வருகின்ற செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய நாள்களில் பிரான்சில் உள்ள மர்சேய்லுக்கு திருத்தூதுப்பயணம் செல்ல இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயண நிகழ்வுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2.45 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் மாலை 6.15 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அரசுத்தலைவர், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவற தலைவர்கள் ஆகியோரை சந்திக்க உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியதரைக்கடல் பகுதியினருக்கான கூட்டத்தின் இறுதி பகுதியில் பங்கேற்று திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.
இரண்டு நாள்களைக் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தில் 3 உரைகள், ஒரு திருப்பலி மறையுரை உட்பட 4 உரைகளை ஆற்ற உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறுநாள் அதாவது செப்டம்பர் 23 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.50 மணிக்கு உரோம் விமான நிலையம் வந்தடைவார்.
திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் நன்முறையில் நடைபெறுவதற்காகவும் திருத்தந்தையின் உடல் நலனுக்காகவும் சிறப்பாக செபிப்போம்.
மத்திய தரைக்கடல் பகுதில் புலம்பெயர்ந்து துன்புறும் மக்களைப் பற்றிய கூட்டங்கள் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 24, வரை மார்சேயில் நடைபெற உள்ள நிலையில் செப்டம்பர் 16 அன்று மாலை ஆயர் பேரவை, இளைஞர் குழு ஆகியோருடன் இணைந்து சிறிய செபவழிபாட்டுடன் தொடங்க உள்ளன.