
இவ்வாண்டு நவம்பர் மாதம் நான்காவது வாரத்தில் இடம்பெற உள்ள இலத்தீன் அமெரிக்க, மற்றும், கரீபியன் திருஅவைகளின் ஒன்றிணைந்த கூட்டத்தை நோக்கிய பயணம் என்ற தலைப்பில், இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று இணையவழி இடம்பெற்ற கூட்டத்திற்கு, தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மெக்சிகோ நகரின் குவாதலூப்பே அன்னை மரியா பெருங்கோவிலில் இடம்பெற்ற இந்த இணையவழி கூட்டத்தின் துவக்க நிகழ்வையொட்டி, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை, மற்றும், பெரு நாட்டு ஆயர் பேரவைத்தலைவருமான, Trujillo பேராயர் Miguel Cabrejos Vidarte அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், நவம்பர் மாதம் வரை இடம்பெற உள்ள தயாரிப்பு நிகழ்வுகளில், தானும், அப்பகுதி திருஅவையோடு ஆன்மீக அளவில் உடனிருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு இடம்பெறவுள்ள நவம்பர் கூட்டம், முந்தைய கூட்டங்களைப்போல் அல்லாமல், இறைமக்கள் அனைவரையும், அதாவது, பொதுநிலையினர், துறவிகள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் என இறைமக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக, இணைந்து நடக்கவும், செபிக்கவும், கருத்துப்பரிமாறவும், சிந்திக்கவும், இறைவிருப்பத்தை அறியவும் விரும்பும் கூட்டமாக அமைவதை தான் விரும்புவதாக, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் கூட்டத்தை நோக்கிய பயணத்தில் இரு விடயங்களை நினைவில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், பொதுமக்களுடன் திருஅவைத் தலைவர்களும் ஒன்றிணைந்ததே இறைமக்கள் கூட்டம் என்பதையும், செபத்தின் வலிமையையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நவம்பரில் இடம்பெற உள்ள இலத்தின் அமெரிக்க,மற்றும், கரீபியன் திருஅவைகளின் கூட்டம், திருஅவையில் எவரும் விலக்கிவைக்கப்படவில்லை என்பதை காட்டும் அடையாளமாக உள்ளது என மேலும் தன் காணொளிச் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் நடுவே இருக்கும் இறைவன், செவிமடுக்கும் வகையில், நம் செபங்கள் இருக்கட்டும் எனக்கூறி, தானும் செபத்துடன் அவர்களுடன் பயணிப்பதாக எடுத்துரைத்து, தன் செய்தியை நிறைவுக்குக் கொணர்ந்துள்ளார்.
Source: New feed