கரம்பொன் பங்கிற்கு உட்பட்ட கரம்பொன் செபஸ்தியார் மற்றும் மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய வளாகங்களில் நடைபெற்ற இவ் இலவச மருத்துவ முகாமில் இளையோர், சிறுவர் மற்றும் பெற்றோருக்கான ஆன்மீக மற்றும் ஆளுமை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. கரம்பொன் பங்குத்தந்தை அருட்திரு தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வை கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து வருகை தந்த சுமார் 40 பேர் கொண்ட மருத்துவ குழுவோடு 60 இற்கும் மேற்பட்ட மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய இளையோர் இணைந்து மிகச் சிறப்பாக நடாத்தியுள்ளார்கள். அப்போஸ்தலிக்க கார்மேல் சபையினர் இலங்கையில் தமது பணியை ஆரம்பித்து இவ்வருடம் 100 வது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களில் ஒன்றாக, Lay Dominicans of sieuna of Catherine சபையினரோடு இணைந்து நடாத்தப்பட்ட இந்த இலவச மருத்துவ முகாமில் சுமார் 800 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயனடைந்தனர். அப்போஸ்தலிக்க கார்மேல் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி தயாளினியின் முயற்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்விலே பத்திற்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் கலந்து கண் பரிசோதனை, பற்சிகிச்சை மற்றும் பொது உடற்பரிசோதனை மேற்கொண்டு, நோயாளர்களுக்கான இலவச மருந்து வகைகளை வழங்கியதோடு, சுமார் 50 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண்ணாடிகளையும் வழங்கியுள்ளார்கள். பங்கு மக்களின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக நடந்த இந்நிகழ்விற்கு பிரான்ஸ் மற்றும் நோர்வேயில் இயக்கிவரும் மெலிஞ்சிமுனை சர்வதேச ஒன்றியத்தினரும், Karampon foundation of Canada குழுவினரும் தமது நிதி ஆதரவினை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
Source: New feed