கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ், அந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும், உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகவும், ஏறத்தாழ 3,400 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள நகரமாகவும் உள்ளது. இந்நகரத்தில், கிறிஸ்து பிறப்பதற்குமுன், 11ம் மற்றும், 7ம் மில்லென்யத்திற்கு இடைப்பட்ட காலத்தில் முதல் மனிதக் குடியேற்றம் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. கலைகளுக்கும் கற்றலுக்கும், மெய்யியலுக்கும் புகழ்பெற்ற இந்நகரத்தில் பிறந்தவர்தான், உலகப் புகழ்பெற்ற மெய்யியல் அறிஞரான, சாக்ரட்டீஸ். இந்நகரில், சாக்ரட்டீசின் சீடரான மெய்யியல் அறிஞர் பிளேட்டோ மற்றும், பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டிலின் கல்விநிலையங்களும் உள்ளன. மேற்கத்திய கலாச்சாரத்தின் தொட்டில் எனவும், சனநாயகத்தின் பிறப்பிடவும் எனவும் ஏதென்ஸ் நகரம் போற்றப்படுகிறது. இந்நகரில்தான் 1896ம் ஆண்டில் முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 04, இச்சனிக்கிழமையன்று, கிரேக்க நாட்டுக்கான தனது மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை, முதலில் ஏதென்ஸ் நகரிலே துவக்கினார். முதல் நிகழ்வாக, கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவரை தனியே சந்தித்தபின்னர், அந்நாட்டின் அரசு, தூதரக மற்றும், பொது மக்கள் சமுதாயத்தின் பிரதிநிதிகளுக்கு உரையாற்றினார் திருத்தந்தை. அந்த உரையில், ஐரோப்பா, அரசியல், சனநாயகம் ஆகிய மூன்று சொல்லாடல்களை மையப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஏதென்சில் அரசு அதிகாரிகளை சந்தித்தபின்னர், இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் இரவு 8 மணிக்கு, ஏதென்ஸ் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவரான முதுபெரும்தந்தை பேராயர் 2ம் எரோணிமுஸ் (Ieronymos II) அவர்களின் மாளிகைக்குச் சென்று, அவரைத் தனியே சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அக்கிறிஸ்தவ சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்தார், திருத்தந்தை. அச்சந்திப்பில், முதுபெரும்தந்தை 2ம் எரோணிமுஸ் அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
முதுபெரும்தந்தை 2ம் எரோணிமுஸ்
உடன்பிறப்பு உணர்வு மற்றும், நன்மதிப்போடு ஏதென்ஸ் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைமையகத்திற்குத் தங்களை வரவேற்கிறேன் என்றுரைத்த முதுபெரும்தந்தை 2ம் எரோணிமுஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உலகளாவிய கவனத்திற்கு எடுத்துச்சொல்லும் நோக்கத்தோடு, 2016ம் ஆண்டில், திருத்தந்தையே, தங்களோடு நானும், லெஸ்போஸ் தீவிற்கு வந்ததை நினைவுகூர்கிறேன். இக்காலக்கட்டத்தில் உலகினர் எதிர்கொள்ளும், பெருந்தொற்று, புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், காலநிலை மாற்றம் போன்றவை முன்வைக்கும் சவால்கள், தொழில்நுட்பத்தின் தீவிர வளர்ச்சியில் ஏற்படும் கலாச்சார மாற்றம், கிறிஸ்தவர்கள் சொந்த இடங்களைவிட்டு புலம்பெயர்தல் போன்றவைகளையும், இவற்றுக்குத் தீர்வுகாணவேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். 200 ஆண்டுகளுக்குமுன், கிரேக்கர்கள், துருக்கியின் ஒட்டமான்களிடமிருந்து தங்களின் விடுதலைக்காக மேற்கொண்ட போராட்டத்தில், கத்தோலிக்கத் திருஅவை ஆதரவு தரவில்லை என்பதையும் வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன். அதேவேளை, தற்போது திருத்தந்தையே, தாங்கள் கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்காக, உண்மை மற்றும், அன்பில் இடம்பெறும் உரையாடலைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறீர்கள். இவ்வாறு முதுபெரும்தந்தை பேராயர் 2ம் எரோணிமுஸ் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். இவ்வுரைக்குப்பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். புதியதொரு பெந்தக்கோஸ்தில், தூய ஆவியானவர் பொழியப்படவேண்டும் என இறைஞ்சினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும், உரோம் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர்கள் சந்திப்பு, உடன்பிறப்பு உணர்விலும், ஒருவர் ஒருவரை மதிக்கும் முறையிலும், மிகவும் இனிதாக நடைபெற்றது. திருத்தந்தையும் தன் உரையில், 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் பெரும் பிரிவினை ஏற்படுவதற்கு கத்தோலிக்கரும் காரணமாக இருந்ததற்கு மன்னிப்பும் கேட்டார். கிறிஸ்தவத்தில் மேற்குக்கும், கிழக்குக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, 1291 ஆண்டுகளுக்குப்பின், முதன் முறையாக, ஒரு திருத்தந்தையாக, 2001ம் ஆண்டு மே மாதத்தில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கிரேக்க நாட்டிற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Hellenic குடியரசு என அழைக்கப்படும் கிரேக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 86 விழுக்காட்டினர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினர், மற்றும், ஒரு விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் கத்தோலிக்கர்.
Source: New feed