திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
மத்தேயு 11: 11-15
“விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது”
நிகழ்வு
சிறு வயதிலிருந்தே ஒன்றாய்ப் படித்து வந்த கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த நண்பர்கள் இருவர், அருள்பணியாளராக மாறி கடவுளுடைய வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைக்க முடிவுசெய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் குருமடத்தில் சேர்த்து, குருத்துவத்திற்கான படிப்பைப் படித்து, அருள்பணியாளர்களாக உயர்ந்து நின்றார்கள்.
இருவரும் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டபிறகு ஒருசில ஆண்டுகள் உதவிப் பங்குப்பணியாளராகப் பணியாற்றினார்கள். பின்னர் இருவரும் இருவேறு பங்குகளுக்குப் பங்குப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இருவர் பணியாற்றிய பங்குகளும் பிரச்சனை மிகுந்த பங்குகள்தான்; ஆனால், ஒருவர் பிரச்சனைகள் நடுவில் போராடிக்கொண்டே இருந்தார். இன்னொருவரோ பிரச்சனைகளைத் தவிர்த்துக்கொண்டே வந்தார். இதனால் பிரச்சனைகள் நடுவில் போராட்டிக்கொண்டே வந்த அருள்பணியாளர் வளர்ந்துகொண்டே வந்தார். பிரச்சனையைக் கண்டு அஞ்சிய அல்லது தவிர்த்து வந்த அருள்பணியாளர் வளர்ச்சியடையாமல் அப்படியே இருந்தார்.
இது குறித்து, பிரச்சனைகளைத் தவிர்த்து வந்த அருள்பணியாளர், பிரச்சனைகள் நடுவில் போராடிக்கொண்டிருந்த தன் நண்பரிடம் கேட்டபொழுது அவர், “நான் கழுகுகளோடு போராடுகின்றேன். அதனால் எனக்கு ஆகாயமே சொந்தமாகின்றது. நீயோ கோழிகளோடு சண்டையிடுகின்றாய். அதனால் உனக்கு மிகவும் கொஞ்சமே தானியம் கிடைக்கின்றது. அதுவும் கொத்தப்பட்ட பிறகு” என்றார். அப்பொழுதுதான் பிரச்சனைக் கண்டு அஞ்சி வாழ்ந்த, அவற்றை தவிர்த்து வந்த அருள்பணியாளர் தன்னுடைய தவற்றை நினைத்து மிகவும் வருந்தினார்.
ஆம், அருள்பணி வாழ்வாக இருந்தாலும் சரி, சாதாரண வாழ்வாக இருந்தாலும், பிரச்சனையே இல்லாத வாழ்வு கிடையாது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டு, எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் வரும் சவால்களையும் பிரச்சனைகளையும் துணிவோடு எதிர்கொள்கின்றாரோ அவரே வெற்றியாளராய் மிளிர்கின்றார். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “திருமுழுக்கு யோவானின் காலம் முதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தாக்குதலுக்கு உள்ளாகும் விண்ணரசு
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், “திருமுழுக்கு யோவானின் காலம் முதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது” என்கின்றார்.
திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்செய்துகொண்டிருக்கையிலேயே, ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டினார். அதனால் அவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார். இயேசு இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்கள் நடுவில் பல்வேறு வல்ல செயல்களைச் செய்கையில் அதிகார வர்க்கத்திடமிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தார். தனக்குப் பின், தனது பணியைத் தொடரும் தனது சீடர்களுக்கும், தன் பொருட்டு எதிர்ப்பும் வெறுப்பும் வரும் (மத் 10: 22) என்பதால், இயேசு விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது என்கின்றார்.
துணிவோடு இருப்போம்
விண்ணரசு வன்மையாகத் தாக்கப்பட்டாலும், அந்தத் தாக்கலுக்கு நடுவில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயேசு கற்றுத் தர மறக்கவில்லை. யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கின்றோம்: “உலகில் உங்களுக்குத் துண்டு. எனினும், துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டு விட்டேன்” (யோவா 16: 33).
இயேசு சொல்வதுபோல், இந்த உலகத்தில், இயேசுவின் வழியில் நடக்கின்றபொழுது, விண்ணரசின் விழுமியங்களின்படி நமக்குத் துன்பங்கள் வரத்தான் செய்யும். எனினும் இயேசு இவ்வுலகின்மீது வெற்றிகொண்டு விட்டார் என்ற நம்பிக்கையில் நாம் துணிவோடு இருக்கவேண்டியது இன்றியமையாததாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய பணிவாழ்வு முழுவதும் தான் தனியாய் இல்லை; தந்தைக் கடவுள் தன்னோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ்ந்து வந்தார். அதனால் அவர் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தபொழுதும் இறையாட்சிப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். நாமும் தந்தைக் கடவுள் நம்மோடு இருக்கின்றார், அதனால் நாம் தனியாக இல்லை என்ற உணர்வோடு வாழ்ந்தால், எத்தகைய சவால்களையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.
ஆகையால், விண்ணரசு கடுமையாகத் தாக்கப்பட்டாலும், நாம் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்து, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனை
‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24: 13) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய சாட்சிய வாழ்வில் சவால்களைக் கண்டு அஞ்சாமல், மனம் உடைந்து போகாமல், இறுதிவரை மன வுறுதியோடு இருந்து ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed