திருமணத்திற்கு, பரந்த மனப்பான்மையுடைய ஒன்றிப்பும், உண்மையான அன்பும் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் தான் சந்தித்த, ரோமன் ரோட்டா அப்போஸ்தலிக்க நீதிமன்றத்தின் உறுப்பினர்களிடம் கூறினார்.
நீதித்துறை ஆண்டின் துவக்கமாக, ரோமன் ரோட்டா நீதிமன்றத்தின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணம் எனும் அருளடையாளத்தில் ஒன்றிப்பு மற்றும் பிரமாணிக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
பிரமாணிக்கம் என்பது, ஒரு கொடை எனவும், இது தம்பதியர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் இயலக்கூடியதே என்றுரைத்த திருத்தந்தை, ஒன்றிப்பு மற்றும் பிரமாணிக்கம் ஆகிய பண்புகளை, ரோமன் ரோட்டா உறுப்பினர்கள், தங்கள் பணியில் அடிக்கடி அனுபவித்து வருகின்றார்கள் என பாராட்டினார்.
தகுந்த தயாரிப்பு
பரந்த மனப்பான்மையுடைய ஒன்றிப்பு மற்றும், உண்மையான அன்பு நிறைந்த வாழ்வுக்குத் தம்பதியர் தங்களையே தயாரிப்பதற்கு, திருஅவையின் மறைப்பணியாளர்கள் உதவ வேண்டும் என்றும், இந்த தயாரிப்பு திருமணத்திற்கு நீண்ட நாள்களுக்கு முன்னரேயும், தம்பதியர் திருமண நாளை நெருங்கி வரும்போதும், அவர்களின் திருமண வாழ்வு முழுவதும் இடம்பெற வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.
திருமணத் தயாரிப்பில், திருஅவை சமுதாயத்தின் எல்லா நிலைகளும் ஈடுபடவேண்டியிருந்தாலும், இதில், தங்களின் அலுவல் மற்றும் திருப்பணியின் காரணமாக, மேய்ப்பர்கள், முக்கிய இடத்தைக் கொண்டுள்ளனர் என்றும், திருத்தந்தை கூறினார்.
Source: New feed