டிசம்பர் 8, இச்செவ்வாய் முதல், வருகிற ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முடிய, புனித யோசேப்பின் ஆண்டு என்பதை அறிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட “Patris corde” என்ற திருத்தூது மடல், புனித யோசேப்பைக் குறித்து திருத்தந்தையர் கொண்டிருக்கும் தனிப்பட்ட பக்திக்கு மற்றுமொரு சான்றாக விளங்குகிறது.
புனித யோசேப்பும், திருத்தந்தை பிரான்சிஸூம்
‘ஒரு தந்தையின் இதயத்தோடு’ என்று பொருள்படும் “Patris corde” என்ற இத்திருமடலில், புனித யோசேப்பை நோக்கி எழுப்பப்படும் 19ம் நூற்றாண்டின் மன்றாட்டு ஒன்றை, கடந்த 40 ஆண்டுகளாக தன் காலை இறைவேண்டலில் பயன்படுத்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
‘உறங்கும் புனித யோசேப்பின்’ உருவம் ஒன்று தன்னுடன் எப்போதும் உள்ளது என்றும், தன் கவலைகள், பிரச்சனைகள் அனைத்தையும் அந்த திரு உருவத்திற்கடியில் ஒவ்வொருநாளும் தான் ஒப்படைப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மணிலா நகரில் கூறியதிலிருந்து, ‘உறங்கும் புனித யோசேப்பின்’ உருவம் மக்களிடையே இன்னும் அதிகமாக புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
புனித யோசேப்பின் பெயர் கொண்ட திருத்தந்தையர்
15ம் நூற்றாண்டில், திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதியை, புனித யோசேப்பின் திருநாளாக அறிவித்ததிலிருந்து, பல்வேறு திருத்தந்தையர் புனித யோசேப்பைக் குறித்த ஈடுபாட்டை, பல்வேறு வழிகளில், வெளியிட்டு வருகின்றனர்.
புனித யோசேப்பின் பெயரை, தங்கள் இயற்பெயராகப் பெற்றிருந்த திருத்தந்தையர், 20ம் நூற்றாண்டில் தலைமைப்பணியாற்றியுள்ளனர். திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்களின் இயற்பெயர் – Giuseppe Melchiorre Sarto; திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களின் இயற்பெயர் – Angelo Giuseppe Roncalli; திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் இயற்பெயர் – Karol Józef Wojtyla; முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இயற்பெயர் – Joseph Ratzinger என்பது குறிப்பிடத்தக்கன.
புனித யோசேப்பின் பராமரிப்பில் 2ம் வத்திக்கான் சங்கம்
2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை, புனித யோசேப்பின் பராமரிப்பில் ஒப்படைப்பதாகக் கூறி, 1961ம் ஆண்டு, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, திருப்பலியில் பயன்படுத்தப்பட்டு வந்த நற்கருணை மன்றாட்டில், அன்னை மரியாவின் பெயருக்குப் பின், புனித யோசேப்பின் பெயரை இணைப்பதற்கு வழி செய்தார்.
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு
2013ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி, தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு திருநாளன்று, இப்புனிதரின் பெயரை, திருப்பலியில் பயன்படுத்தப்படும் நற்கருணை மன்றாட்டுகள் அனைத்திலும், அன்னை மரியாவின் பெயருக்கு அடுத்தபடியாக இணைக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆணை ஒன்றை வெளியிட்டார்.
1945ம் ஆண்டு முடிவடைந்த 2ம் உலகப்போரைத் தொடர்ந்து, இத்தாலியிலும், உலகெங்கும் வாழ்ந்த தொழிலாளர்கள் மனமுடைந்து போயிருந்ததை அறிந்த திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1955ம் ஆண்டு, மே மாதம் 1ம் தேதி ஒரு ஞாயிறாக இருந்ததால், அன்று, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம், குறிப்பாக, இத்தாலிய கிறிஸ்தவ உழைப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களிடம், மே மாதம் முதல் தேதியை, தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு திருநாளாக தான் உருவாக்குவதாக அறிவித்தார்.
‘மீட்பரின் பாதுகாவலர்’
1989ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், ‘மீட்பரின் பாதுகாவலர்’ என்ற தலைப்பில் வெளியிட்ட Redemptoris Custos என்ற திருத்தூது அறிவுரை மடலில், புனித யோசேப்பின் வாழ்வில் விளங்கிய பல்வேறு பண்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.
அகில உலக திருஅவையின் பாதுகாவலர்
1870ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அன்னை மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், புனித யோசேப்பை, அகில உலக திருஅவையின் பாதுகாவலர் என்று அறிவித்து, அவரது திருநாளான மார்ச் 19ம் தேதியை, முதல்தர பெருவிழாவாகவும் உயர்த்தினார்.
இந்த ஆணையின் 150ம் ஆண்டு நினைவாக, 2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘யோசேப்பின் ஆண்டினை’ அறிவித்து, இந்த சிறப்பு ஆண்டு, 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நிறைவடையும் என்று கூறியுள்ளார்.
Source: New feed