மத்திய இத்தாலியின் L’Aquila நகரின் Collemaggio அன்னை மரியா பசிலிக்காவின் புனிதக் கதவைத் திறந்து வைத்தபின்னர், அப்பசிலிக்காவில் கத்தோலிக்கரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளில் நம்பிக்கை வைத்து தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பிவரும் அந்நகர மக்களை ஊக்கப்படுத்தினார்.
13 ஆண்டுகளுக்குமுன் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட L’Aquila நகர மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இப்பேரிடரில் உறவுகளை இழந்தவர்கள் மற்றும், நகர மக்கள் அனைவரோடும் தன் அருகாமையைத் தெரிவித்தார்.
துயரமும், மனக்குழப்பமும் நம் நம்பிக்கைப் பயணத்திற்கு உரியதாக இருந்தாலும், தம் அன்பால் துன்பத்திலிருந்து விடுதலையளித்த சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து மீது கண்களைப் பதித்துள்ளீர்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலநடுக்கம் இடம்பெற்றதற்குப்பின்னர் அந்நகர மக்கள் வெளிப்படுத்திய கிறிஸ்தவ சான்று வாழ்வைப் பாராட்டியுள்ளார்.
நம் ஒரு சொட்டுக் கண்ணீரையும் வீணாகவிடாமல் செய்யும் இறைத்தந்தையின் கரங்களில் இம்மக்களை அர்ப்பணிப்பதாக உரைத்து, இந்நிலநடுக்கத்தில் 309 பேரை இழந்த குடும்பங்களிடம், அவர்கள் கடவுளின் இரக்கம்நிறை இதயத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆறுதலாகக் கூறினார், திருத்தந்தை.
மரணம், அன்பை அசைக்க முடியாது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகர கத்தோலிக்கர், “நினைவு சிற்றாலயம்” ஒன்றை எழுப்பியிருப்பதற்கும் தன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி இரவில் L’Aquila நகரில் இடம்பெற்ற கடுமையான நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 66 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர், மற்றும், 309 பேர் உயிரிழந்தனர். இப்பேரிடர் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாக, அதாவது அவ்வாண்டு ஏப்ரல் 28ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அந்நகர்ப் பகுதிக்குச் சென்று, அந்நிலநடுக்கத்தில் சேதமடைந்திருந்த புனித மாக்சிமுஸ் பேராலயத்தைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: New feed