இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு பிறகு, அவரது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட திருச்சிலுவையை நிலத்தடி குகை ஒன்றில் எறிந்து விட்டனர். இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அவர் உயிர்த்து எழுந்த பிறகு கிறிஸ்தவர்களின் புனித இடமாக மாறியது. கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய ரோம பேரரசு, கி.பி.125ஆம் ஆண்டளவில் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தின் மீது வீனஸ் தேவதைக்கு கோயில் கட்டியது. கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கிய ரோம பேரரசர் கொன்ஸ்தாந்தீனின் தாய் ஹெலெனா, கி.பி.326ல் இயேசுவின் கல்லறை மற்றும் அவர் அறையப்பட்ட திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார்.
இயேசு கிறிஸ்து அறையப்பட்ட திருச்சிலுவையுடன் மேலும் இரு சிலுவைகளும் கிடைத்தன. இதனால், சரியான சிலுவையைக் கண்டறிய எருசலேம் ஆயர் மக்காரியுசுக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி, நீண்ட நாட்களாக தீராத நோயால் துன்புற்ற ஒரு பெண்மணியை அந்த சிலுவைகளைத் தொடுமாறு அவர் கூறினார். ஒரு சிலுவையைத் தொட்டதும் அந்த பெண்மணி முழுமையாக நலமடைந்தார். உடனே, அதுதான் இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்று முடிவு செய்தனர். இதையடுத்து, இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டு, அவரது திருச்சிலுவை கிறிஸ்தவர்களின் வணக்கத்திற்காக அங்கு நிறுவப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகே, சிலுவை கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமாக மாறியது.
கி.பி.614ல் எருசலேம் மீது படையெடுத்த பெர்சியர்கள், இயேசுவின் திருச்சிலுவையை அபகரித்து கொண்டு சென்று விட்டனர். 630ஆம் ஆண்டு திருச்சிலுவையை மீட்ட பைசாந்திய பேரரசர் ஹெராக்ளியுஸ், செப்டம்பர் 14ந்தேதி எருசலேம் ஆலயத்தில் நிறுவினார். இதுவே, திருச்சிலுவையின் மகிமை விழாவாக கொண்டாடப்படுகிறது. பின்னர், 10ஆம் நூற்றாண்டு முடிய திருச்சிலுவை மக்களின் பொது வணக்கத்தைப் பெற்றது.
1009ஆம் ஆண்டில், இயேசுவின் கல்லறை ஆலயத்தை இடிக்க பாத்திமித் கலீபா உத்தரவிட்டதால், திருச்சிலுவை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டது. இக்காலத்தில், திருச்சிலுவையில் இருந்து வெட்டப்பட்ட சில துண்டுகள் கொன்ஸ்தாந்திநோபிள் மற்றும் ரோமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீண்டும் கட்டப்பட்ட எருசலேம் திருக்கல்லறை ஆலயத்தில், இயேசுவின் திருச்சிலுவை 1099ஆம் ஆண்டு பொது மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த எருசலேம் உள்ளிட்ட இடங்களை தங்கள் வசம் கொண்டு வர நினைத்து, கிறிஸ்தவர்கள் சிலுவைப் போரை நடத்தினர். அவ்வாறு ஹாத்தின் என்ற இடத்தில் 1187ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு, இயேசுவின் திருச்சிலுவை கொண்டு செல்லப்பட்டது. அந்த போரின் முடிவில், இயேசுவின் திருச்சிலுவை எதிரிகளின் கரங்களில் சிக்கி மாயமானது. அதன்பிறகு, ரோம் மற்றும் கொன்ஸ்தாந்திநோபிளில் இருந்த திருச்சிலுவை துண்டுகளின் பகுதிகள் உலகின் பல ஆலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் சில துண்டுகள் தமிழக ஆலயங்களிலும் உள்ளன.
Source: New feed