தாழ்ச்சியின்றி கடவுளை சந்திக்க முடியாது, மீட்பை அனுபவிக்க இயலாது மற்றும், நமக்கு அடுத்திருக்கும் சகோதரர் சகோதரிகளைக்கூட சந்திக்க இயலாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 20, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் 20, இச்சனிக்கிழமையன்று, இத்தாலியின் மத்தேரா-இர்சினா பேராயர் அந்தோனியோ ஜூசப்பே கயாட்சோ, உரோம் சான் எஜிதியோ அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் அந்திரேயா ரிக்கார்தி, திருப்பீடத்திற்கு காங்கோ மக்களாட்சி குடியரசின் தூதராகப் பணியாற்றிய Jean-Pierre Hamuli Mupenda, கொலம்பியா நாட்டின் Cartagenaவின் முன்னாள் பேராயர் Jorge Enrique Jiménez Carvajal, தேசிய குடும்பங்கள் அமைப்பின் தலைவர் திருவாளர் Gigi De Palo ஆகியோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
உக்ரைன் போர் குறித்து கவலை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த சான் எஜிதியோ அமைப்பின் அந்திரேயா ரிக்கார்தி அவர்கள், உக்ரைனில் போர் தொடங்கி ஆறு மாதங்களாகியும் இன்னும் அப்போர் முடியவில்லை என திருத்தந்தை கவலை தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.
மேலும், இப்போரினால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் வருங்காலம், உலகின் மற்ற இடங்களில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர்கள், உலகில் அமைதியைக் கொணர்வதில் மதங்களின் முக்கிய பங்கு, புலம்பெயர்ந்தோரை வரவேற்றல், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஆற்றுதல் போன்ற விவகாரங்கள் குறித்து திருத்தந்தை தன் கருத்துக்களை எடுத்துரைத்தார் எனவும், ரிக்கார்தி அவர்கள் கூறியுள்ளார்.
Source: New feed