நாம் இயேசுவிடம் மிகவும் வருந்தி செபிக்கும் போது நமது விண்ணப்பத்தை அவரால் மறுக்க முடியாது எனவும், கிறிஸ்துவுடனான நமது தனிப்பட்ட உறவை நாம் வளர்த்துக்கொள்வதன் வழியாக நம்பிக்கையில் உறுதியானவர்களாக நாம் மாற முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ஞாயிறு மூவேளை செபஉரை வழங்கிய போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கானானியப் பெண்ணின் நம்பிக்கை இயேசுவின் மனநிலை ஆகிய இரண்டைக் குறித்தும் எடுத்துரைத்தார்.
கானானியப் பெண்ணின் நம்பிக்கையின் பலமே இயேசுவை, அவருடைய மனநிலையை மாற்றியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால், மாற்றத்திற்குத் தயாராக இருக்குமாறு அழைக்கப்படுகிறோம் என்றும், கானானியப் பெண் மேல் இயேசு கொண்டிருந்த இரக்கம், நம் உறவுகளில் மட்டுமல்ல, நம்பிக்கை வாழ்விற்கும் மிகவும் நல்லது என்றும் வலியுறுத்தினார்
பொதுக்காலம் 20 வாரத்தின் ஞாயிறு நற்செய்திப் பகுதியான கானானியப் பெண்ணுடன் இயேசு உரையாடிய பகுதியைக் குறித்து திருப்பயணிகளுக்கு விளக்கம் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பெண்ணின் துணிவான செபம், நம்பிக்கையின் பலமே அவளது மகளைக் குணப்படுத்தியது என்றும் மற்றவர்களின் நன்மைக்காக தாழ்ச்சியுடன் கீழ்ப்படிதல், உண்மையாக செவிமடுத்தல், உறவுகளுக்கு முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.