எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13
இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
மத்தேயு 17: 10-13
“மக்கள் அவரைக் கண்டுணரவில்லை”
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக நார்வேயில் உள்ள போதோ (Bodo) நகரில் இருந்த நான்கு சக்கர வண்டிகளை விற்கும் ஒரு பெரிய நிறுவனத்திற்குள் நுழைந்த ஒரு மனிதர், “எனக்கு உடனடியாகப் ஒரே மாதிரியான பதினாறு நான்கு சக்கர வண்டிகள் வேண்டும்” என்றார்.
இப்படிக்கேட்ட மனிதரை அங்கிருந்தவர் ஏற இறங்கப் பார்த்தார். ஏனெனில் வந்திருந்தவரின் தோற்றம் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருந்தது; அவர் உடுத்தியிருந்த உடைகூட சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இதனால் அங்கிருந்தவர் வந்தவரிடம், “நகைச்சுவையாகப் பேசுவதற்கு இது நேரமல்ல!” என்று சொல்லி அவரை வெளியே அனுப்பி வைத்தார். அந்த மனிதரோ அதே நகரில் இருந்த வேறொரு நிறுவனத்திற்குச் சென்றார். அங்கிருந்தவரிடம் அவர் முன்பு சொன்ன அதையே சொன்னார். அவர் இவருக்கு உரிய மதிப்புக் கொடுத்து, இவர் கேட்ட ஒரே மாதிரியான பதினாறு நான்கு சக்கர வண்டிகளை நாற்பத்து ஏழாயிராம் டாலர் விலைக்குக் கொடுத்து, நல்லமுறையில் இவரை வழியனுப்பி வைத்தார்.
இச்செய்தி அந்த மனிதர் முதலில் சென்ற, நான்கு சக்கர வண்டிகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியவர, அவர் ‘வந்தவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு இப்படியொரு நல்ல வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டோமே!’ என்று மிகவும் வேதனைப்பட்டார்.
உண்மையில், பதினாறு நான்கு சக்கர வண்டிகளை வாங்க வந்திருந்த அந்த மனிதர் பெரியதொரு மீன்பிடிக் கப்பல் வைத்திருந்தார். அதில் பதினாறு பேர் பணியாற்றி வந்தனர். அந்த ஆண்டு அவருக்கு நல்ல வருமானம் கிடைத்ததால், அவர் தன்னிடத்தில் பணியாற்றி வந்த அந்தப் பதினாறு பேருக்கும் ஆளுக்கொரு நான்கு சக்கர வண்டியைப் பரிசாக அளிக்க முடிவசெய்து, நான்கு சக்கர வண்டிகளை வாங்கச் சென்றிருந்தார். அப்பொழுதுதான் இவையெல்லாம் நடந்தது
இந்த நிகழ்வில் வரும் பெரிய கப்பலின் உரிமையாளரை, அவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு, நான்கு சக்கர வண்டிகளை விற்கும் நிறுவனத்தின் உரிமையாளர் புறக்கணித்தது போன்று, திருமுழுக்கு யோவானை மக்கள் அவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு புறக்கணித்தார்கள் அல்லது அவரைக் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எலியா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை
இஸ்ரயேலில் தோன்றிய மிகப்பெரிய இறைவாக்கினரான எலியா இறக்கவில்லை. மாறாக, அவர் சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்றார் (2 அர 2:11). இதனால் அவர் மெசியாவின் வருகைக்கு முன்பாக மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை மக்கள் நடுவில் உண்டானது (மலா 4: 5-6) இந்நிலையில் இயேசுவின் தோற்றமாற்றத்தில் மோசேயோடு, எலியாவும் தோன்றியதால், இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்விற்குப் பிறகு அவருடைய சீடர்கள் அவரிடம், எலியாவைப் பற்றிப் பேச்சை எடுக்கின்றார்கள். அதற்கு இயேசு கூறும் பதில்தான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது.
திருமுழுக்கு யோவானைக் கண்டுகொள்ளாத மக்கள்
திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தபொழுது, இறைவாக்கினர் எலியாவைப் போன்றே உடை உடுத்தி, அவரைப் போன்றதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் அவர் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டிருந்தார் (லூக் 1: 17). இதனால் தன்னுடைய சீடர்கள் தன்னிடம், எலியாவைப் பற்றிக் கேட்டபொழுது, “எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்….” என்கின்றார் இயேசு.
மக்கள் திருமுழுக்கு யோவானில் எலியாவைக் கண்டுகொள்ளாதற்கும், அவர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்ததற்கும் காரணம், மக்கள் திருமுழுக்கு யோவானுடைய வெளித்தோற்றப் பார்த்து, மதிப்பிட்டதே ஆகும். இயேசுவுக்கும் இதுதான் நடந்தது. இதனால் இழப்பு என்னவோ மக்களுக்குத்தான்.
நாமும் கூட மனிதர்களை அவர்களுடைய வெளித்தோற்றத்தைக் கண்டு, அவர்களை மதிப்பிட்டுவிட்டு, அவர்கள் சொல்ல வந்த செய்தியை உள்வாங்க மறந்துவிடுகின்றோம். எனவே, நாம் யாரையும் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாமல், அவரை அவர் இருக்கும் நிலையில் ஏற்றுக்கொண்டு, அவர் அறிவிக்கும் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ ( யோவா 1: 11) என்பார் யோவான். ஆகையால், நாம் தங்கள் நடுவே வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களைப் போன்று இராமல், நம் நடுவில் வாழும் இயேசுவை, அவருடைய அடியார்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் அறிவிக்கின்ற கடவுளின் வார்த்தையின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed