மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 11: 16-19
சொன்ன செய்தியைப் பாராமல், சொன்னவரின் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பிடல்
நிகழ்வு
வகுப்பறை ஒன்றில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இடையில் அவர் ஒரு மாணவனை எழுப்பி, “நமக்கு எத்தனைச் சிறுநீரகங்கள் உள்ளன?” என்றார். அந்த மாணவனோ சிறிதும் தாமதியாமல், “நான்கு” என்றான். “நான்கு சிறுநீரகங்களா…?” என்று கேட்டுவிட்டுச் சத்தமாகச் சிரித்த அந்த ஆசிரியர், வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களிடம், “நம்முடைய வகுப்பில் ஓர் அறிவுகெட்ட கழுதை இருக்கின்றது. அதனால் அந்த அறிவு கெட்ட கழுதை தின்பதற்காக உங்களில் யாரேனும் வெளியே சென்று கொஞ்சம் புற்களை பிடுங்கிக் கொண்டு வர முடியுமா?” என்றார்.
இதைத் தொடர்ந்து அந்த வகுப்பில் இருந்த மாணவன் ஒருவன் எழுந்து புற்களைப் பிடுங்கி வர வெளியே சென்றான். அந்த மாணவனிடம், ஆசிரியர் கேட்ட கேள்விக்கு, நான்கு சிறுநீரகங்கள் என்று பதிலளித்த மாணவன், “அப்படியே எனக்கு ஒரு குவளைத் தேநீர் வாங்கிக் கொண்டு வா” என்றன்ர். இதைக்கேட்டு ஆசிரியர் சினத்தின் உச்சிக்கே சென்று, “நீ என்னைக் கேலி செய்ய நினைக்கிறாயா?” என்று சொல்லிக்கொண்டு அவனை அடிப்பதற்காகக் கையை ஓங்கினார். அப்பொழுது அந்த மாணவன் ஆசிரியரிடம், “ஐயா! ஒரு வினாடி பொறுங்கள்… நீங்கள் என்னிடம் ‘நமக்கு எத்தனைச் சிறுநீரகங்கள் உள்ளன?’ என்றுதானே கேட்டீர்கள். உங்களுக்கும் எனக்கும் சேர்த்து நான்கு சிறுநீரகங்கள்தானே வரும். ஒருவேளை நீங்கள் என்னிடம், ‘ஒருவருக்கு எத்தனைச் சிறுநீரகங்கள் இருக்கும்?’ என்று கேட்டிருந்தால், நான் இரண்டு என்று பதிலளித்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடிவிட்டான்.
இப்படி ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவரே எதிர்பார்த்திராத ஒரு பதிலைச் சொன்ன அந்த மாணவன்தான் பிற்காலத்தில் மிகப்பெரிய நகைச்சுவை எழுத்தாளராக உயர்ந்து நின்ற அபாசியோ டாரலி அபோர் அலி (1895-1971) என்பவராவார்.
ஆம், மனிதர்களாகிய நாம் ஒருவர் என்ன சொல்கின்றார் என்று பாராமல், அவருடைய வெளித்தோற்றத்தைக் கொண்டே மதிப்பிடுகின்றோம். மேலே உள்ள நிகழ்வில் வரும் ஆசிரியர், அபாசியோ டாரலி அபோர் அலி என்ற மாணவன் என்ன சொன்னான்… அதிலிருந்த உண்மையென்ன… ஆகியவற்றைக் கவனியாமல், அவன் ஒரு சாதாரண மாணவன், அறிவுகெட்ட கழுதை என்றே பார்த்தார். இது மிகப்பெரிய தவறு என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
திருமுழுக்கு யோவானைப் ‘பேய்பிடித்தவன்’ என்றவர்கள்
இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் இயேசு, “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று சொல்லியிருப்பார். இன்றைய நற்செய்தியில் அதன் தொடர்ச்சியாக அவர், ஒருவருடைய வெளித்தோற்றத்தைப் பார்க்காமல், அவர் அறிவிக்கின்ற செய்தியைப் பார்க்கவேண்டும் அல்லது அவர் அறிவிக்கின்ற செய்தியை கேட்கவேண்டும் என்ற உண்மையை எடுத்துக்கூறுவார். ஏனெனில், பாலைநிலத்தில் தங்கிக் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு, உண்ணவோ குடிக்கவோ இல்லாமல், கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்து, அவர்களை மெசியாவின் வருகைக்காகத் தயாரித்து வந்த திருமுழுக்கு யோவானைப் பரிசேயக் கூட்டம், ‘அவன் பேய் பிடித்தவன்’ என்றது.
கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு, மக்களை மெசியாவின் வருகைக்காகத் தயாரித்த திருமுழுக்கு யோவானுக்குப் பேய்பிடித்தவன் என்ற பட்டம்! இது எவ்வளவு பெரிய கொடுமை!
இயேசுவைப் ‘பெருந்தீனிக்காரன்’ என்றவர்கள்
உண்ணாமல், குடிக்காமல் இருந்த திருமுழுக்கு யோவானைத்தான் பரிசேயர்கள் பேய் பிடித்தவன் என்று சொன்னார்கள் என்றால், மக்களோடு இருந்து உண்டு, குடித்து, அவர்கள் நடுவில் இறையாட்சிப் பணியைச் செய்த இயேசுவை அவர்கள், ‘பெருன்தீனிக்காரன், குடிகாரன்… என்றெல்லாம் அழைக்கத் தொடங்கினார்கள்.
இதன் மூலம் நமக்கொரு உண்மை தெளிவாகின்றது. அது என்னவெனில், பரிசேயர்கள் அல்லது மக்கள், திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்தார்களே ஒழிய, அவர்கள் அறிவித்த நற்செய்தியைக் கேட்கவில்லை என்பதாகும். நாமும் இதே தவற்றைத்தான் செய்துகொண்டிருக்கின்றோம். ஒருவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்காமல், அவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடுவது எவ்வளவு பெரிய தவறு.
எனவே, நாம் இத்தகைய தவற்றினைச் செய்துகொண்டிருக்காமல், கடவுளின் அடியார்கள் அறிவிக்கின்ற நற்செய்தியைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவோம்.
சிந்தனை
‘மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1 சாமு 16: 7) என்பார் கடவுள். ஆகையால், நாம் கடவுளின் அடியார்களது வெளித்தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடாமல், அவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்டு, ஆண்டவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed