பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் வியாழக்கிழமை
மத்தேயு 18: 21-19: 1
மற்றவர்களை மன்னிக்காதவர்கள் தங்களோடு நாற்றத்தைச் சுமந்துகொண்டே செல்கின்றார்கள்!
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் தன்னுடைய சீடரை அழைத்து, அவரிடம் ஒரு சாக்குப் பையையும், கொஞ்சம் உருளைக்கிழங்குகளையும் கொடுத்து, “உனக்குப் பிடிக்காத ஒருசிலர் இருப்பார்கள் அல்லவா…! குறிப்பாக உனக்கெதிராகக் குற்றம்செய்து, நீ மன்னிக்காத மனிதர்கள்! அவர்களுடைய பெயர்களையெல்லாம் இந்த உருளைக்கிழங்கில் எழுதிவிட்டு, அவற்றை இந்தச் சாக்குப் பையில் போட்டுக்கொண்டு, நான் சொல்கிற வரைக்கும் இதைச் சுமந்து கொண்டே இருக்கவேண்டும்” என்றார்.
துறவி இவ்வாறு சொன்னதற்குச் சீடர், ‘இதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது?’ என்று தன் மனத்தில் நினைத்தவராய், துறவி தன்னிடத்தில் கொடுத்த உருளைக்கிழங்குகளில், தான் வெறுத்து ஒதுக்கும், அதிலும் குறிப்பாக நான் மன்னிக்காமல் இருக்கும் மனிதர்களின் பெயர்களை எழுதி, அவற்றைச் சாக்குப் பையில் போட்டுக்கொண்டு, தான் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அதைச் சுமந்துகொண்டே சென்றார்.
நாள்கள் மெல்ல நகர்ந்தன. ஓரிரு வாரங்களிலேயே சீடர் சுமந்துகொண்டு சென்ற சாக்குப் பையிலிருந்து நாற்றம் அடிக்கத் தொடங்கியது. இதைச் சீடரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் துறவி சொல்லும்வரை அதைச் சுமந்துகொண்டே சென்றார்.
ஒருநாள் துறவி, சீடரைத் தன்னிடம் வரவழைத்தார். அவரும் துறவியின் முன்பு போய் நின்றார். அப்பொழுது துறவி சீடரிடம், “இத்தனை நாள்களும் நான் உன்னை, நீ மன்னிக்க மறுத்த மனிதர்களின் பெயர்களை உருளைக்கிழங்குகளில் எழுதி, அவற்றைச் சாக்குப் பையில் போட்டுச் சுமக்கச் சொன்னேனே! அந்த அனுபவம் எப்படி இருந்தது?” என்றார். அதற்குத் சீடர் துறவியிடம், “நீங்கள் என்னிடம் கொடுத்த பணி மிக எளிதானது என்றுதான் தொடக்கத்தில் நினைத்தான்; ஆனால், நாள்கள் ஆக ஆக இதிலிருந்து என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாத நாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதன்பிறகுதான் எனக்குப் புரிந்தது, தீமை செய்தவர்களை மன்னிக்காமல் இருப்பதும் நாற்றமடிக்கக்கூடிய செயல்தான் என்று. ஆகையால், நான் எனக்கு எதிராகத் தீமை செய்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மன்னிக்கத் தொடங்கிவிட்டேன்” என்றார்.
இதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த துறவி, “உனக்கு எதிராகத் தீமை செய்தவர்களை நீ மன்னிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்படியொரு செயலை உன்னிடம் செய்யச் சொன்னேன். நீ அதுபோன்று செய்துவிட்டாய். வாழ்த்துகள்” என்றார்.
ஆம், நாம் நமக்கெதிராகத் தீமைச் செய்தவர்களை மன்னிக்காமல் இருக்கின்றபொழுது, நாம் நம்மோடு நாற்றத்தைத்தான் சுமந்துகொண்டு செல்கின்றோம். இந்த உண்மையை எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகம், இறைவனிடமிருந்து மன்னிப்புப் பெற, நாம் நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களை மன்னிக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஏழுமுறை மன்னித்தால் போதுமா?
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற பேதுரு, “என் சகோதர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்று கேட்கின்றார். பேதுரு இயேசுவிடம் இவ்வாறு கேட்பதன் மூலம், மன்னிப்பதில் தான் தாராளமானவன் என்பதைக் காட்டிக்கொள்ள விரும்புகின்றார். எவ்வாறெனில், யூத இரபிகள், ஒருவர் தவறு செய்தால், அவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று சொல்லி வந்தார்கள்; ஆனால், பேதுரு மூன்றோடு மூன்றைக் கூட்டை, அத்தோடு ஒன்றைக் கூட்டி, ஏழுமுறை மட்டுமா? என்று இயேசுவிடம் கேட்கின்றார். ஏழு என்பது திருவிவிலியத்தில் முழுமையைக் குறிக்கும் ஓர் எண். அதனால் பேதுரு தவறு செய்யும் தன் சகோதரர், சகோதரியை முழுமையாக மன்னிப்பதாகச் சொல்லும் தன்னை இயேசு பாராட்டுவார் என்று நினைத்து இவ்வாறு சொல்கின்றார்.
நிபந்தனையின்றி மன்னிக்கச் சொல்லும் இயேசு
மன்னிப்பதில் தான் தாராளமாக இருக்கின்றேன் என்பதை உணர்த்துவதற்காக, “ஏழுமுறை மட்டுமா?” என்று இயேசுவிடம் கேட்ட பேதுருவை இயேசு பாராட்டவில்லை. மாறாக, அவர் பேதுருவிடம், நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அதற்காக அவர் சொல்லக்கூடிய உவமைதான் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை. இந்த உவமையில் வரும் மன்னர், கடவுளைப் போன்று தாராளமாக மன்னிக்கின்றார்; ஆனால், மன்னிப்புப் பெற்ற பணியாளரோ தன்னிடம் குறைந்த அளவே கடன்பெற்ற வேறொரு பணியாளரை மன்னிக்காமல் விடுகின்றார். இதனால் அவர் மன்னரிடமிருந்து கடுமையான தண்டனையைப் பெறுகின்றார். ஆம். நாம் மற்றவரை நிபந்தனையின்றி மன்னித்தால், மன்னிப்புப் பெறுவோம். மன்னிக்காமல் இருந்தால், மன்னிப்புப் பெற மாட்டோம்.
ஆகவே, நாம் பிறர்செய்த குற்றங்களை நிபந்தனையின்றி மன்னிப்போம். அதன்மூலம் இறைவனிடமிருந்து நிபந்தனையின்றி மன்னிப்பு பெறுவோம்.
சிந்தனை
‘மன்னிப்பே மகிழ்ச்சி என்ற பேரின்ப வீட்டிற்கான சாவி’ என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் பிறர்செய்த குற்றங்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed