மாலையில், ஏதென்ஸ் நகரில், புனித தியோனிசியு பேராலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவ பயிற்சியில் ஈடுபட்டிருப்போர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட சந்திப்பில் வழங்கிய உரையின் சுருக்கம்:
அன்பு சகோதர ஆயர்களே, அன்பு அருள்பணியாளரே, துறவியரே, அன்பு சகோதர சகோதரிகளே, மாலை வணக்கம் (kalispera sas!). மேற்கத்திய நாடுகளுக்கு அடித்தளமாக, மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாரம்பரிய கொடையான கிரேக்க நாட்டில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன். இந்நாட்டில் வளர்ந்த கவிதை, இலக்கியம், மெய்யியல், கலை ஆகியவை இன்றி, மனித வாழ்வின் பல பரிமாணங்களை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்வு, அன்பு, துன்பம், மரணம் ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் முடியாமல் போயிருக்கும்.
கிறிஸ்தவ மறையின் துவக்கத்தில் அந்த மத நம்பிக்கையை கலாச்சாரமயமாக்கிய பெருமை, பல தந்தையரைச் சேரும். கிறிஸ்தவத்திற்கும் கிரேக்க கலாச்சாரத்திற்கும் இடையே சந்திப்பை உருவாக்கியதில் மிக முக்கியமானவர், திருத்தூதர் பவுல். இவ்விரு உலகையும் இணைக்கும் பணியை, புனித பவுல், ஏதென்சு நகரில் துவக்கினார். (காண்க. தி.பணிகள் 17:16-34). திருத்தூதர் பவுல் மேற்கொண்ட இந்த முயற்சியை சிந்திக்கும்போது, அவர் வெளிப்படுத்திய இரு பண்புகள், இன்றைய உலகில் நமக்கு உதவியாக இருக்கும்.
முதல் பண்பு, அவரிடம் விளங்கிய நம்பிக்கை நிறைந்த உறுதி. திருத்தூதர் பவுல் போதனையைக் கேட்ட ஏதென்ஸ் நகர மக்கள், அவரை, ‘பிதற்றுகிறவன்’ என்றழைத்தனர். எனவே அவர்கள் அவரை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், “நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றார்கள். (தி.பணிகள் 17:19-20) சுருங்கச் சொன்னால், அவர்கள் அவரை பரிசோதித்தனர்.
கிரேக்க நாட்டில் திருத்தூதர் பவுல் ஆற்றிய மறைப்பணி நமக்கு இன்று முக்கியமான பாடங்களைச் சொல்லித்தருகிறது. கிரேக்க நாட்டிற்கு செல்வதற்கு முன், தெசலோனிக்காவில், அவர் போதிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு, அங்கிருந்து இரவோடிரவாக அவர் தப்பித்துச் செல்லவேண்டியிருந்தது. சாதகமற்ற இத்தகையைச் சூழலை நாமும் சந்திக்கிறோம். தன்னை வரவேற்காத ஏதென்சு நகரில், தனியொருவராய், பவுல் தன் பணியைத் துவக்கினார். இதுவே, உண்மையானத் திருத்தூதரின் மனநிலை. பவுலுக்கு இத்தகைய துணிவு எங்கிருந்து வந்தது? அவர் கடவுள்மீது கொண்டிருந்த நம்பிக்கையிலிருந்து பிறந்த துணிவு இது. தன் வலுவற்ற நிலையின் வழியே பெரும் விடயங்களைப் புரியவிழைந்த கடவுள்மீது அவர் நம்பிக்கை கொண்டதால் வந்த துணிவு அது.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, புனித பவுல் கொண்டிருந்த அந்த நம்பிக்கை நமக்கும் தேவை. நமது திருஅவை சிறியதாக இருந்தாலும், நற்செய்தியின் தலைசிறந்த அடையாளமாக அது இருக்கும் என்ற நம்பிக்கை, நமக்குத் தேவை. வெற்றிபெறுவதோ, எண்ணிக்கையால் இவ்வுலகை வியக்கவைப்பதோ, நமது மனநிலையல்ல. அத்தகைய மனநிலை நம்மை பெருமையடையச் செய்துவிடும். கடுகு விதையிலிருந்து நாம் பாடங்களைப் பயில அழைக்கப்படுகிறோம். “கடுகு விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும்” (மத். 13:32) என்று இயேசு கூறியுள்ளார்.
எனவே, நண்பர்களே, நமது சிறுமைத்தன்மையை ஓர் ஆசீராகக் கருதி, மனதார ஏற்றுக்கொள்வோம். சிறுபான்மையினராய் இருப்பது, ஒன்றுமில்லாமல் போவது என்று பொருளல்ல, மாறாக, நம்மையே தாழ்த்துவது, ஆண்டவர் தெரிவுசெய்த வழி என்பதை உணரவேண்டும். “இயேசு, தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார்” (பிலிப். 2:7) என்று பவுல் கூறியுள்ளார். எனவே, நம் சிறுமைத்தன்மையில், இறைவனின் செயல் வெளிப்படுகிறது என்பதில், நம்பிக்கை கொள்வோம்.
Source: New feed