நாம் ஒவ்வொருவரும், நம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் வாழ்வின் இலக்குகளைத் தீர்மானிப்பதை விடுத்து, நம் பார்வையை விரிவாக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில் கேட்டுக்கொண்டார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நவம்பர் 5, இத்திங்கள் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், யாரை விருந்துக்கு அழைப்பது என்று, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பகுதியையும், வீண்பெருமை கொள்ளவேண்டாம் என்று திருத்தூதர் பவுல் கூறிய சொற்களையும் மையப்படுத்தி மறையுரை வழங்கினார் திருத்தந்தை.
நம்மிடையே விளங்கவேண்டிய ஒருமைப்பாட்டிற்கு பெரும் எதிரிகளாக இருப்பன, வீண் பெருமையும், கட்சி மனப்பான்மையும் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுயநலத்தால் சிறைப்பட்டுள்ள உள்ளங்களில் இவ்விரு தீமைகளும் வளரும் என்று குறிப்பிட்டார்.
வாழ்வில் நாம் பெற்றுள்ள அனைத்தும் இறைவனிடமிருந்து வரும் கொடைகளே என்பதை நாம் உணரும் வேளையில், கட்சி மனப்பான்மையும், வீண் பெருமையும் நம்மைவிட்டு மறைந்து, நம் வாழ்வில் அனைவரையும் உள்ளடக்கும் பரந்து விரிந்த கண்ணோட்டம் உருவாகும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
வெளி உலகில் நடைபெறும் போர்களை, குறிப்பாக, ஏமன் நாட்டில், குழந்தைகளை பட்டினியால் கொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள போரைக் குறித்து, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துப் போர்களும், ஒருவருடைய உள்ளத்தில், குடும்பத்தில் துவங்குவதால், நாம் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Source: New feed