நமக்கு உதவி தேவைப்படும் நேரங்களில், அன்னை மரியாவை நாடிச் செல்வோம், அவர் தன் மகனிடம் நமக்காகப் பரிந்து பேசி, நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தருவார், என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கானா திருமணத்தில் நிகழ்ந்த புதுமை குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, கானா திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டபோது, தன் மகனிடம் பேசி திராட்சை இரசத்தைப் பெற்றுத் தந்த அன்னை மரியா, அதே வழியில் நமக்கு உதவுவார் என்றுரைத்தார்.
நம் தேவைகளை எடுத்துரைக்கும்போது, அன்னை மரியா நமக்காக தன் மகனிடம் பரிந்துரைப்பது மட்டுமல்ல, இயேசு சொல்வதுபோல் நம்மை செயலாற்றுமாறு நம்மிடம் கேட்கிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்காக அன்னை மரியா இயேசுவிடம் பரிந்துரைப்பதும், இயேசு சொல்வதுபோல் நாம் செயலாற்றுவதும், இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்கு இட்டுச்செல்லும் வழிகள் என்றார்.
நம்மிடையே இயேசுவின் உயிருள்ள இருப்பை உணர்ந்து, நம்மையே அவருக்கு திறந்தவர்களாக செயல்படுவது என்பது அவர் நம்மிடம் எதிர்பார்ப்பவைகளுக்கு இயைந்தவகையில் நடக்க உதவும் என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed