டிசம்பர் 9 : நற்செய்தி வாசகம்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
அக்காலத்தில்
இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார்
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
இயேசு தரும் இளைப்பாறுதல்”
நிகழ்வு
ஒரு மனிதர் நகரில் இருந்த பிரபல உளவியலாரிடம் சென்று, “ஐயா! என்னுடைய வாழ்க்கையில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருகின்றது. இதனால் என்னால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியவில்லை; என்னுடைய மனத்தையும் என்னால் ஒருமுகப்படுத்த முடியவில்லை” என்றார்.
அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த உளவியலார், “உங்களிடம் நான்கு சக்கர ஊர்தி இருக்கின்றதா?” என்றார். வந்தவர் “ஆமாம்” என்று சொன்னதும், “ஊர்தியை நீங்கள் ஓட்டுவீர்களா? இல்லை ஓட்டுநர் வைத்து ஓட்டுகிறீர்களா?” என்றார் உளவியலார். “பெரும்பாலும் ஊர்தியை நான் ஓட்டுவதில்லை; ஓட்டுநர்தான் ஓட்டுவார்” என்று அந்த மனிதர் சொன்னதும், உளவியலார் அவரிடம், “ஊர்தியை உங்களுடைய ஓட்டுநர் ஓட்டும்பொழுது, நீங்கள் அவரிடம், ‘ஊர்தியை இப்படி ஓட்டு, அப்படி ஓட்டு, இந்தப் பக்கம் திருப்பு, அந்தப் பக்கம் திருப்பு என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பீர்களா? இல்லை எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று அவரிடம் விட்டுவிடுவீர்களா?” என்றார்.
இதற்கு அந்த மனிதர் உளவியலாரிடம், “ஓட்டுநர் வைத்திருப்பதே நிம்மதியாகப் பயணம் செய்வதற்குத்தான். அப்படியிருக்கும்பொழுது நான் ஓட்டுநரிடம் ஓயாமல் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தால் அது அவ்வளவு நன்றாக இருக்காது” என்றார். “மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஊர்தியில் பயணம் செய்கின்றபொழுது எப்படி நீங்கள் எல்லாவற்றையும் ஓட்டுநரின் கையில் ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாகப் பயணம் செய்கின்றீர்களோ, அப்படி நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் வரும் கவலை, துன்பம் யாவற்றையும் ஆண்டவரின் கையில் ஒப்படைத்துவிட்டு வாழ்ந்தால், நீங்கள் நிம்மதியாய் வாழ்வீர்கள்” என்றார் உளவியலார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற உளவியலார் தன்னிடம் வந்த மனிதரிடம் சொன்னதுபோன்று, நாம் நம்முடைய கவலை, துன்பம், வருத்தம், சுமை ஆகியவற்றை ஆண்டவரிடம் ஒப்படைத்து விட்டு அல்லது அவரிடம் இறக்கி வைத்துவிட்டு வாழ்ந்தால் நமது வாழ்க்கை எத்துணை நிம்மதியாக இருக்கும்! நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தருவதாகச் சொல்கின்றார். இயேசு தரும் இளைப்பாறுதல் எத்தகையது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சுமைகள் நிறைந்த மனித வாழ்க்கை
யோபு கூறுவது போல், “மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டமே” (யோபு 7: 1). காலையில் எழுந்ததிலிருந்து, இரவு தூங்கச் செல்கின்ற வரை ஒவ்வொருவரும் சந்திக்கின்ற சவால்களும் துன்பங்களும் ஏராளம் ஏராளம். இதனால் மனித வாழ்க்கையே சுமை நிறைந்ததாக, போராட்டம் நிறைந்ததாக இருக்கின்றது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு வேறு விதமான சுமை இருந்தது. சமயத் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட பரிசேயர்கள் சாதாரண மக்கள்மீது சட்டம் என்ற சுமையைக் கொண்டு அழுத்தினார்கள் (மத் 23: 4) இதனால் மக்ககளுடைய வாழ்க்கை சுமை நிறைந்ததாக, துன்பம் நிறைந்ததாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கின்றார். இயேசு இவ்வார்த்தைகளின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று பார்ப்போம்
இயேசு தரும் இளைப்பாறுதல்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போர் யாவரையும் தன்னிடம் வரச் சொல்லும் இயேசு, அவ்வாறு சொல்வதன் மூலம், அவர் அவர்களுக்குச் சுமையே இல்லாத வாழ்க்கையை உறுதியளிக்கவில்லை. மாறாக, அவர்களுடைய சுமை எளிதாகும் என்று சொல்கின்றார்.
இயேசு கனிவுக்கும் மனத்தாழ்மைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால்தான் அவர், “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்” என்கின்றார். எனவே, சுமை சுமந்து சோர்ந்திருப்போர் இயேசுவிடம் உள்ள கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொண்டு, அவற்றின்படி வாழ்கின்றபொழுது, அவர்களுடைய சுமை எளிதாகும் என்று உறுதி. இன்றைக்குப் பலர் இயேசுவிடமிருந்து கனிவை மனத்தாழ்மையும் கற்றுக்கொண்டு, அவற்றின்படி வாழ்வதற்குத் தயாராய் இல்லை. இதைச் செய்யாமல், அவர்களுடைய சுமை எப்படி எளிதாகும் என்று தெரியவில்லை!
எனவே, நாம் இயேசுவிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொண்டு, அவற்றின்படி வாழ்ந்து, அவர் தருகின்ற இளைப்பாறுதலைப் பெறுவோம்.
சிந்தனை
‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்’ (1 பேதுரு 5:7) என்பார் திருத்தூதர் புனித பேதுரு. ஆகையால், நாம் நமக்கு கவலைகளிலிருந்தும், மனச் சுமைகளிலிருந்தும் விடுதலை தரும் ஆண்டவரிடம் நம்முடைய சுமைகளையெல்லாம் இறக்கி வைத்து, அவருக்கு உரியவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed