வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7
அக்காலத்தில்
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
மத்தேயு 10: 1-7
உபகரணங்களை நீங்கள் தாருங்கள்; வேலையை நான் செய்து முடிக்கின்றேன்
நிகழ்வு
உலக இரண்டாம்போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. அப்பொழுது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் வின்சென்ட் சர்ச்சில். இவரிடம் பலர், எதிரிகளிடமிருந்து எப்படியாவது நாட்டைக் காத்து, போரில் நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத் தாருங்கள்” என்று கேட்டபொழுது, அவர்களிடம் இவர், வீரர்களை நீங்கள் தந்தால், நாட்டிற்கு வெற்றியை நான் பெற்றுத்தருகிறேன் என்பதை உணர்த்தும் வகையில், “உபகரணங்களை நீங்கள் தாருங்கள்; வேலையை நான் செய்து முடிக்கின்றேன்” என்றார்.
ஆம், எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்க வீரர்கள் தேவை. அதுபோன்று நற்செய்தியை அறிவிக்க சீடர்கள் தேவை. இன்றைய நற்செய்தியில் இயேசு, பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். எதற்காக இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தார் என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்
ஏன் பன்னிருவர்?
இயேசு, விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கி, பல்வேறு வல்லசெயல்களையும் அருமடையாளங்களையும் செய்வதைப் பார்த்துவிட்டுப் பலரும் அவரைப் பின்தொடர்ந்தார். ஒருசிலரை இயேசு தாமாகவே அழைத்தார். இப்படித் தன்னைப் பின்தொடர்ந்த, தாமாகவே அழைத்த சீடர்களிடமிருந்து இயேசு பன்னிருவரைத் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கின்றார்.
இயேசு பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்தது, இஸ்ரயேலில் இருந்த பன்னிரு குலங்களையும் அடையாளபடுத்தவே என்று சொல்லலாம் (மத் 19: 28). இந்தப் பன்னிரு என்ற எண்ணானது அல்லது பன்னிரு திருத்தூதர்கள் என்பவர்கள் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டார்கள். எப்படியெனில், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து தற்கொலை செய்துகொண்ட பிறகு, பன்னிருவரில் ஓர் இடம் காலியாகின்றது. இந்த இடத்தை நிரப்புவதற்காகத் திருத்தூதர்கள், தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் மத்தியாவைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் (திப 1: 15-26). இவ்வாறு பன்னிரு என்ற எண்ணானது அல்லது பன்னிரு திருத்தூதர்கள் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டார்கள்.
அதிகாரம் அளிக்கும் இயேசு
இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்த உடன், அவர்களை அப்படியே பணித்தளங்களுக்கு அனுப்பிவிடவில்லை. மாறாக, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றார். எப்படிப்பட்ட அதிகாரம் எனில், தீய ஆவிகளை ஒட்டவும், நோய் நொடிகளை நலப்படுத்துவதற்குமான அதிகாரம். தீயஆவிகளும் நோய்நொடிகளும் இயேசுவின் காலத்தில் இருந்த மக்களை (இன்று உள்ள மக்களையும்) வருத்துவதாக இருந்தன. அதனால்தான் தீய ஆவிகளை விரட்டவும், நோய் நொடிகளை நலப்படுத்தவும் இயேசு சீடர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றார். இதன்மூலம் இயேசு தன் சீடர்களை ஆற்றல் நிறைந்தவர்களாக மாற்றுகின்றார்.
வழிதவறிப் போன ஆடுகளிடம் செல்லச் சொல்லும் இயேசு
இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அதிகாரம் அளித்து, “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்லவேண்டாம்… வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுகள்” என்று சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொல்வதன் மூலம், அவர் பிற இனத்தவரை ஒதுக்குகின்றாரா? என்ற கேள்வி எழலாம். இயேசு யாரையும் ஒதுக்குவதில்லை; எல்லா மக்களுக்காகவும்தான் வந்தார் என்பதை நற்செய்தியில் வருகின்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன (மத் 8: 28-34; யோவா 4). மேலும் கடவுள் எல்லாரும் மீட்புப் பெறவேண்டும் என்றே விரும்புகின்றார் என்பதையும் திருவிவிலியத்தின் பல பகுதிகள் எடுத்துக்கூறுகின்றன (தொநூ 12: 3; எசா 25: 6, 56: 3-7; மலா 1: 11; திப 10: 34-35; உரோ 3: 29-30). பின் எதற்காக இயேசு தன்னுடைய சீடர்களிடம், “…இஸ்ரயேல் மக்களிடமே சல்லுங்கள்?” என்று சொன்னார் என்று நமக்குத் தோன்றலாம்.
இயேசு பன்னிருவரிடமும் இப்படிச் சொன்னதற்கு முக்கியமான காரணம், இது குறுகிய காலத்தில் செய்யப்பட வேண்டிய நற்செய்திப் பணி என்பதால்தான். இதைப் புனித பவுல், “முதலில் யூதருக்கு…” (உரோ 1: 16) என்று கூறுவார். ஆம். காலம் குறுகியது என்பதால், முதலில் யூதருக்கு நற்செய்தி அறிவிக்கச் சொல்கின்றார் இயேசு. ஆனால், எல்லாருக்கும் நற்செய்தி அறிவிப்பது நீண்ட காலப்பணி என்பதால், அவர் தான் விண்ணேற்றம் அடைகின்றபொழுது, தன்னுடைய சீடர்களிடம், “எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28: 19) என்கின்றார்.
ஆகையால், காலத்தைக் கணக்கிட்டே இயேசு இப்படிச் சொன்னார் என்பதை நாம் புரிந்துகொண்டு, அவருடைய பணியை நாமும் செய்வதற்கு முன்வருவோம். எல்லாரும் அவருடைய நற்செய்தியை அறிய நாம் ஒரு கருவியாய் இருந்து செயல்படுவோம்.
சிந்தனை
‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்’ (யோவா 15: 16) என்பார் இயேசு. ஆகவே, நாம் கனிதரவும், அவருடைய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கவும் தேர்ந்தெடுத்திருக்கும் இயேசுவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, அவருடைய நற்செய்திப் பணியைச் சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed