தலத்திருஅவையின் அனைத்து உதவி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க வடிவம் அதன் செயல்பாட்டின் நிர்வாக திறனில் அல்ல மாறாக தாராள இதயத்திலிருந்து வரும் எளிய மனிதாபிமான முயற்சியில் வெளிப்படுகின்றது என்றும், கிறிஸ்துவிடமிருந்து இந்தத் தொண்டுப்பணிகளுக்கான ஆற்றலை நாம் பெறுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 23 வெள்ளிக்கிழமை CAL எனப்படும் இலத்தீன் அமெரிக்க தலத்திருஅவைக்கு உதவும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களைச் சார்ந்தவர்களை வத்திக்கானில் சந்தித்து பேசிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குறிப்பிட்ட தலத்திருஅவைகளின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் கேள்விகளைக் கையாளுதல், சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ் செயல்படுதல், பொருளாதார வளங்களில் அவர்களுக்கு ஆலோசனை அளித்தல், உதவுதல் போன்ற பணிகளை CAL செய்து வருகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது இலத்தீன் அமெரிக்காவின் பகுதிகளுக்காகப் பணியாற்றும் பன்னாட்டு, தேசிய திருஅவை நிறுவனங்கள் மற்றும் தலத்திருஅவை நிறுவனங்களுக்கிடையேயான உறவுகளை ஆதரிக்கிறது என்றும் கூறினார்.