பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் புதன்கிழமை
லூக்கா 11: 1-4
“எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்”
நிகழ்வு
ஒரு காலத்தில், குறிப்பிட்ட ஒரு குருமடத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அந்தக் குருமடத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த மூன்று அருள்பணியாளர்கள் ஒன்றிணைந்து வந்தார்கள்.
அப்பொழுது ஓர் அருள்பணியாளர் மற்ற இரண்டு அருள்பணியாளர்களிடம், “குருமடத்திற்கு நிதியுதவி செய்ய யாருமே முன்வரவில்லை” என்று தன்னுடைய வேதனையைப் பகிர்ந்து கொண்டார். இதை ஆமோதிப்பதுபோல் இன்னோர் அருள்பணியாளர், “நானும்கூட இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன்” என்றார்.
இவர்கள் இருவரும் பேசி முடித்ததும், மூன்றாவது அருள்பணியாளர், “நாம் நம்முடைய ஆற்றலை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால், நமக்குக் கடைசிவரைக்கும் ஒன்றும் கிடைக்காது. ஏனென்றால், நாம் வெறும் ‘சுழியமே’ (Zero); ஆனால், நாம் இறையுதவியை நாடினால், அவர் நம்முடைய குருமடம் நன்றாக இயங்குவதற்குப் போதுமான ஆசிகளை வழங்குவார். ஏனென்றால், சுழியமாகிய நமக்கு முன்பாக, ஒன்று என்ற கடவுளைச் சேர்த்தால்தான், நாம் மதிப்புக்குரியவர்கள் ஆவோம். ஆதலால், நாம் அனைவரும் இறைவனுக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு வேண்டுவோம். இறைவன் நம்முடைய குருமடத்திற்கு வேண்டியதைத் தருவர்” என்றார்.
இதைத் தொடர்ந்து, மூன்று அருள்பணியாளர்களும் குருமடத்தில் இருந்த சிறு கோயிலில் ஒன்றிணைந்து, முழந்தாள் படியிட்டு, ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே!’ என்ற இறைவேண்டலைச் சொல்லி, இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்கள். அவர்கள் இவ்வாறு வேண்டிய ஓரிரு நாள்களிலேயே பெருஞ்செல்வந்தர் ஒருவர், ஒரு பெரிய தொகையைக் குருமட அதிபதிரிடம் தந்துவிட்டுப் போனார். அவரைத் தொடர்ந்து வேறு ஒருசிலர் குருமட அதிபதிரைச் சந்தித்து, நிதியுதவி அளித்துவிட்டுப் போனார்கள்.
ஆம், மனிதர்களாகிய நாம் வெறும் சுழியம்தான்; ஆனால், நாம் நமக்கு முன்பாக அல்லது நம்முடைய வாழ்க்கையில் இறைவனைச் சேர்க்கின்றபொழுது, நாம் மிகவும் மதிப்புக்குரியவர்கள் ஆகின்றோம்; அப்பொழுது நம்முடைய இறைவேண்டல்கள் நிறைவேறுகின்றன. நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார். இயேசு இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருவதும், அவர் கற்றுத் தரும் இறைவேண்டலும் நமக்கு என்ன செய்தியை உணர்த்துகின்றன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவேண்டலை முதன்மைப்படுத்திய இயேசுவின் வாழ்க்கை
மற்ற நற்செய்தி நூல்களை விடவும், லூக்கா நற்செய்தி நூல் இறைவேண்டலுக்குக் மிகுதியான முக்கியத்துவம் தரும் ஒரு நற்செய்தி நூல் என்று சொல்லலாம். ஏனென்றால், இயேசு ஒவ்வொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும், இறைவேண்டல் செய்தார் என்று லூக்கா நற்செய்தி நூல் சான்று பகர்கின்றது. இயேசு திருமுழுக்குப் பெறுவதற்கு முன்பும், திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்பும், சீமோன் பேதுருவின் அறிக்கைக்கு முன்பும், பாடுகள் படுவதற்கு முன்பும் இறைவனிடம் வேண்டினார் என்று லூக்கா நற்செய்தி நூல் சான்று பகர்வது, அவர் இறைவேண்டலில் நிலைத்திருந்தார் என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில்கூட, இயேசு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டுத் தான், இயேசுவின் சீடர்கள் அவரிடம், இறைவனிடம் வேண்டக் கற்றுத் தாரும் என்கின்றார்கள்.
இறைவனின் ஆட்சிக்காக நாம் வேண்டுகின்றபொழுது நமது தேவைகள் நிறைவுபெறும்
தன்னுடைய சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கற்றுத்தரும் இயேசு, கடவுளைத் தந்தை என்று அழைக்கவும், அவருடைய ஆட்சி வரவும், எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும் என்றும் வேண்டக் கற்றுத் தருகின்றார்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், நம்முடைய இறைவேண்டலில் இறைவனுக்கு, அவருடைய ஆட்சிக்கு முதன்மையான இடம் தருகின்றபொழுது, நம்முடைய தேவைகளை அவர் பார்த்துக் கொள்வார்தான். மேலும் இறைவனை நம் தந்தை என அழைப்பதன் மூலம், நாம் அனைவரும் சகோதர், சகோதரிகள் ஆகின்றோம். அப்படி நாம் சகோதரர் சகோதரிகள் ஆகின்றபொழுது, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.
ஆகையால், நாம் நம்முடைய இறைவேண்டகளில் இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, தேவையில் உள்ள சகோதர் சகோதரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, இயேசு கற்றுத் தரும் இறைவேண்டலுக்கு அர்த்தம் தருவோம்.
சிந்தனை
‘இறைவேண்டல் இல்லாத ஒருநாள் என்பது கடவுளின் ஆசி இல்லாத நாளுக்குச் சமம்; இறைவேண்டல் இல்லாத வாழ்க்கை என்பது, ஆற்றலே இல்லாத வாழ்க்கைக்குச் சமம்’ என்பார் எட்வின் ஹென்றி என்ற அறிஞர். ஆகவே, நம்முடைய வாழ்விற்கு ஆசியையும் ஆற்றலையும் இறைவேண்டலைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed