இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37
அக்காலத்தில்
இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.
அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.
தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
மத்தேயு 15: 29-37
“இவர்களைப் பட்டினியாய் அனுப்பி விடவும் நான் விரும்பவில்லை”
நிகழ்வு
பொள்ளாச்சியைச் சார்ந்தவர் சுகுமார். இவர் தன் மனைவி நிர்மலா தேவியின் உதவியுடன் பொள்ளாச்சியைச் சுற்றிப் பதினான்கு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பேருந்து நிலையங்கள், சாலையோரங்கள்… ஆகிய இடங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள், வழிபோக்கர்கள், கையில் பணமில்லாதவர்கள் ஆகியோருக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக உணவளித்து வரும் மிக அற்புதமானதொரு செயலைச் செய்து வருகின்றார்கள்.
காலை நான்கு மணிக்கெல்லாம் உணவு தயாரிக்கத் தொடங்கும் இவர்கள், எட்டு மணிக்கெல்லாம் உணவு தயாரிப்பதை முடித்துகொண்டு, பத்து மணியிலிருந்து, பிற்பகல் இரண்டு மணிவரை பேருந்து நிலையங்கள், சாலையோரங்கள் ஆகிய இடங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். பிச்சைக்காரர்கள், கையில் பணமில்லாத ஏழைகள் ஆகியோருக்கு உணவளித்துக் கொண்டு வருகின்றார்கள். இப்படி இவர்கள் ஒவ்வொரு நாளும் இருநூற்று ஐம்பது பேர்களுக்கும் மேல் உணவளித்துக் கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகுமார் – நிர்மலா இருவரும் வறியவர்களுக்கு உணவளிப்பதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது என நினைக்காமல் தங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களின் உதவியுடன் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். மட்டுமல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுக்குரிய காப்பகங்களிலும், குடும்பங்களை விட்டுப் பிரிந்து வந்தவர்களை அவர்களுடைய குடும்பங்களோடு சேர்த்தும் வருகின்றனர். இவர்கள் ஆற்றிவரும் இந்த அரும்பணிக்குப் பலரும் தங்களால் இயன்றதைக் கொடுத்து வருகின்றார்கள்.
தாங்கள் செய்யக்கூடிய இப்பணிகளைக் குறித்து யாராவது இவர்களிடம் கேட்டால், அவர்களிடம் இவர்கள், “எங்களைப் பொறுத்தவரையில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது; கைவிடப்பட்டவர்கள் என்பதையும் யாரும் உணரக்கூடாது. அதற்காகவே இப்பணிகளைச் செய்துவருகின்றோம்” என்று புன்னகையோடு கூறுகின்றார்கள்.
யாரும் பசியோடு இருக்கக்கூடாது; கைவிடப்பட்டவர்கள் என்பதையும் யாரும் உணரக்கூடாது என்பதற்காக வறியவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் அளித்துவரும் பொள்ளாச்சியைச் சார்ந்த சுகுமார் – நிர்மலா தேவித் தம்பதி உண்மையிலேயே நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கின்றார்கள்.
நற்செய்தியில் ஆண்டவர் தன்னுடைய போதனையைக் கேட்க வந்த திரளான மக்களிடையே இருந்த பல்வேறுவிதமான நோயாளர்களை நலப்படுத்தி, அவர்களுக்கு உணவளிக்கின்றார். இயேசு செய்த இந்த வல்ல செயலுக்குக் காரணமாக இருந்தது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் பரிவுள்ளம்
இயேசு மக்கள்மீது எப்பொழுதும் பரிவோடு இருந்தார் (மத் 9: 36, 14:14) இன்றைய நற்செய்தி வாசகமும் அவர் மக்கள்மீது பரிவோடு இருந்தார் என்பதற்குச் சான்றாக் இருக்கின்றது.
இயேசு கலிலேயாக் கடற்கரை வழியாக ஒரு மலையின்மீது ஏறி அமர்கின்றார். அப்பொழுது அவரிடம் பெருந்திரளான மக்கள் வருகின்றார்கள். இயேசு முதலில் மக்கள் நடுவில் இருந்த பல்வேறுவிதமான நோயாளர்களை நலப்படுத்திய பின்பு, அவர்கள் பட்டினியால் தளர்வுற்றுவிடக் கூடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உணவளிக்கின்றார். இயேசு செய்த இந்த வல்ல செயல் நடைபெற்ற இடம் பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த தெக்கப்பொலி (மத் 4: 25) என்று திருவிவிலிய அறிஞர்களால் சொல்லப்படுகின்றது. முன்பு இயேசு யூதர்கள் மிகுதியாக வாழ்ந்த கலிலேயாப் பகுதியில், ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருப்பார் (மத் 14: 13-21). இப்பொழுதோ அவர் பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த தெக்கப்பொலிப் பகுதியில் நான்காயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். இது இயேசு யூதர்கள்மீது மட்டுமல்லாமல், எல்லார்மீதும் பரிவுகொள்ளக்கூடியவர்; எல்லாருக்கும் உணவளிக்கக்கூடியவர் (திபா 145: 15) என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது.
பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் சீடர்கள்
இயேசு தன்னுடைய வார்த்தைகளைக் கேட்க வந்த மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு உணவளிக்கத் தயாராய் இருந்தார். இது தொடர்பாக அவர் தம் சீடர்களிடம் கேட்டபொழுது, அவர்கள் அவரிடம் மக்கள் திரளாக இருக்கின்றார்கள்… இது பாலைநிலம் என்று சொல்லிப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார்கள்.
இயேசுவின் சீடர்கள் அவருடைய மனநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும் (பிலி 2:5); ஆனால் அவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றார்கள். இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் பல நேரங்களில் நாம் நமக்கிருக்கின்ற சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து, பரிவில்லாமலேயே செயல்படுகின்றோம். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் மனநிலையைக் கொண்டவர்களாய், நம்முடைய சமூகப் பொறுப்பை உணர்ந்து, தேவையில் உள்ளவர்களுக்கு உதவிட முன்வருவோம்.
சிந்தனை
‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்’ என்பார் பாரதியார். ஆகையால், நம் நடுவில் பட்டினியோடு வாழக்கூடிய மனிதர்களுக்கு இயேசுவைப் போன்று, சுகுமார்-நிர்மலா தேவி தம்பதி போன்று உணவிடுவோம்; நம்மிடம் இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து வாழத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed