பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 19: 13-15
“அவர்களைத் தடுக்காதீர்கள்”
நிகழ்வு
கடைத்தெருவிற்குச் சென்று காய்கறிகளையும் பலசரக்குச் சாமான்களையும் வாங்கிக்கொண்டு, அவற்றைத் தலையில் வைத்துச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்ட வந்த செல்வியிடம், வேகமாக ஓடிவந்த அவளுடைய மூத்த மகன் அருள், “அம்மா! நீங்கள் கடைக்குப் போனபிறகு தம்பி என்ன செய்தான் தெரியுமா…? தன்னிடமிருந்த பென்சிலால் அவன் வீட்டுச்சுவரில் எதை எதையோ கிறுக்கி வைத்திருக்கின்றான். வந்து பாருங்கள்!” என்றான்.
இதைக் கேட்டு செல்விக்குக் கோபம் கோபமாய் வந்தது. அவள் தன்னுடைய தலையில் இருந்த சுமையை கீழே இறக்கி வைத்து வைத்துவிட்டு, “இப்பொழுது அவன் எங்கே இருக்கின்றான்?” என்று மூத்தவனிடம் கேட்க, அவனோ, “நீங்கள் வருவது தெரிந்ததும், வீட்டுக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டான்” என்றான்.
உடனே செல்வி தன்னுடைய கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு, “அன்பு… அன்பு…” என்று கத்திக்கொண்டு வீட்டுக்குப் பின்னால் போனாள். அதற்குள் அன்பு அங்கிருந்து ஓடியே விட்டான். ‘எப்படியும் இவன் வீட்டிற்கு வந்துதானே ஆகவேண்டும்; அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்!’ என்று நினைத்துக்கொண்டு, கடைத்தெருவிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளையும் மளிகைச் சாமான்களையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள் செல்வி.
அப்பொழுது அவள் சுவரில் கண்ட காட்சி அவளுடைய கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்துவிட்டன. ஏனென்றால், சுவரில் ஒரு தாய் தன்னுடைய தோளில் தன் பிள்ளையைச் சுமப்பது போன்றும், அதற்குக் கீழ் ‘அம்மா நான் உங்களை அன்பு செய்கின்றேன்’ என்றும் எழுதப்பட்டிருந்தன. இக்காட்சிதான் செல்வியின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தன. இதற்குப் பின்பு அவள் ஓரிடத்தில் நிலைகொள்ளவில்லை. ‘இப்படியொரு திறமையான மகனைப் பெற்றதற்கு நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்!’ என்று நினைத்தவளாய், இளைய மகனின் வருகைக்காக மாலை வரை காத்திருந்தான். அவன் வீட்டிற்கு வந்ததும், அவனைக் கட்டியணைத்துக் கொண்ட செல்வி, “என் அன்பு மகனே! உன்னிடத்தில் இப்படியொரு திறமையா…? இது தெரியாமல் உன்னை அடிக்கத் துணிந்துவிட்டேனே! என்னை மன்னித்துக் கொள்” என்றாள். இதற்குப் பிறகு அவள், தன்னுடைய மகன் ஓவியம் வரைவதற்கு என்னென்ன உதவிகளையெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து அவனை மிகப்பெரிய ஓவியனாக்கினாள்.
ஆம். சிறு பிள்ளைகள் அல்லது குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் திறமையானவர். ஆதலால், அவர்களை அவர்களுடைய திறமையில் நாம் வளர்த்தெடுக்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் தடுக்கக் கூடாது. இத்தகைய செய்தியைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
குழந்தைகளைத் தடுத்த சீடர்கள்
பொதுவாக யூதப் பெற்றோர்கள் யூத இரபிகளிடமிருந்து தங்களுடைய குழந்தைகளுக்கு ஆசி பெறுவார்கள். இந்த அடிப்படையில், மக்களால் போதகர், இறைவாக்கினர், என்று அறியப்பட்ட இயேசு தங்களுடைய குழந்தைகளுக்கு ஆசி வழங்கினால், அது நன்றாக இருக்கும் என்பதற்காக யூதப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு இயேசுவிடம் வருகின்றனர். யூதப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை யூத இரபிகளிடமும் இயேசுவிடமும் கொண்டு வந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில், குழந்தைகள் இரபிகள் அல்லது இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதால்தான். இத்தகைய காரணங்களால் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வருகின்ற யூதப் பெற்றோர்களைத் தன்னுடைய சீடர்கள் தடுத்ததால்தான், இயேசு அவர்களிடம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்” என்கின்றார்,
ஆம், சிறு பிள்ளைகள் இறையன்பில் (தங்களுடைய திறமையில்) வளரவேண்டியவர்கள். அவர்களைத் தடுப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.
குழந்தைகளை வளரவிட்ட இயேசு
தன்னிடம் வந்த குழந்தைகளைத் தடுக்கவேண்டாம் என்று தன்னுடைய சீடர்களிடம் சொன்ன இயேசு, தொடர்ந்து, “விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்று அவர்களுக்கு ஆசி வழங்குகின்றார். இயேசு அவர்களைத் தொட்டு ஆசி வழங்கியதன் மூலம் அவர்கள் இறையன்பில் (தங்களுடைய திறமையில்) வளரவிடுகின்றார். யூதச் சமூகம் ஆணாதிக்க சமூகம். அது பெண்களையும் குழந்தைகளையும் வளரவிடாமல் தடுத்தது. இதற்கு முற்றிலும் மாறாக இயேசு, குழந்தைகளுக்கு ஆசி வழங்கியதன்மூ லம் அவர்களை வளரவிடுகின்றார்.
இயேசு சிறு பிள்ளைகளை தடுக்காமல், வளரவிட்டதுபோல், நாம் அவர்கள் வளர்வதற்குக் காரணமாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘’ஒருவன் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும், அவன் அன்பு செலுத்த ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், அவனை விடப் பேறுபெற்றவன் வேறு யாரும் கிடையாது’ என்பார் கதே என்ற அறிஞர். ஆகையால், நாம் கடவுள் கொடுத்திருக்கும் மிகப்பெரிய கொடையாகிய குழந்தைகள் இறையன்பிலும் பிறரன்பிலும் தங்களுடைய திறமையிலும் வளரக் காரணமாக இருப்போம். அவர்களுக்கு ஒருபோதும் தடையாய் இல்லாமல் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed