![](https://www.addaikalanayaki.com/wp-content/uploads/2021/01/fghfgh.jpeg)
கிறிஸ்து கொணர்ந்த மீட்பு, எவ்வித எல்லையுமின்றி அனைவரையும் அடையவேண்டும் என்பதை, திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெருவிழாவன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.
சனவரி 6, இவ்வியாழனன்று, வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பெருங்கோவிலில் காலை திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, அதைத் தொடர்ந்து, வத்திக்கான் நூலக அறையிலிருந்து, நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய மூவேளை செப உரையில், இன்றைய விழாவன்று வாசிக்கப்பட்ட இறைவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தன் சிந்தனைகளை வழங்கினார்.
திருக்காட்சி என்பது, கூடுதலான மறையுண்மை அல்ல, மாறாக, அது கிறிஸ்துவின் பிறப்பு என்ற மறையுண்மையை உலகறியச் செய்த ஒரு நிகழ்வு என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து வழங்கிய ஒளியை, நாம், நம் விசுவாசத்தின் பயனாகப் பெற்றுக்கொள்வதோடு, அதை, நம் வாழ்வில் வெளிப்படும் பிறரன்பின் வழியே வெளிப்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.
“இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்” (எசா. 60:2) என்று இன்றைய முதல் வாசகத்தில் கேட்ட சொற்கள், இன்று நாம் வாழும் சூழலை நினைவுறுத்துகிறது என்பதை, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இந்த இருளை அகற்றும் ஒளியாக, இறைமகன் இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும் இறைவாக்கினர் எசாயா நமக்கு நினைவுத்துகிறார் என்று கூறினார்.
பெத்லகேமில் பிறந்த இயேசுவே இவ்வுலகிற்கு வந்த ஒளி என்பதை, மூன்று ஞானிகளின் வருகை என்ற நிகழ்வு வழியே நற்செய்தியாளர் மத்தேயு (மத். 2:1-12) கூறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறந்துள்ள இறைமகன், ஒரு சிலருக்காக மட்டும் பிறக்கவில்லை, உலக மக்கள் அனைவருக்காகவும் பிறந்தார் என்பது இவ்விழாவின் மையப்பொருள் என்று கூறினார்.
பிறந்துள்ள ஒளியை மக்களுக்கு வெளிப்படுத்த, இறைவன், சக்தி மிகுந்த வழிகளைத் தெரிந்துகொள்ளாமல், நம்மில் ஒருவராக எளிய வடிவில் வந்தார் என்று கூறிய திருத்தந்தை, இறைவன் நம்மை நெருங்கி வந்ததுபோல், நாமும் அடுத்தவரை நெருங்கிச் செல்ல அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.
இந்த ஒளியை நாம் வரவேற்பதன் அடையாளமாக, இதை, நமது தனிப்பட்ட உரிமைச் சொத்தாகக் கருதாமல், இதை, பகிர்ந்துகொள்ள அனைவரையும் அழைக்கும் கடமையை நாம் பெற்றுள்ளோம் என்று, தன் மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
Source: New feed