குப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, இவர் ஒரு வித்தியாசமான பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். அது என்னவெனில், நின்றுகொண்டே உணவு உட்கொள்வது. சில நேரங்களில் இவர் உணவு உட்கொண்டிருக்கும்பொழுது, யாராவது இவரை வெளியே இருந்து அழைத்தால், சாப்பாட்டுத் தட்டைக் கீழே வைக்காமல் அப்படியே அதைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்துவிடுவார். ஒருவேளை வறியவர், பிச்சைக்காரர் என யாராவது அழைத்தால், அவரிடம் இவர் தன்னுடைய சாப்பாட்டு தட்டிலிருக்கும் உணவைக் கொடுத்துவிட்டு, சிறிதுநேரம் அவர்களோடு பேசிவிட்டு அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வருவார்.
இப்படியிருக்கையில் ஒருநாள் இவர் வழக்கம்போல் நின்றுகொண்டு உணவை உட்கொள்கையில், யாரோ ஒருவர் இவரை வெளியே இருந்து அழைக்க, இவர் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டோடு வெளியே சென்றார். அங்கொரு பிச்சைக்காரர் இருந்தார். அவரிடம் இவர் தன்னிடம் இருந்த உணவைக் கொடுத்துவிட்டு, அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் புதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவர் ஜான் மரிய வியான்னியிடம், “இங்கு ஆர்ஸ் நகர் வியான்னி எங்கிருக்கின்றார்?” என்றார். “நான்தான் அவர்” என்று வியான்னி சொன்னதும், வந்தவர் மிகவும் வியப்புகுள்ளாகி நின்றார்.
பின்னர் வந்தவர் வியான்னியிடம், “நீங்கள்தான் ஆர்ஸ் நகர் வியான்னியா, பல்வேறு இடங்களிலிருந்தும் வரக்கூடிய மக்களுக்கு ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கக்கூடிய நீங்கள் மிகவும் ஆடம்பரமாக உடையுடுத்திக் காட்சிக்கு இனியவராக இருப்பீர்கள் என்று நினைத்தால், இப்படி மிகவும் சாதாரண உடையில், பிச்சைக்காரர்களிடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு தாழ்ச்சியுள்ள அருள்பணியாளராக இருக்கின்றீர்களே!” என்று வியப்போடு சொன்னார். இதை வியான்னி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், வழக்கம் போலவே தாழ்ச்சியோடு இருந்தார் (More Anecdotes of the Great – J.Maurus)
ஆம், ஆர்ஸ் நகர்ப் புனித ஜான் மரிய வியான்னியிடம் ஒப்புரவு அருளடையாளம் பெற கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் இறைமக்கள் எனப் பலரும் வந்தார்கள். அப்படியிருந்தும் அவர் தாழ்ச்சியோடு இருந்தார். அதனாலேயே அவரைக் கடவுள் மிகவும் உயர்த்தினார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் ஆண்டவர் இயேசு, “தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர்
நற்செய்தியில் இயேசு, பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் மக்களிடம் இதையெல்லாம் செய்யவேண்டும்… அதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லி வந்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், மக்களிடம் அவர்கள் எதையெல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லி வந்தார்களோ, அவற்றை அவர்கள் சிறிதுகூட கடைப்பிடிக்க என்பதில்லை என்பதுதான். இவ்வாறு அவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தைக் கொண்டு மக்களை அடக்கியாண்டும், அதன்மூலம் அவர்கள் மக்களிடமிருந்து மரியாதையும் வணக்கமும் பெறமுயன்றார்களே ஒழிய, தாழ்ச்சியோடு நடக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களுடைய செயலால் மிகவும் தாழ்த்து போனார்கள்.
தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்
ஒரு தலைவருக்கு அழகு தலைக்கனத்தோடு இருப்பது அல்ல, தாழ்ச்சியோடு இருப்பது. ஓர் அதிகாரிக்கு அழகு, அகங்காரத்தோடு இருப்பது அல்ல, அடக்கமாக இருப்பது. ஒரு நல்ல தலைவராக, நல்ல ஆயாராக இருந்த இயேசு மிகுந்த தாழ்ச்சியோடு இருந்தார் என்பதை திருவிவிலியத்தில் வருகின்ற பல பகுதிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன (மத் 20: 28; யோவா 13: 1-15; பிலி 2: 6-11). இயேசு தாழ்ச்சியோடு இருந்தது மட்டுமல்லாமல், தன்னுடைய சீடர்களும் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் (மத் 20: 26). அப்படியானால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாமும் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்பதுதான் அவர் நமக்குச் சொல்லக்கூடிய செய்தியாக இருக்கின்றது.
இன்று பலர் ‘அதிகாரம்’ என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு மற்றவர்களை அடக்கியாண்டுகொண்டு இருக்கின்றார்கள். அதிகாரம் என்பது அடக்கியாள அல்ல, அடக்கத்தோடு அன்புப் பணி செய்ய. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் தாழ்ச்சியோடு இயேசுவின் பணியைச் செய்வோம்.
சிந்தனை
‘ஒருவர் ஒழுக்கமானவர் என்பதை அவரிடம் உள்ள தாழ்ச்சியை வைத்துக் கண்டு கொள்ளலாம்’ என்பார் அக்குயினோ நகர்ப் புனித தாமஸ். ஆகையால், நமது வாழ்விற்கு அழகு சேர்க்கும் தாழ்ச்சி என்ற புண்ணியத்தோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed